உயிர் காக்க விரைந்த நட்பும் மரணத்தில் இணைந்தது
குருணாகல் – மாத்தளை வீதியில் இருவேறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு ஆருயிர் நண்பர்கள், அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குருணாகலிலிருந்து மாத்தளை நோக்கி இரண்டு நண்பர்களும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் செவ்வாய்க்கிழமை (17.11.2026) காலை, பயணித்துக்கொண்டிருந்தனர்.
யட்டவத்தை வீர பராக்கிரம வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற நண்பரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
சற்றுப் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த விசேட அதிரடிப்படை (STF) வீரரான அவரது நண்பர், தன் நண்பன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு பதறிப்போனார்.
ஒரு கணமும் தாமதிக்காத அவர், அவ்வழியே வந்த வாகனமொன்றை நிறுத்தி, படுகாயமடைந்த தனது நண்பரை அதில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். நண்பனின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற பதைபதைப்புடன், அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து தனது மோட்டார் சைக்கிளில் அவர் விரைந்துள்ளார்.
ஆனால், விதி வேறொரு கோர முகத்தைக் காட்டியது. சிறிது தூரம் சென்ற நிலையில், வலது பக்கத்திலிருந்து வந்த கார் ஒன்றுடன் அவரது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. நண்பனைக் காப்பாற்றத் துடித்த அந்த விசேட அதிரடிப்படை வீரர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேவேளை, முதலாவது விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் துறை ஊழியரான 28 வயது இளைஞரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிருக்குப் போராடிய நண்பனைக் காப்பாற்றத் துடித்த இன்னொரு நண்பனும் அடுத்த கணமே மரணத்தைத் தழுவிய இந்தத் துயரச் சம்பவம், பார்ப்போர் கண்களைக் குளமாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை யட்டவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!