உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கில் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட 15 சந்தேக நபர்களுக்கு சுமார் 200 வருடங்களுக்கும் அதிகமான கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மூவரங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையிலான நீதிபதி சுஜீவ நிசங்க, நீதிபதி ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பினை நேற்று முன்தினம் அறிவித்தது.
சட்டமா அதிபர் சார்பாக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, சிரேஷ்ட அரச சட்டவாதி சஜித் பண்டார, அரச சட்டவாதி சக்தின் ஜாகொட ஆரச்சி, அரச சட்டவாதி அகிலா தல்பதாது உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்தனர்.
பிரதிவாதிகளுக்கு எதிராக 8,900 பக்கங்களை உடைய 9 தொகுதிகளைக் கொண்ட குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டிருந்தது. அதில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்குச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கியமை, பயங்கரவாத கருத்துகள் மற்றும் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியமை தொடர்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 2.1 (ஏ) மற்றும் 2.1 (ஏ) உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2.2 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிந்துள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்ப்பில் குறிப்பிட்டது.
அதற்கமைய பிரதிவாதிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாத விரிவுரைகள், ஆயுதப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் இரகசிய இடங்களைப் பராமரித்து வந்தமை தொடர்பாக சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது நீதிபதி நவரத்ன மாரசிங்க, திறந்த நீதிமன்றில் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. சதித்திட்டம், உடன்பாடு என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். ஆரம்பத்தில் இணைந்தவர்கள், இடைநடுவே இணைந்தவர்கள் மற்றும் இறுதியில் இணைந்தவர்கள் இந்தச் சதித்திட்டத்தின் பங்காளிகளாக இருக்கலாம் என்று குறிப்பிட்டது.
தீர்ப்பு விபரம்
அதற்கமைய முதலாவது பிரதிவாதியான மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நௌஃபர் அல்லது நௌஃபர் மௌலவிக்கு 220 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், 2ஆவது பிரதிவாதியான கபூர் மாமா என்று அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பைக்கு 240 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும்
3ஆவது பிரதிவாதியான அபூ சிலா எனும் ஹயாத்து மொஹம்மது மில்ஹானுக்கு 240 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், 4ஆவது பிரதிவாதியான அபூ உமர் எனும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்வுக்கும் 240 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், 5ஆவது பிரதிவாதியான அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்குக்கு -240 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அத்தோடு 6ஆவது பிரதிவாதியான அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கானுக்கு 200 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், 7ஆவது பிரதிவாதியான அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீனுக்கு 200 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 8ஆவது பிரதிவாதியான
அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தௌஸுக்கு 260 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , 9ஆவது பிரதிவாதியான அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மௌலவிக்கு 220 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 10ஆவது பிரதிவாதியான ஷாபி மௌலவி எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி 220 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் 11ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீரும் 200 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 15ஆவது பிரதிவாதியான அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீனுக்கு 200 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 16ஆவது பிரதிவாதியான அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸும் 220 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை 18ஆவது பிரதிவாதியான ராசிக் ராசா ஹுசைனுக்கு 220 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 19ஆவது பிரதிவாதியான கச்சி மொஹம்மது ஜெஸ்மினுக்கு 200 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதிகள் குழாம் தீர்பளித்திருந்தது.
இந்தக் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு அமுல்படுத்தப்படும் இன்றைய தினத்திலிருந்து (நேற்றிலிருந்து) குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என்று மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பாக கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் முன்னெடுத்த வழக்கு விசாரணைகள் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேரை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது.
9 பேருக்கு விடுதலை
அத்துடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 9 பிரதிவாதிகளை வழக்கில் இருந்து முற்றாக விடுவித்து விடுதலை செய்வதாகவும் நீதிபதிகள் குழாம் அறிவித்தது.
12ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன், 13ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப், 14ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்,17 ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த யாசின் பாவா அப்துல் ரவூப் (விளக்கமறியலில் வைத்து மரணித்துவிட்டார்) வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 20ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த செய்னுள் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன் 21ஆவது பிரதிவாதியான மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான், 22 ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி, 23ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ், 24ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி மற்றும் 25 ஆவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த மொஹம்மட் அக்ரம் அஹக்கம் ஆகியோரையும் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!