news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையை நோக்கிவரும் 7 தாழமுக்கங்கள!! வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசர வெள்ள எச்சரிக்கை!

14 Oct, 2026
2026 ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழைக் காலம் வழமையை விட மிகத் தீவிரமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

பசுபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் வளிமண்டல மாற்றங்கள் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் அசாதாரண சுழற்சிகள் காரணமாக,  ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் 7 தாழமுக்கங்கள் அல்லது சூறாவளிகள் உருவாக வாய்ப்புள்ளது. 

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான  மழையும், பாரிய வெள்ள அபாயமும் ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்படுகின்றது. நீண்டகால பருவகால முன்னறிவிப்பின்படி, வரவிருக்கும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் முக்கிய காலகட்டங்களும் அவற்றின் தாக்கங்களும் பின்வருமாறு கணிக்கப்பட்டுள்ளன:

ஒக்டோபர் 13 – 21 வரையான காலப்பகுதியில் கிழக்கு திசைக் காற்று தீவிரமடைவதால் வட மாகாணத்திலும்,  கிழக்கு மாகாணத்திலும் கடும்மழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து, ஒக்டோபர் 23 – 30 வரையான காலகட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் அதிதீவிர மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.

நவம்பர் மாதமே மழையுடன்தான் ஆரம்பிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3 – 6 வரையான நாட்களில் வங்காள விரிகுடாவில் புதிய தாழ்வு மண்டலம் ஒன்று உருவாவதால் நாடு முழுவதும் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யும். 

இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர்
10 – 17 வரையான காலகட்டமே இந்த பருவமழைக்காலத்தின் மிகவும் ஆபத்தான மற்றும் முக்கியமான காலப்பகுதியாகும். இலங்கைக்கு மிக அருகில் நகரும் தீவிர தாழமுக்கம் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கின் அனைத்து தாழ்நிலப் பகுதிகளிலும் பாரிய வெள்ள அபாயம் ஏற்படக்கூடும்.

 மேலும், நவம்பர்
20 – 23 வரையான நாட்களில் வங்கக்கடலில் புதிய சுழற்காற்று அல்லது சூறாவளி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாக நவம்பர் 26ஆம் திகதியை அண்மித்ததாக பெய்யும் தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்து, 

குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான வெள்ளம் நிரம்பி வழியும் ஆபத்துக் காணப்படுகின்றது.   இலங்கைக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து தாழமுக்கங்களும் வங்காள விரிகுடாவிலேயே உருவாகும் என்பதால், கிழக்கு மற்றும் வடக்குக் கடற் பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

அதேவேளை, அரபிக்கடலில் உருவாகும் மாற்றங்களால் இலங்கைக்கு நேரடி மழைத் தாக்கம் இல்லை என்றாலும், தீவுப்பகுதி ஊடாக வீசும் தரைக்காற்றின் வேகம் கணிசமாக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய கடும் மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் சில அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். 

முதலாவதாக, தினசரி வெளியாகும் உத்தியோகபூர்வ வானிலை அறிக்கைகளை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும். தாழ்நிலங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ள அபாயம் ஏற்படும் பட்சத்தில், முன்கூட்டியே தங்களின் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆவணங்களுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது திறந்த வெளிகளில் இருப்பதைத் தவிர்ப்பதுடன், மின்சாதனப் பயன்பாட்டைக் குறைத்து மின்னல் விபத்துகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் அவசர கால இடர் மீட்புத் தேவைகளுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 117 என்ற அவசர உதவி இலக்கத்தை எந்நேரமும் தொடர்பு கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் வேளைகளில் பாதுகாப்பாக வெளியேறும் பாதைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும், 

முதலுதவிப் பொருள்கள், உலருணவுகளை   கொண்டு செல்லும் வகையில் ஆயத்தம் செய்திருக்க வேண்டும். அவசர வைத்தியசாலை, பொலிஸ் நிலையம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இலக்கங்கள் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான அறிவினை வழங்க வேண்டும். இவ்வாறான முன்னெச்சரிக்கைகளின் வழியாக எம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம். 

இவை நீண்டகால வானிலை மாதிரிகளின் அடிப்படையிலான பருவகால முன்னறிவிப்புகள் என்பதால், வளிமண்டல மாற்றங்களுக்கு ஏற்ப இவற்றின் திகதிகள் அல்லது சூறாவளி நகரும் பாதைகள் மாறக்கூடும். எனவே, பொதுமக்கள் உத்தியோகபூர்வமான அதிகாரபூர்வ வானிலை அறிவிப்புகளை தொடர்ச்சியாக கவனிக்க வேண்டும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!