news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

27 Oct, 2026
நாளை மறுதினம் செவ்­வாய்க்­கி­ழமை (27) இஸ்­ரே­லிய மக்கள் புதிய பாரா­ளு­மன்­றத்தைத் தெரிவு செய்­வ­தற்­காக வாக்­க­ளிக்­கி­றார்கள். இந்­நாட்டின் அர­சியல் வர­லாற்றில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த தேர்­தல்­களில் ஒன்­றாக இது கரு­தப்­ப­டு­கி­றது.

இந்தத் தேர்­தலை ஒட்­டு­மொத்த உல­கமும் உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது. இஸ்­ரே­லிய வாக்­கா­ளர்கள் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­ஹுவை நிரா­க­ரித்­து­விட்டால், காஸா­விலும் லெப­னா­னிலும் இஸ்ரேல் முன்­னெ­டுக்கும் யுத்தம் முடி­வுக்கு வரலாம், ஈரா­னுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­ப­டலாம் எனப் பலர் எதிர்­பார்க்­கக்­கூடும்.

இஸ்­ரேலின் தேர்தல் களத்தை ஆராய்ந்தால், ஆட்­சி­பீ­டத்தில் தலைகள் மாறு­வதால் அந்­நாட்டின் பய­ணப்­பாதை மாறி­விடும் என எதிர்­பார்ப்­பது யதார்த்­தத்­திற்கு அப்­பாற்­பட்­டது என்ற கசப்­பான உண்­மையை உண­ரக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

இந்தத் தேர்தல் ஏன் முக்­கி­ய­மா­னது?

இஸ்­ரேலைத் தாண்­டிய பூகோள அர­சி­யலைப் பார்த்தால், இந்தத் தேர்தல் முக்­கி­யத்­துவம் பெறு­வ­தற்குப் பல கார­ணங்கள் இருக்­கின்­றன. 2023 ஒக்­டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலைத் தொடர்ந்து நடை­பெறும் தேர்தல் என்­பது அவற்றில் முக்­கி­ய­மா­னது. பிராந்­திய யுத்­தங்­களின் எதிர்­கா­லத்தைத் தீர்­மா­னிப்­பதில் இந்தத் தேர்­தலின் பெறு­பே­று­களும் தாக்கம் செலுத்­தக்­கூடும்.

தேர்தல் முடி­வுகள் மேற்கு ஆசி­யாவின் எதிர்­கா­லத்தின் மீது தாக்கம் செலுத்­தக்­கூடும். உல­க­ளா­விய ரீதியில் எரி­பொருள் விலைகள், சர்­வ­தேச வர்த்­தகம், பிராந்­திய ஸ்திரத்­தன்மை ஆகி­ய­வற்றின் மீதும் அவை செல்­வாக்குச் செலுத்­தலாம். இஸ்­ரேலின் கொள்­கைகள் இரா­ஜ­தந்­தி­ரத்தை நோக்கி நகர்­வ­தற்­கான வாய்ப்பு உரு­வா­கலாம் எனவும் உலகத் தலை­வர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்.

ஆனால், இந்த நம்­பிக்கை யதார்த்­தத்தின் அடிப்­ப­டையில் பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. தமது பகை­யா­ளி­களின் இரா­ணுவ வலி­மையைச் சிதைத்து, பிராந்­தி­யத்தில் தனது வல்­லா­திக்­கத்தை நிலை­நாட்­டுதல் இஸ்­ரேலின் மூலோ­பாய இலக்­கு­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன எனில், அவை பெஞ்­சமின் நெதன்­யா­ஹுவின் இலக்­குகள் மாத்­தி­ர­மல்ல. இஸ்­ரேலின் முக்­கிய அர­சியல் கட்­சி­களின் மத்­தி­யிலும் இதே­போன்ற அணு­கு­மு­றைகள் காணப்­ப­டு­கின்­றன.



இஸ்­ரே­லியத் தேர்தல் எவ்­வாறு நடை­பெறும்?

இஸ்­ரேலில் விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவத் தேர்தல் முறையின் கீழ் பாரா­ளு­மன்­றத்­திற்கு 120 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள். மக்கள் பிர­த­மரை நேர­டி­யாகத் தெரிவு செய்­வ­தில்லை; அர­சியல் கட்­சி­களின் வேட்­பாளர் பட்­டி­யல்­க­ளுக்கே வாக்­க­ளிக்­கி­றார்கள். எந்­த­வொரு கட்­சிக்கும் தனித்துப் பெரும்­பான்மை கிடைப்­பது அரிது. எனவே, கட்­சிகள் கூட்­டணி அமைத்து ஆட்சி செய்­வது தவிர்க்க முடி­யாத அர­சியல் யதார்த்­த­மாக உள்­ளது.

அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­காக முன்­னணி அர­சியல் கட்­சிகள், சிறிய கட்­சி­க­ளு­டனும், தீவிர வல­து­சாரிக் கட்­சி­க­ளு­டனும், தேசி­ய­வாதக் கட்­சி­க­ளு­டனும் பேரம் பேச வேண்­டி­யி­ருக்­கி­றது. மித­வாதக் கொள்­கை­களைக் கொண்ட ஒரு கட்­சிக்கு அதிக வாக்­குகள் கிடைத்­தாலும், ஆட்­சி­ய­மைப்­ப­தற்­காகத் தீவிர வல­து­சாரிக் கட்­சி­க­ளுடன் சம­ரசம் செய்ய வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம்.

எனவே, எந்தக் கட்சி தலை­மையில் கூட்­டணி ஆட்சி அமைந்­தாலும், அதன் கொள்­கை­களைத் தீர்­மா­னிப்­பதில் கூட்­டணிக் கட்­சி­களின் செல்­வாக்கும் முக்­கிய பங்கு வகிக்கும்.

பிர­தான அர­சியல் போட்­டி­யா­ளர்கள் யார்?

இஸ்­ரேலின் தேர்தல் முறையின் கீழ் மக்கள் அர­சியல் கட்­சி­க­ளுக்கே வாக்­க­ளிக்­கி­றார்கள். எனவே, இது இரு வேட்­பா­ளர்­க­ளுக்கு இடை­யி­லான நேரடிப் போட்டி அல்ல. பல அர­சியல் கட்­சி­களும் அணி­களும் தேர்தல் களத்தில் போட்­டி­யி­டு­கின்­றன.

லிக்குட் கட்­சியின் தலைவர் பெஞ்­சமின் நெதன்­யாஹு, இஸ்­ரேலின் நீண்­ட­காலப் பிர­த­ம­ராக இருப்­பவர். இஸ்­ரேலின் பாது­காப்பை உறுதி செய்­யக்­கூ­டிய தலைவர் தாமே என்ற பிம்­பத்தை உரு­வாக்­கிக்­கொண்டு அவர் பிர­சாரம் செய்­கிறார். மேற்குக் கரையில் இஸ்­ரே­லியக் கட்­டுப்­பாட்டை விரி­வு­ப­டுத்த வேண்டும் என்றும், பலஸ்­தீன இராஜ்­ஜி­யத்தை எதிர்க்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்தும் தீவிர வல­து­சாரிக் கட்­சிகள் அவ­ரது அர­சியல் கூட்­ட­ணியில் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.

மறு­பு­றத்தில், முன்னாள் இரா­ணுவத் தள­பதி காடி எயி­சென்கொட் உள்­ளிட்ட எதிர்க்­கட்சித் தலை­வர்கள் நெதன்­யா­ஹு­வுக்கு மாற்­றாகத் தங்­களை முன்­னி­றுத்­து­கின்­றனர். காஸா யுத்­தத்தில் தனது மகனை இழந்த எயி­சென்கொட், நெதன்­யா­ஹுவின் அவ­ச­ர­கால யுத்த அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து 2024ஆம் ஆண்டு வில­கினார். யுத்­தத்தை முன்­னெ­டுக்கும் விதம் உள்­ளிட்ட விட­யங்­களில் ஏற்­பட்ட கருத்து முரண்­பா­டுகள் அவ­ரது வில­க­லுக்குக் கார­ண­மாக அமைந்­தன.

மேலைத்­தேய ஊட­கங்கள் எயி­சென்­கொட்டை மித­வாத மாற்றுத் தலை­வ­ராகச் சித்­த­ரிக்க முற்­ப­டு­கின்­றன. ஆனால், தேசிய பாது­காப்பு தொடர்­பான அவ­ரது நிலைப்­பா­டு­க­ளையும் ஆராய வேண்­டி­யுள்­ளது. ஈரானை எதிர்­கொள்­வது, ஹமாஸின் இரா­ணுவ வலி­மையை ஒழிப்­பது போன்ற விட­யங்­களில் அவ­ருக்கும் நெதன்­யா­ஹு­வுக்கும் இடையில் ஒற்­று­மைகள் காணப்­ப­டு­கின்­றன. அதே­வேளை, யுத்­தத்தை எவ்­வாறு கையாள்­வது, இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளுக்கும் இரா­ஜ­தந்­தி­ரத்­திற்கும் இடையில் எவ்­வாறு சம­நி­லையை ஏற்­ப­டுத்­து­வது என்­பதில் வேறு­பா­டுகள் இருக்­கலாம்.

தேர்தல் களத்தில் செல்­வாக்குச் செலுத்­தக்­கூ­டிய விட­யங்கள் எவை?

உலக மக்­க­ளுக்குத் தேவை சமா­தா­ன­மாக இருக்­கலாம். ஆனால், இஸ்­ரேலின் தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்­து­வது சமா­தானம் என்ற தொனிப்­பொருள் மாத்­தி­ர­மல்ல. இஸ்­ரேலை இரா­ணுவ ரீதியில் எவ்­வாறு பலம் பொருந்­திய நாடாக மாற்­று­வது, எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய பாது­காப்புச் சவால்­களை எவ்­வாறு சமா­ளிப்­பது போன்ற விட­யங்­களும் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

போர் மூலோ­பாயம் தொடர்­பாகக் கூடு­த­லான கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது. பிர­தான அர­சியல் நீரோட்­டத்தில் உள்ள பல கட்­சி­களின் விவா­தங்கள், போர் வேண்­டுமா வேண்­டாமா என்ற கேள்­வியைத் தாண்டி, இஸ்­ரேலின் இரா­ணுவ இலக்­கு­களை எவ்­வாறு அடை­வது என்­பதில் கவனம் செலுத்­து­கின்­றன. எனினும், போரை முன்­னெ­டுக்கும் விதம், அதன் கால அளவு மற்றும் இரா­ஜ­தந்­தி­ரத்­திற்­கான வாய்ப்­புகள் தொடர்­பாக அவற்­றுக்­கி­டையில் வேறு­பா­டுகள் இருக்­கலாம்.

நெதன்­யா­ஹு­வுக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் விசா­ரிக்­கப்­படும் ஊழல் வழக்­குகள், நீதித்­துறை மறு­சீ­ர­மைப்பு, வாழ்க்கைச் செலவு, குடி­யி­ருப்­பு­களின் விலை­யேற்றம் ஆகி­ய­வையும் தேர்தல் விவா­தங்­களில் இடம்­பெ­று­கின்­றன.

சர்­வ­தேசக் கண்­ணோட்­டத்தில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த மற்­றொரு விடயம் இஸ்­ரே­லி­ய–­ப­லஸ்­தீன நெருக்­க­டி­யாகும். இந்த நெருக்­க­டிக்குத் தீர்வு காண வேண்­டு­மென சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்­து­கி­றது. சுதந்­தி­ர­மான பலஸ்­தீன இராஜ்­ஜி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கு வழி­வ­குக்கும் இரு தேசத் தீர்­வையே பல உலக நாடு­களும் சர்­வ­தேச அமைப்­பு­களும் ஆத­ரிக்­கின்­றன.

ஆனால், இஸ்­ரேலின் முக்­கிய யூத சியோ­னிசக் கட்­சி­களின் மத்­தியில் பலஸ்­தீன இராஜ்­ஜி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான ஆத­ரவு மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­றது. சில கட்­சிகள் அத்­த­கைய இராஜ்­ஜி­யத்தை வெளிப்­ப­டை­யாக எதிர்க்­கின்­றன. எனவே, நெதன்­யா­ஹுவின் தோல்வி மாத்­திரம் பலஸ்­தீன இராஜ்­ஜி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­விடும் எனக் கருத முடி­யாது.


தேர்தல் பெறு­பே­றுகள் இஸ்­ரேலின் எதிர்­கால செல்­நெ­றியை மாற்­றுமா?

இந்தக் கேள்­விக்கு நேர­டி­யாகப் பதில் சொல்ல வேண்­டு­மாயின், தலை­மைத்­துவ மாற்றம் மாத்­திரம் இஸ்­ரேலின் பய­ணப்­பாதையை அடிப்­ப­டையில் மாற்­றி­விடும் என எதிர்­பார்ப்­ப­தற்குப் போதிய கார­ணங்கள் இல்லை என்றே கூற வேண்­டி­யுள்­ளது.

நெதன்­யா­ஹு­வுக்கும் அவ­ரது போட்­டி­யா­ளர்­க­ளுக்கும் இடையில் வேறு­பா­டுகள் இருக்­கின்­றன. ஆனால், அந்த வேறு­பா­டுகள் பிரச்­சி­னை­களைக் கையாளும் விதத்தில் உள்­ள­னவா அல்­லது அடிப்­படைக் கொள்­கை­க­ளி­லேயே உள்­ள­னவா என்­பதைப் புரிந்­து­கொள்ள வேண்டும். இஸ்­ரேலின் பய­ணப்­பா­தையில் எவ்­வ­ளவு தூரம் செல்ல வேண்டும் என்­பதில் உள்ள வேறு­பா­டுகள், பய­ணப்­பாதை எது­வாக இருக்க வேண்டும் என்­பதில் உள்ள வேறு­பா­டு­க­ளுக்குச் சம­மா­னவை அல்ல.

இஸ்­ரேலின் பாது­காப்புக் கோட்­பாட்டை மூன்று முக்­கிய அம்­சங்­களில் புரிந்­து­கொள்­ளலாம்.

முத­லா­வ­தாக, ஈரானை எதிர்­கொள்­வது. ஈரானின் இரா­ணுவ வலி­மையும் பிராந்­தியச் செல்­வாக்கும் இஸ்­ரேலின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. இந்த அச்­சு­றுத்­தல்­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைப்­பாடு இஸ்­ரேலின் முக்­கிய அர­சியல் கட்­சி­களின் மத்­தி­யிலும் காணப்­ப­டு­கி­றது.

இரண்­டா­வ­தாக, இடைத்­தாங்கல் வல­யங்­களை (Buffer Zones) விரி­வு­ப­டுத்­து­வதும் எல்லைப் பகு­தி­களில் இரா­ணுவக் கட்­டுப்­பாட்டைப் பேணு­வ­து­மாகும். காஸா, மேற்குக் கரை, தென் லெபனான் போன்ற பகு­தி­களில் இஸ்­ரேலின் இரா­ணுவக் கட்­டுப்­பாடு தொடர்­பான கொள்­கைகள் இத­னுடன் தொடர்­பு­ப­டு­கின்­றன.

மூன்­றா­வ­தாக, இரா­ணுவ வலி­மையைத் தீர்­மா­ன­க­ர­மாகப் பயன்­ப­டுத்­துதல். எதிர்­கால அச்­சு­றுத்­தல்­களைத் தடுப்­ப­தற்கும் எதி­ரி­களின் இரா­ணுவ வலி­மையைச் சிதைப்­ப­தற்கும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வது இஸ்­ரேலின் பாது­காப்பு அணு­கு­மு­றையின் முக்­கிய அம்­ச­மாக உள்­ளது.

இந்தப் பின்­ன­ணியில், தேர்­தலில் நெதன்­யாஹு வெற்றி பெற்றால் என்ன, எயி­சென்கொட் உள்­ளிட்ட எதிர்க்­கட்சித் தலை­வர்கள் ஆட்­சிக்கு வந்தால் என்ன என்ற கேள்வி எழு­கி­றது. மேற்குக் கரையில் குடி­யி­ருப்­பு­களை விரி­வு­ப­டுத்தும் கொள்கை தொட­ருமா, பலஸ்­தீன இராஜ்­ஜி­யத்தை உரு­வாக்கும் முயற்­சிகள் முன்­னேற்றம் காணுமா, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் எந்தத் திசையில் நகரும் என்பவை புதிய அரசாங்கத்தின் கூட்டணிக் கணக்கீடுகளையும் கொள்கைகளையும் பொறுத்தே அமையும்.

எனவே, தேர்தல் முடிவுகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனக் கூறுவதும் சரியானதல்ல. ஆனால், தலைமைத்துவ மாற்றம் மாத்திரம் அடிப்படையான கொள்கை மாற்றத்திற்கு உத்தரவாதமளிக்காது.

முடிவு

தேர்தல் மூலம் தலைவர்கள் மாறலாம். ஆனால், நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதுகாப்புக் கோட்பாடுகளும் அரசியல் அணுகுமுறைகளும் ஒரே நாளில் மாறிவிடுவதில்லை.

காஸாவிலும் மேற்குக் கரையிலும், பரந்த மத்திய கிழக்கிலும் வாழும் மக்களைப் பொறுத்தவரையில், இஸ்ரேலின் தலைமை த்துவ மாற்றத்தைவிட முக்கியமானது புதிய

அரசாங்கம் போரை முன்னெடுக்கும் விதத்தில்

மாற்றங்களை ஏற்படுத்துகிறதா, இராஜதந்தி ரத்திற்கு இடமளிக்கிறதா, பலஸ்தீன மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறதா என்பதாகும்.

தலைமைத்துவ மாற்றம் ஒரு தொடக்கமாக இருக்கலாம். ஆனால், சமாதானத்தைச் சாத்தியப்படுத்துவதற்கு அதனைத் தாண்டிய அரசியல் விருப்பமும் கொள்கை மாற்றங்களும் அவசியம்.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!