news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இளைஞனின் துயரத்தில் அரசி­யலும் மத­வா­த­மும்

07 Oct, 2026
இஸ்லாம் மதத்துக்கு எதிரான இறை நிந்தனை கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்தமைக்காக சவூதி அரேபியா நாட்டின் சட்டத்தின் படி மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞர் அனோஜனின் உயிரை காப்பாற்றுவதற்கு பல தரப்பிலிருந்தும் மனிதாபிமான மற்றும் சட்டப்போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இராஜதந்திர நகர்வொன்றை மேற்கொண்டுள்ளது. 

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் கூட அவருக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதோடு தமது ஆதரவான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். மனிதர்களை தண்டிப்பதோ அல்லது கலவரங்களை மூட்டி விடும் ஒரு மார்க்கமல்ல போன்ற கருத்துகளை பலரும் கூறி வருகின்றனர்.

இஸ்லாத்தை பின்பற்றும் அதே வேளை பெரும்பான்மை முஸ்லிம் இனத்தவர்களை  கொண்ட நாடுகளில் சட்டங்கள் கடுமையானதாகவே இருக்கும் என்பது புதிய விடயமல்ல.  சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் , கட்டார். பஹ்ரேன், குவைத் , ஓமன், ஏமன், ஈராக் , ஜோர்டான், சிரியா, உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை அமுலில் உள்ளது. அதுவும் இறை நிந்தனைக்கு கட்டாயம் மரண தண்டனையே தீர்ப்பு.  

 சிவராசா அனோ


கல்முனையைச் சேர்ந்த 26 வயதான சிவராசா அனோஜனுக்கு    ஷரியா சட்டத்தின் கீழ் அவரது ஆரம்ப இணையக் குற்றத் தண்டனையை மேம் படுத்துமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்   மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்தே  சவூதி மேல் முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனையை அமுல்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது.

இஸ்லாத்தையும், முஹம்மது  நபியையும் இழிவு படுத்துவதாகக் கருதப்பட்ட ஒரு முகநூல் கருத்துக்காக,  அவர்  ஜூலை 2ஆம் திகதி  அன்று கைது செய்யப்பட்டார். ஜூலை 15 அன்று, அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம், சவூதி அரேபியாவின் இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை ஆரம்பத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததோடு , ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான 3 மில்லியன் சவூதி றியால் அபராதமும் விதித்தமை குறிப்பிடத்தக்கது.

தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், சவூதி அரசுத் தரப்பு, இக்குற்றம் இறை நிந்தனைக்கான கடுமையான ஷரியா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரத் தகுதியானது என்று வாதிட்டு ஓர் இணை மேல்முறையீட்டைத் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம், ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை இரத்து செய்து, மரண தண்டனை விதித்ததாகக் கூறப்படுகிறது.

சவூதி அரேபிய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழாவது இலங்கையர் அனோஜன் ஆவார். இதற்கு முன்பதாக இலங்கையர்கள் பலருக்கு அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாயினும் அனோஜனின் மீது சுமத்தப்பட்ட குற்றம் அவற்றில் வேறுபட்டதாகும்.

  2005-ஆம் ஆண்டு  பங்களாதேஷ் பிரஜை ஒருவரை  வழிப்பறி செய்த குற்றத்துக்காக  ரஞ்சித் டி சில்வா, விக்டர் கொரியா, சனத் புஷ்பகுமாரா மற்றும் சர்மில சங்கீத் குமார ஆகிய நான்கு இலங்கை இளைஞர்கள் 2007-ஆம் ஆண்டில் அந்நாட்டு சட்டத்தின் படி  தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார்கள்.

ரிஷானா நஃபீக்



இரண்டாவது சம்பவம்    உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம்.  2005-ஆம் ஆண்டில் தனது பராமரிப்பில் இருந்த ஒரு குழந்தையைக் கொன்றதாக  திருகோணமலை மூதுரைச் சேர்ந்த  ரிஷானா நஃபீக் என்ற இலங்கைப் பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

நான்கு மாதக் குழந்தையை   கொலை செய்த குற்றத்திற்காக 2007-ஆம் ஆண்டில் ரிஷானா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ஜனவரி 2013-இல் அவர் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசாங்கமும் சவூதி மன்னரிடம் கருணை காட்டுமாறு எட்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதற்குப் பலனில்லாமல் போனது. தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தன. காரணம் ரிஷானாவின் உண்மை வயதை மறைத்து அவர் முகவர் ஊடாக பணிக்கு அனுப்பப்பட்டிருந்தார். ஒரு குழந்தையை பராமரிக்கும் அளவுக்கு அவர் பக்குவப்பட்டிருக்கவில்லையென்பது அனைவரினதும் வாதமாக இருந்தது.

மூன்றாவது சம்பவம்,  பாலியல் குற்றத்துடன் தொடர்புடையது. றியாத்தில் வீட்டுப் பணிப் பெண்ணாகவிருந்த  திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தாயான (45)  ஒரு இலங்கைப் பெண்ணை   2015- ஆம் ஆண்டு அல்-துவாட்மி நீதி மன்றம் பாலியல்   குற்றவாளியாக இனங்கண்டது.  மரண தண்டனையும் விதித்தது. 

 இலங்கையின் இராஜதந்திரத் தலையீடுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 2015இ-ல், அவர் மீது கருணை காட்டுமாறு சவூதியிடம் இலங்கை  விடுத்த கோரிக்கைகளை ஏற்று, சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய முடிவு செய்தது.    பின்னர், மரணதண்டனை தீர்ப்பு இரத்து செய்யப்பட்டு   அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அனோஜனின் விவகாரம்  நான்காவது சம்பவமாகும்.   நான்கு வழக்குகளும் நான்கு வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்ததை இங்கு அவதானிக்க வேண்டும்.   நான்கு இளைஞர்கள் மீதும் கொள்ளைக் குற்றமும், ரிஷானா மீது கொலைக் குற்றமும் சுமத்தப்பட்டது.   அடையாளம் வெளியிடப்படாத 45 வயதுப் பெண்ணுக்கு பாலியல்  குற்றத்திற்காகத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.   அனோஜனுக்கு இறைநிந்தனைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அனோஜனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை இன்றைய காலங்களில் சமூக ஊடகங்களைத் தவறாகக் கையாள்பவர்களுக்கு சிறந்த உதாரணமாக உள்ளது.   இச்சம்பவத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளைப் பற்றி புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. ஆனால், அதற்குப்பிறகு சமூக ஊடகங்களில் இது தமிழ் –முஸ்லிம் இனங்களுக்கிடையிலான மத ரீதியான வார்த்தைப் போராக உருவெடுத்தது.

  இழிவான பதிவுகளின் பரிமாற்றத்தை யார் தொடங்கினார்கள்  என்பதைக் கண்டறிவது கடினமாக இருந்தாலும், இறுதியில் அதன் மிக மோசமான விளைவுகளைச் சந்தித்தவர் அனோஜன் என்ற இளைஞர் தான். இப்போது இந்த இளைஞனின் விடுதலைக்காக மனிதாபிமான ரீதியில் முயற்சிகளை முன்னெடுத்திருக்கும் குழுக்கள், தனி மனிதர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அனோஜன் மற்றும் அவரது குடும்பத்தின் துயரங்களில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளில் சிலர் ஈடுபட ஆரம்பித்துள்ளார்களா என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

 சிலரின்  கருத்துகளை அவதானிக்கும் போது அனோஜன் விடுதலை செய்யப்பட்டாலோ அல்லது அவரது தண்டனை குறைக்கப்பட்டாலோ தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்திக்கொள்ள  காய்களை நகர்த்துவது விளங்குகின்றது. 

அனோஜனுக்கு நிச்சயமாக மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்ற ரீதியிலும் சமூக ஊடகங்களில் சில முகமில்லாத மனிதர்கள், மதவாத கருத்துகளை பதிவேற்றி வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது. 

தமிழ்–முஸ்லிம் இனத்தவர்களுக்கிடையில்  முரண்களை உருவாக்க சிலர் போலி கணக்குகள் மூலம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருப்பது குறித்து பலரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது ,இனங்களிடையே  நல்லிணக்கம், சமாதானம் ,அமைதி என்பதே மதங்களின் முதன்மை நோக்கமாக இருக்கும் போது  அதற்கெதிராக மனிதர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த அது பயன்படுத்தப்படுவதை சமாதானம் அமைதியை விரும்பும் அனைவரும் அறிந்து கொள்ளல் அவசியம்.  

 இதேவேளை, இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக சவூதி அரேபியாவுக்கு சென்ற பெண்கள் அங்கு வீட்டு உரிமையாளர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அதற்கு அங்கு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்பு இலங்கையிலுள்ள கொலையான பெண்களின் குடும்பங்கள் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியமை தொடர்பிலும் தற்போது பேசப்பட்டு வருகின்றது. அவ்வாறு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களும் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

 இப்படியும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை வெளிப்படுத்தி இலங்கை தமிழ்க் குடும்பங்கள் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்தும் அதற்குக் காரணமானவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை தண்டனைகளிலிருந்து காப்பாற்றியது போன்று ஏன் அனோஜனுக்கு சவூதி அரசாங்கம் மன்னிப்பு வழங்கக் கூடாது என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்துமே ஏதாவதொரு வழியில் அனோஜனுக்கான தண்டனையை குறைத்தல் அல்லது முழுமையாக அவருக்கு பொது மன்னிப்பு கிடைக்கச்செய்தல் என்பவற்றை முன் வைத்து முன்னெடுக்கப்படும் முயற்சிகளாகும்.

ஆனால், இதற்கும் கூட சில போலி முகநூல் பயனாளர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.   மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனை சவூதி அரேபியாவிலிருந்து மீட்பதற்காக இராஜதந்திர ரீதியாக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் நளிந்த ஊட   கங்களுக்கு தெரிவித்திருந்தார். 

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பங்களுடனான கடிதங்கள் மற்றும் ஜனாதிபதியின் கோரிக்கை கடிதமும் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  இவை நம்பிக்கையளிப்பதாக உள்ளன.   ஆனால்,  சமூக ஊடகங்களில் மத ரீதியாக வெறுப்பூட்டும் கருத்துகளை வெளிப்படுத்தி வரு வதானது  சவூதி அரேபிய சிறையில் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் அனோஜனை காப்பாற்றும் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளாகும். இதை பொறுப்புள்ள சமூக ஊடக பயனாளர்களும் சில அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ளல்   வேண்டும்.


-சிவலிங்கம் சிவகுமாரன்-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!