உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் முன்னாள் அரச உளவுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலே உள்ளிட்டவர்களுக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகளில் பல முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை (25) இது தொடர்பிலான வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளோடு நீதிமன்றில் ஆஜராகி இது தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்தினார்.
கடந்த தவணை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, தற்போதும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் தண்டனை அனுபவிக்கும் மில்கான் மற்றும் ரிஸ்கான் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்ள சிறைச்சாலைக்குச் சென்றதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதன்படி, ரிஸ்கானும் மில்கானும் தமது குடும்பத்தினருக்கும் நெருக்கமானவர்களுக்கும் தமக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பட்சத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்தி வாக்குமூலம் அளிக்கத் தயார் எனத் தெரிவித்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த இருவரின் பாதுகாப்பும் அவர்களது குடும்பத்தவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளைத் தான் வழங்கியுள்ளதாகத் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை விட மேலும் பல முக்கியமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக இடம்பெறும் விசாரணைகளில் அரச உளவுச் சேவையின் 4 முக்கிய அதிகாரிகளின் வாக்குமூலங்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் பதிவு செய்துள்ளது.
நுவான் மதுமகே, மொஹமட் பரீஸ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிரோஷன் குணவர்தன, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோகிணி ஆகியோரின் வாக்குமூலங்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதில் அரச உளவுச் சேவையின் அதிகாரியான மொஹமட் பரீசினுடைய வாக்குமூலத்தில் பல முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சஹரான்
இந்தியாவில் சஹரான் உள்ளிட்ட குழுவினர் 2018 ஒக்டோபர் மாதம் அளவில் பயிற்சிகளை முன்னெடுப்பதாகவும், அவர்கள் 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்தலாம் எனவும் 'தம்பி - அண்ணன்' எனும் தகவலாளி ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலை மொஹமட் பரீஸ் எனும் அரச உளவுச் சேவை அதிகாரி தனது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் திலீப் பீரிஸ் குறிப்பிட்டார்.
அதன்படி, உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட அந்தத் தகவலானது அரச உளவுச் சேவையின் அடிபடைவாதம் தொடர்பிலான விசாரணைத் தகவல்களைச் சேகரிக்கும் குறித்த பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்தப் பிரிவின் பொறுப்பதிகாரியிடமிருந்து குறித்த தகவல்கள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிரோஷன் குணவர்தனவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சுரேஷ் சலே அரச உளவுச் சேவையினுடைய பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர், குறித்த தகவல்கள் அடங்கிய கோவையானது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிரோஷன் குணவர்தன ஊடாக சுரேஷ் சலேவால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்தக் கோவை தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த தகவல்களைப் பெற்று அதனை இந்தியாவிற்கு அறிவித்திருந்தால், குறித்த சஹரான் உள்ளிட்ட கும்பலைக் கைது செய்வதற்கும் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் ஏதுவாக இருந்திருக்கும் . இதனை விட, அரச சேவைக்குப் பொறுப்பாக அப்போது இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.அரசுச் செய்திகள்
இதனிடையே, சுரேஷ் சலே பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் தொடர்பாகவும் விவரங்களைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டது. இராணுவ உளவுச் சேவை அதிகாரிகள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களானது அரச கட்டமைப்புக்குள் பதிவு செய்யப்படாமல் அல்லது அரச நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்படாமல் தனியார் நிறுவனங்கள் ஊடாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எக்நெலிகொட உள்ளிட்ட குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், சலே பயன்படுத்திய தொலைபேசி இலக்கமானது சிலோன் ஷிப்பிங் தனியார் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் அது தொடர்பிலான விடயங்களை முன்னெடுப்பதற்கு முயற்சித்தபோது நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அந்தத் தகவல்களைக் கோருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி அது தொடர்பில் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறும் அவர் கோரினார்.
இந்த வழக்கு விசாரணைகளுக்கிடையே சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது சித்திரவதைகள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்து, அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட மனோ வைத்திய நிபுணர்கள் குழுவினுடைய அறிக்கை தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
2026 நவம்பர் 13 ஆம் திகதி குறித்த ஐவர் கொண்ட மனோ வைத்திய விசேட நிபுணர்களின் அறிக்கை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
குறித்த அறிக்கையானது 311 பக்கங்களைக் கொண்டதாகவும் 1195 பத்திகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளதாகவும், இது இலங்கை நீதிமன்ற வரலாற்றில் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மிக விசாலமான சட்ட மனோவைத்திய அறிக்கை எனவும் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அவ்வறிக்கையில் சுரேஷ் சலேவின் 95 பக்க வாக்குமூலமும் அவரது மனைவியின் 30 பக்க வாக்குமூலமும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையின் பிரகாரம் சுரேஷ் சலே சி.ஐ.டி தடுப்பில் உள்ளபோது சித்திரவதைக்கு உள்ளாகியதாக எந்தப் பதிவுகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இதனை விட சுரேஷ் சலே மற்றும் அசாத் மௌலானா ஆகியோரின் தொடர்புகள் தொடர்பாகவும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியும் ஒகஸ்ட் மாதம் 16 ஆம் தேதியும் சுரேஷ் சலே மற்றும் அசாத் மௌலானா ஆகியோர் அஹூங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தமை தொடர்பிலான விடயங்கள் நீதிமன்ற உத்தரவு ஊடாகக் குறித்த ஹோட்டலின் முகாமையாளர் ஊடாகச் சி.ஐ.டிக்கு வழங்கப்பட்டிருந்தன.
அந்தத் தகவல்களின் படி, சுரேஷ் சலே தனது குடும்பத்தின் 10 பேர் கொண்ட உறுப்பினர்களுக்காக நான்கு அறைகளை 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், 1 இலட்சத்து 39, ஆயிரத்து 944 ரூபாவைச் செலுத்தி ஒதுக்கிக் கொண்டுள்ளதாகவும், குறித்த அறைகள் சுரேஷ் சலேவின் மனைவியால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் குறிப்பிட்டார்.

அசாத் மௌலானா 2020 ஒகஸ்ட் 15 ஆம் திகதி தனக்கான அறையைத் தனது மனைவி ஊடாக ஒதுக்கிக் கொண்டுள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
அசாத் மௌலானா, சுரேஷ் சலே ஆகியோருக்கு இடையில் நீண்ட தொலைபேசி உரையாடல்கள் உள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு ஞாபகப்படுத்திய திலீப் பீரிஸ், அசாத் மௌலானாவைத் தெரியாது என சுரேஷ் சலே சொல்வது முற்றிலும் பொய்யான விடயம் எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அஹூங்கல்ல ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு நாட்களில் மட்டும் அசாத் மௌலானா மற்றும் சுரேஷ் சலே ஆகியோருக்கு இடையில் எந்தத் தொலைபேசித் தொடர்புகளும் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுரேஷ் சலே சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணி பானுக மலவியாராச்சி ஆஜராகி இருந்தார். அவர் தனது சேவைபெறுநர் சார்பாக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சித்திரவதைகளுக்கு உள்ளானதாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக விளக்கங்களை முன்வைத்தார்.
ஐவர் கொண்ட விசேட மனோவைத்திய நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாகவில்லை என எங்கும் குறிப்பிடப்பட வில்லை எனவும், அது தொடர்பில் மேலதிக விசாரணை அவசியம் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரம் குறித்த அறிக்கையின் பிரகாரம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் 30 நாட்களுக்குள் அழிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதானது,
அது தொடர்பில் தம்மால் ஒரு முடிவுக்கு வர முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக விசேட மனோவைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
அதே நேரம் ஏற்கனவே 2026 ஏப்ரல் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளைப் பார்க்கின்றபொழுது, மில்கான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் ஒன்றினை அளித்துள்ளதாகவும், அப்போது அவர் தனது பாதுகாப்பு தொடர்பில் எந்த விடயங்களையும் வெளிப்படுத்தி இருக்கவில்லை எனவும் நீதிமன்றத்திற்கு குறிப்பிட்டார்.
அதேபோன்று சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும், கடந்த மூன்று வாரங்களில் சுரேஷ் சலேவிடம் ஒரே ஒரு வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தாமதமடைய தனது சேவைபெறுநர் எந்த வகையிலும் காரணமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் 2027 ஜனவரி 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.
...
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!