news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞன் மீது வாள்வெட்டு

10 Sep, 2026

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் புதன்கிழமை (09) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையிலான ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.


வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிலர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 



கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!