மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மூண்ட போர், உலகளாவிய புவிசார் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையிலும், பெப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் மீது தீவிரத் தாக்குதல்களைத் தொடங்கின.
இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடாப் பிராந்தியம் முழுவதும் பரவலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
உலகின் மிக முக்கியமான எரிசக்திப் போக்குவரத்து வழியான ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள், கடலடி கண்ணிவெடிகள் மற்றும் ட்ரோன்கள் குறித்த அச்சம், ஈரானின் போக்குவரத்துத் தடைகள் மற்றும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை ஆகிய அனைத்தும் இணைந்து உலகளாவிய கப்பல் போக்குவரத்தை முடக்கின. செப்டம்பர் மாத பிற்பகுதியிலும் கூட இந்த நீரிணை வழியிலான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
இந்தத் தீவிரமான போரின் பின்னணியில், ஜப்பான் தனது தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, எதிர்காலத்தில் தாய்வான் பிராந்தியத்தில் ஏதேனும் போர் அல்லது நெருக்கடி நிலை ஏற்பட்டால், அதை ஜப்பான் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக இந்த ஈரான் போர் அமைந்துள்ளது.
ஈரான் போர் பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருந்தாலும், ஜப்பானைப் பொறுத்தவரை இரண்டு சவால்கள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

முதலாவது, எதிர்பாராத நேரத்தில் போர் வெடிக்கும்போது, பொதுமக்கள் போக்குவரத்து வலையமைப்புகள் முடங்கும் சூழலில், வெளிநாடுகளில் உள்ள ஜப்பானிய குடிமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பது.
ரண்டாவது, போரில் நேரடியாகப் பங்கேற்காமல் அல்லது ஒரு தரப்பாக மாறாமல், கடல்சார் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை ஜப்பான் எவ்வாறு உறுதி செய்வது என்பது. இந்த இரண்டு சவால்களும் தாய்வான் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஜப்பான் இதுவரை உருவாக்கி வைத்துள்ள சட்ட மற்றும் நிறுவன அமைப்புகளில் உள்ள பெரும் இடைவெளிகளை அம்பலப்படுத்தியுள்ளன.
ஈரான் போரிலிருந்து ஜப்பான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவென்றால், ஒரு நெருக்கடி தீவிரமடையும் வரை காத்திருந்து, பின்னர் மக்களை வெளியேற்றும் பாரம்பரிய அணுகுமுறை இனி செல்லுபடியாகாது என்பதாகும்.
போர் தொடங்குவதற்கு முன்பே, ஈரானில் நிலைமை மோசமடைந்து வருவதாக எச்சரித்த ஜப்பானிய அரசு, அங்குள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
ஆனால், சண்டை தீவிரமடைந்தவுடன், ஈரானில் உள்ள ஜப்பானியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமன்றி, இஸ்ரேல், கட்டார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அண்டைய நாடுகளில் உள்ளவர்களையும் வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
மார்ச் மாதத்தில், தெஹ்ரானில் இருந்து அஜர்பைஜானுக்கு தரைவழியாக பல கட்ட வெளியேற்றங்களை ஜப்பான் அரசு ஒருங்கிணைத்தது. மேலும் வளைகுடா நாடுகளில் இருந்த தனது குடிமக்களையும் தாயகம் திரும்ப உதவியது.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யாதெனில், இந்த வெளியேற்ற நடவடிக்கைகள் ஜப்பானிய தற்காப்புப் படையின் (Self-Defense Forces) விமானங்கள் அல்லது சிறப்பு விமானங்களால் மட்டும் நடத்தப்படவில்லை. மாறாக, தரைவழிப் பாதைகள், வணிக ரீதியிலான விமானங்கள் மற்றும் மூன்றாவது நாடுகளின் வழியிலான போக்குவரத்து ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்தே இது சாத்தியமானது.
ஆனால், இதைவிடப் பெரிய பிரச்சனை என்னவென்றால், துபாய், அபுதாபி மற்றும் டோஹா போன்ற பிராந்தியத்தின் முக்கிய வான்வழி மையங்கள் மற்றும் விமான நிலையங்களின் இயக்கம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதாகும்.
குறிப்பாக துபாய் என்பது மத்திய கிழக்கின் ஒரு சாதாரண விமான நிலையம் மட்டுமல்ல, அது ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் உலகின் முன்னணி வான்வழி மையங்களில் ஒன்றாகும்.
அங்கு ஏற்பட்ட இடையூறுகள் ஈரானிலிருந்தும் இஸ்ரேலிலிருந்தும் வெளியேறியவர்களை மட்டுமல்லாமல், வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் இருந்த சர்வதேசப் பயணிகளையும் கடுமையாகப் பாதித்தன. ஒரு நாட்டில் ஏற்படும் நெருக்கடி அந்த எல்லைக்குள் மட்டும் நின்றுவிடாது, அது முழு பிராந்தியப் போக்குவரத்து அமைப்பையும் மிக விரைவாக முடக்கிவிடும் என்பதை இந்த அனுபவம் மீண்டும் நிரூபித்தது.
இந்த பாடம் தாய்வான் நெருக்கடிக்கு நேரடியாகப் பொருந்தக்கூடியது. அமைதியான காலங்களில், அதிக எண்ணிக்கையிலான ஜப்பானிய குடிமக்கள் சுற்றுலா, வியாபாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக தாய்வானில் தங்கியுள்ளனர்.
அங்கு போர் வெடித்தால், தாய்வானின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மட்டுமன்றி, அதைச் சுற்றியுள்ள வான்வெளியும் கடல் பகுதியும் ஆபத்தானதாக மாறும். இதுமட்டுமின்றி, ஹொங்காங், சீனாவின் கடலோரப் பகுதிகள், ஒகினாவா மற்றும் சாகிஷிமா தீவுகளின் போக்குவரத்தும் உடனடியாகப் பாதிக்கப்படும். எனவே, தாய்வானில் இருந்து மட்டும் ஜப்பானியர்களை வெளியேற்றுவதற்கான திட்டம் என்பது முழுமையானதாக இருக்காது. கிழக்கு ஆசியாவின் பல போக்குவரத்து மையங்கள் ஒரே நேரத்தில் முடங்கும் ஒரு சூழலுக்கு ஜப்பான் தயாராக வேண்டும்.

ஜப்பானுக்குள், சாகிஷிமா (Sakishima) தீவுகளிலிருந்து குடிமக்களை கியூசு (kyushu) மற்றும் யாமகுச்சிக்கு ()yamaguchi வெளியேற்றுவதற்கான பாதுகாப்புத் திட்டங்கள் ஏற்கனவே துரிதப்படுத்தப்பட்டு, களப்பயிற்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றாலும், இந்த உள்நாட்டுப் பாதுகாப்புத் திட்டங்கள் ஜப்பானிய எல்லைக்குள் இருக்கும் மக்களை மட்டுமே கருத்தில் கொள்கின்றன. மாறாக, தாய்வான், ஹொங்காங் மற்றும் சீனாவிலிருந்து ஜப்பானியர்களை வெளியேற்றுவது என்பது வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக உதவி, தற்காப்புப் படைச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் எனப் பல அமைப்புகளைச் சார்ந்துள்ளது.
உள்நாட்டு வெளியேற்றமும் வெளிநாட்டு வெளியேற்றமும் ஒரே நேரத்தில் நடக்கும்போது, நாட்டின் விமானங்கள், கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை எந்தப் பணிக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்குவது என்ற கேள்விக்கு ஜப்பானிடம் இன்னமும் தெளிவான பதில் இல்லை.
ஈரான் போரின் பாடம் என்பது ஜப்பான் தனது இராணுவப் போக்குவரத்துத் திறனை அதிகரிப்பதுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவது என்பது வணிக ரீதியிலான விமானங்கள், கப்பல் நிறுவனங்கள், துறைமுகங்கள் மற்றும் மூன்றாவது நாடுகளின் ஒத்துழைப்பை முழுமையாகப் பொறுத்தது.
எனவே, நெருக்கடி காலத்தில் எந்த பொதுமக்கள் சேவைகளைப் பராமரிக்க முடியும், எந்த மூன்றாவது நாடுகளை வெளியேற்ற மையங்களாகப் பயன்படுத்தலாம் மற்றும் வான்வழிகள் மூடப்பட்டால் எந்தத் துறைமுகங்களைப் பயன்படுத்தலாம் என்பதை அமைதியான காலத்திலேயே ஜப்பான் கண்டறிய வேண்டும். அதேபோன்று, உடனடியாக வெளியேற முடியாத மக்களுக்கு தங்குமிடம், உணவு, தொடர்பு வசதிகள் மற்றும் மருத்துவச் சிகிச்சையை எவ்வாறு வழங்குவது என்பதையும் திட்டமிட வேண்டும்.

போரில் ஈடுபடாமல் கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல்ஜப்பான் எதிர்கொள்ளும் இரண்டாவது முக்கிய சவால், கடல்சார் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். ஈரான் போரின் போது, ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்படவில்லை என்றாலும், வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல் அச்சம், ட்ரோன் மற்றும் கண்ணிவெடி அச்சுறுத்தல்கள், ஈரானின் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் முற்றுகை ஆகியவற்றால் இயல்பான வணிகக் கப்பல் போக்குவரத்து மிகவும் கடினமாக மாறியது.
ஜூன் மாதத்தில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது.
ஜப்பானிய அரசும் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உடனடியாக மீட்டெடுக்க அழைப்பு விடுத்தது. இருப்பினும், செப்டம்பர் பிற்பகுதியிலும் கூட, இந்த வழியிலான கப்பல் போக்குவரத்து போருக்கு முந்தைய நிலையை அடையவில்லை.
அமெரிக்கா தனது இராணுவ அழுத்தத்தைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்கிக்கொண்டால், நீரிணையை விரைவாகத் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்தது. இதன் மூலம், பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து என்பது இன்னமும் தூதரக மற்றும் இராணுவப் பேச்சுவார்த்தைகளின் ஒரு அங்கமாகவே உள்ளது என்பது தெளிவாகிறது.
இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது, கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பேற்பது? போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணிகளைத் தலைமை தாங்கி நடத்தினால், அதில் பங்கேற்கும் பிற நாடுகளும் அமெரிக்காவின் இராணுவக் கூட்டாளியாகவே பார்க்கப்படும் ஆபத்து உள்ளது.
அதே நேரத்தில், ஆபத்தான கடல் பகுதியில் சிவிலியன் கப்பல்களைப் பாதுகாப்பின்றி விடவும் முடியாது. இதன் காரணமாகவே, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கத் தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தைப் பராமரித்து, அதே நேரத்தில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வழிகளைத் தேடின.
உதாரணமாக, பிரான்ஸ் நாடு ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் ஒரு சர்வதேசப் படையை உருவாக்கப் பரிசீலித்தது. இந்த அணுகுமுறை, கூட்டணி இராணுவ நடவடிக்கைகளையும், சர்வதேசப் பொது நலனான கடல்சார் போக்குவரத்துப் பாதுகாப்பையும் தனித்தனியாகப் பிரித்துக் காட்டும் ஒரு முயற்சியாகும்.
இதேபோன்ற ஒரு தர்மசங்கடமான சூழல் தாய்வான் நெருக்கடியின் போதும் ஜப்பானுக்கு ஏற்படும். தாய்வான் நீரிணையும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளும் ஆபத்தானதாக மாறினால், கடல்சார் போக்குவரத்தைப் பராமரிப்பது ஜப்பானின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு மிக அத்தியாவசியமானதாகும்.
ஆனால், கப்பல்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் சீனாவையுடனான ஆயுதமேந்திய மோதலுக்கு வழிவகுக்கும் என்றால், அதில் ஜப்பான் பங்கேற்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும்.
எனவே, நேரடிப் போரில் ஈடுபடுவதற்கும், வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு ஆதரவளிப்பதற்கும் இடையே ஒரு தெளிவான நிறுவன ரீதியான வேறுபாட்டை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
போர் நிறுத்தத்திற்குப் பிந்தைய கண்ணிவெடிகளை அகற்றுதல், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், கடல் பாதைகளைக் கண்காணித்தல், ஆபத்தில் உள்ள கப்பல்கள் மீட்பு மற்றும் மூன்றாவது நாடுகள் தலைமையிலான பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒத்துழைத்தல் போன்ற போருடன் நேரடித் தொடர்பில்லாத விருப்பங்களை ஜப்பான் முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டும்.
இந்தப் பிரச்சனை ஜப்பானின் 2015-ஆம் ஆண்டின் ' அமைதி மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்' (Legislation for Peace and Security) எல்லைகளோடும் தொடர்புடையது.
ஜப்பானுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதமேந்திய தாக்குதல், ஜப்பானின் நிலத்திற்கும் அதன் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போது மட்டுமே, குறைந்தபட்ச அளவிலான இராணுவப் பயன்பாட்டை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
சட்டப்படி, ஜப்பான் மீதான அச்சுறுத்தலை அங்கீகரிக்க அமெரிக்கா போரில் பங்கேற்பது கட்டாய நிபந்தனை அல்ல. தாய்வான் நெருக்கடியைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட சூழல் நாட்டிற்கான அச்சுறுத்தலா என்பதை அந்த நேரத்தில் ஏற்படும் சூழ்நிலைகளைக் கொண்டே அரசு விரிவாகத் தீர்மானிக்கும். எனவே, அமெரிக்கா பங்கேற்றால் மட்டுமே ஜப்பானால் எதுவும் செய்ய முடியும் என்று கருதுவது தவறானது.
இருப்பினும், சட்டப்பூர்வமாக எது சாத்தியம் என்பதும், நடைமுறையில் எது அங்கீகரிக்கப்படலாம் என்பதும் வௌ;வேறானவை. ஜப்பானுக்கும் அதன் மக்களின் உரிமைகளுக்கும் தெளிவான ஆபத்து ஏற்படும் போதும், வேறு தகுந்த வழிமுறைகள் இல்லாத போதும் மட்டுமே இத்தகைய நிலை அங்கீகரிக்கப்படும்.
வெறும் கப்பல் போக்குவரத்து முடங்குவதோ அல்லது எரிபொருள் விலை உயர்வதோ தானாகவே இந்த வரம்பை எட்டிவிடாது. மேலும், எதிரி நாட்டுடனான நேரடி மோதலில் ஈடுபடாமல் பாதுகாப்பான போக்குவரத்தை மட்டும் உறுதி செய்ய ஜப்பான் முயலும் போது, இந்தச் சட்டக் கட்டமைப்பு மிகவும் பாரமானதாக மாறக்கூடும். இதனால்தான், 2026 மார்ச் மாதத்தில், போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஜப்பான் ஈடுபடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. நேரடிப் போரில் பங்கேற்பதில் இருந்து நிறுவன ரீதியாகப் பிரிக்கப்பட்ட கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஈரான் போரிலிருந்து ஜப்பான் கற்றுக்கொள்ள வேண்டியவைஅமெரிக்கா-ஈரான் போர் என்பது ஜப்பானிய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் சவாலாக அமைந்த ஒரு பெரிய நெருக்கடியாகும்.
ஒரு நெருக்கடிக்கான தயாரிப்பு என்பது தற்காப்புப் படைகளை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும் என்ற ஒற்றைக் கேள்வியாக மட்டும் சுருக்கப்பட முடியாது என்பதை இந்தப் போர் நிரூபித்துள்ளது.
போரின் ஆரம்பக் கட்டத்தில், வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் விமான நிலைய மூடல்கள் காரணமாக சிவிலியன் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்; அதே வேளையில், வெளியேற்றப்பட வேண்டிய மக்களின் எண்ணிக்கை போரில் ஈடுபட்டுள்ள நாட்டிலிருந்து அண்டைய நாடுகளுக்கும் விரைவாகப் பரவும்.
கடலில், மோதலில் ஒரு தரப்பாக மாறாமல் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய ஜப்பான் உதவ வேண்டியிருக்கும், அதே வேளையில் அத்தகைய நடவடிக்கைகள் போரின் ஒரு தரப்பிற்கு ஆதரவானதாகப் பார்க்கப்படும் ஆபத்தும் இருக்கும்.
இதே பிரச்சனைகள் தாய்வான் நெருக்கடியிலும் எழக்கூடும். முக்கிய விடயம் என்னவென்றால், தாய்வான் நெருக்கடியை உடனடியாக ஜப்பானின் அச்சுறுத்தலாகவோ அல்லது கூட்டுத் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துவதாகவோ மாற்றக் கூடாது. மாறாக, அத்தகைய முடிவை எடுப்பதற்கு முன்னதாகவே செய்ய வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகளை ஜப்பான் சட்டப்பூர்வமாகவும் நடைமுறை ரீதியாகவும் வலுப்படுத்த வேண்டும்.
இதில் ஜப்பானிய குடிமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை வெளியேற்றுதல், வான் மற்றும் கடல் போக்குவரத்தைப் பராமரித்தல், கடல் பாதைகளைப் பாதுகாத்தல் மற்றும் மூன்றாவது நாடுகளுடன் ஒத்துழைத்தல் ஆகியவை அடங்கும். தாய்வான் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஜப்பான் உருவாக்கியுள்ள சட்ட மற்றும் நிறுவன அமைப்பிற்குள் ஒரு புதிய 'இடைநிலை மண்டலம்' (Intermediate Domain) இருப்பதை ஈரான் போர் வெளிப்படுத்தியுள்ளது.
தாய்வான் நெருக்கடியைத் தடுப்பதற்கான தூதரக முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தத் தடுப்பு நடவடிக்கை தோற்றால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதும் பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதியாகும்.
ஈரான் போரிலிருந்து ஜப்பான் பெற வேண்டிய மிக முக்கியமான பாடம் என்னவென்றால், போரில் பங்கேற்பது அல்லது பங்கேற்காமல் இருப்பது என்ற இரண்டு எல்லைகளுக்குள் மட்டும் இந்த விவாதத்தைச் சுருக்கிவிடக் கூடாது. மாறாக, அந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையே உள்ள பல நடைமுறைப் பணிகளை முன்கூட்டியே முறைப்படுத்தி, நிறுவனமயமாக்க வேண்டும் என்பதே ஆகும்.
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!