news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இஸ்ரேலில் பொதுத் தேர்தல் : நெதன்யாகு, ஐசன்கோட் - இருவரில் யார் முன்னிலையில்?

28 Oct, 2026
இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நேற்று  செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது பிந்தைய  கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அவற்றின் அடிப்படையில், தற்போதைய நிலைவரப்படி, வெற்றியாளர் எவரும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இம்முறை தேர்தல் களத்தின் கடும் போட்டியாளர்களான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் ஆகிய இருவருமே தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெறவில்லை என்றே சுட்டிக்காட்டப்படுகிறது. 

இரண்டு இஸ்ரேலிய ஒளிபரப்பு நிறுவனங்களின் கணிப்புப்படி, ஐசன்கோட்டின் 'யாஷார்' கட்சியும் அவரது "மாற்றுக் கூட்டணி"யில்  உள்ள பிற மூன்று யூத எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் (Knesset) 51 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சியும் அதன் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதக் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 51 இடங்களைப் பெறும் என கூறப்படுகிறது. 

மேலும், ஓர் ஒளிபரப்பு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு நெதன்யாகுவுக்கு மூன்று இடங்கள் கூடுதலாக முன்னிலை அளித்துள்ளது.

அத்துடன் நெதன்யாகு, ஐசன்கோட் ஆகியோர் தலா 50, 52 இடங்களை மட்டுமே பெறவும் வாய்ப்புள்ளதாக மற்றுமொரு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்காளர் பதிவு மிக அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு, அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று இரவோடு இரவாக வெளியாகத் தொடங்கும். இருப்பினும், பெரும்பாலும் இராணுவ வீரர்களால் செலுத்தப்பட்ட சுமார் 600,000 தபால் வாக்குகள் (மொத்த வாக்குகளில் சுமார் 10%) வியாழக்கிழமை வரை முழுமையாக எண்ணி முடிக்கப்படாது.

இறுதி முடிவுகள் உறுதி செய்யப்பட்டவுடன், அனைத்து அரசியல் பிரிவுகளுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, இஸ்ரேல் ஜனாதிபதி எந்தக் கட்சித் தலைவருக்கு ஆட்சி அமைப்பதற்கான சிறந்த வாய்ப்பு இருப்பதாக நம்புகிறாரோ, அவரை ஆட்சி அமைக்க அழைப்பார். இந்த செயல்முறைக்கு பல வாரங்கள் ஆகலாம்.  அவர்களால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், இறுதியில் மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!