news@ilakkiyainfo.com

பிரிவுகள்

``என் பொண்ணு பேசிவெச்சிருக்க ஆடியோவை கேட்டப்போ...’’nபுதுமணப்பெண் பவித்ராவின் nதற்கொலை ஆணவக்கொலையா?

24 Nov, 2026
சாதிய அவமானமும் வரதட்சணைக் கொடுமையும்தான் என் மகளை தற்கொலை முடிவுக்குத் தள்ளிவிட்டன”

காதல் திருமணம் முடிந்த மூன்று மாதங்களுக்குள், 21 வயது இளம்பெண் பவித்ராவின் உயிர் பறிபோயிருப்பது கோவை, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 “சாதிய அவமானமும் வரதட்சணைக் கொடுமையும்தான் என் மகளை தற்கொலை முடிவுக்குத் தள்ளிவிட்டன” எனப் பெண்ணின் தந்தை பழனிச்சாமி கதறும் நிலையில், சமூக ஊடகங்களிலும் இந்தத் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்...

பவித்ராவின் தந்தை பழனிச்சாமியிடம் (43) பேசினோம். “நான் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவன்.

 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான், சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி திருப்பூர் வந்து, தற்போது திருப்பூர் வடக்கு தாலுகா, கொடிக்கம்பம் கொங்கு மெயின் ரோடு கலாமணி காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். 

எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் பவித்ரா (21) பி.எஸ்சி., டி.எம்.எல்.டி முடித்துவிட்டு, கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள நேச்சுரல் இன்ஸ்டிட்யூட்டில் 8 மாத பியூட்டிஷன் கோர்ஸ் படித்து வந்தார்.



அதே பயிற்சி மையத்தில் படித்து வந்த கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - சசிகலா தம்பதியின் மகன் சஞ்சய்க்கும் (25) என் மகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 

திருமணத்துக்கு முன்பே பவித்ரா கர்ப்பமான நிலையில், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சய், `நீ எந்தச் சாதியாக இருந்தாலும் எனக்குப் பிரச்னையில்லை’ என்று கூறி, கடந்த விநாயகர் சதுர்த்தி சமயத்தில் என் மகளைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்

வரதட்சணை, சாதிய பேச்சு...’

மகளைத் தேடிச் சென்ற எங்களிடம், ‘நல்ல பையன், என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார்’ என்று பவித்ரா உறுதியாகச் சொன்னார். 

திருமணமாகி முதல் ஒரு மாதம் வரை சுமுகமாகச் சென்ற அவர்கள் வாழ்க்கை, அதன் பிறகு மாறியிருக்கிறது. சஞ்சய்யும் அவர் குடும்பத்தினரும் என் மகளிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதோடு, சாதியின் பெயரைச் சொல்லியும் இழிவாகப் பேசியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.


தீபாவளிப் பண்டிகைக்கு எங்கள் மகள் பவித்ரா எங்கள் வீட்டுக்கு வந்து சென்ற பிறகும், அவருக்கு அங்கு நெருக்கடி தொடர்ந்தது. ‘வளைகாப்பு நடத்தும்போது நகை போடுகிறேன்’ என நான் சமாதானப் படுத்தினேன். 

ஆனால், சஞ்சய் வீட்டில் என் மகளிடம் சரியாகப் பேசாமல் ஒதுக்கியதோடு, சாதியைச் சொல்லித் திட்டி வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். 

தீபாவளிக்கு வந்தபோதே திருமணத்தை பதிவு செய்யச் சொன்னேன்; அதையும் தட்டிக்கழித்தார்கள்.

`அதிர்ச்சி ஆடியோக்கள்... தற்கொலை தகவல்!

கடும் மன உளைச்சலில் இருந்த என் மகள், தன் செல்போனில் தனக்குத்தானே பேசி சில ஆடியோக்களை வாட்ஸ்அப்பில் சேமித்து வைத்திருந்துள்ளார். 

அதில், ‘என்னை ஒரு பொண்ணாவே நீ நினைக்கல; ஒரு பொருளா நினைக்கிற. எனக்கு உண்டான மரியாதை கொடுக்கல; செக்ஸுக்கு மட்டும்தான் யூஸ் பண்ணிருக்க’ எனக் கதறி அழுதபடி பேசியிருக்கிறார்.

கடந்த நவம்பர் 16-ம் தேதி காலை 9.38 மணியளவில் எனக்கு போன் செய்து நலம் விசாரித்தார் மகள் பவித்ரா. ஆனால், அன்றைய தினம் பிற்பகல் 3.00 மணியளவில் கோவை செல்வபுரத்தில் உள்ள சஞ்சய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

மாலை 4.10 மணியளவில் சஞ்சய்யின் தந்தை எனக்கு போன் செய்து, ‘உங்கள் பொண்ணு சூசைட் பண்ணிக்கிச்சு; எங்க குடும்பத்துல யாருமே இப்படிப் பண்ணதில்லை’ என்றார். 

‘எங்க குடும்பத்துல யாரும் தற்கொலை பண்ணதில்லை’ என்பதில்கூட, அவர் தனது சாதி ஆணவத்தைத்தான் வெளிப் படுத்தினார்.

நான் பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறேன். 


ஆனால், என் பிள்ளைகளை கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தேன். அரசு வேலைக்குப் போக ஆசைப்பட்ட என் பெண், இப்படி உலகத்திலேயே இல்லாமல் போய்விட்டார். நாங்கள் நடைபிணமாகி உள்ளோம்.

 உடல் சுகத்துக்காக மட்டுமே என் மகளைப் பயன் படுத்திவிட்டு, ஜாதியைச் சொல்லித் திட்டியும் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தி சாகடித்துவிட்டார்கள்’’ என்று படபடவெனப் பேசி முடித்தவருக்கு, கண்ணீர் பெருகியது.

 சற்று இடைவெளி விட்டு, பின்னர் தொடர்ந்தார்.

<`காவல் நிலையத்தில அழுத்தம் கொடுத்தனர்...’

“நாங்கள் கோவை செல்வபுரம் சென்றபோது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கக் கூடாது என்று புகாரை மாற்றி எழுதுமாறு, சஞ்சய் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அழுத்தம் கொடுத்தார்கள். 

சஞ்சய்யை ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் பெற்றோரையும் கைது செய்து கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும்.

 மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அரசு வேலை மற்றும் இழப்பீடு கோரியுள்ளோம். அவரும் ஒப்புதல் அளித்துள்ளார். பலரின் ஆலோசனைப்படி உடலைப் பெற்றுக்கொண்டு சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உடற் கூறாய்வுக்குப் பிறகு செங்கமேட்டில் அடக்கம் செய்துள்ளோம். 

காதல் என்ற பெயரில் என் மகளை பலியாக்கி, சாதிய வெறியால் அவர் உயிரையே பறித்து விட்டனர்’’ என்றார் கண்ணீருடன்

விடுதலைச் சிறுத்தை கட்சியினருடன் இணைந்து இந்த பிரச்னையை முன்னெடுத்துச் சென்ற பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தைச் சேர்ந்த, பவித்ராவின் நெருங்கிய உறவினர் மதியழகன் கூறுகையில், “சாதிய அவமானத்தாலும் வரதட்சணைக் கொடுமையாலும்தான் பவித்ரா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். 

குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நீதி கிடைக்கும்வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார் ஆதங்கத்துடன்.

காவல்துறை தரப்பில் சொல்வது என்ன?

இதுகுறித்து கோவை, செல்வபுரம் காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, “பவித்ராவின் ஆடியோ பதிவில், ‘முதல்ல நல்லா பாசமா இருந்த; இப்ப வேலை வேலைன்னு வேலைக்குப் போயிடுற. என் மேல பாசம் காட்ட மாட்டேங்குற’ என்று தான் பேசியுள்ளார். 

மற்றபடி வரதட்சணை நெருக்கடியோ, சாதிய ரீதியான பேச்சோ அதில் இல்லை. இரு வீட்டாரும் வீட்டுக்குச் சென்று நன்றாகத்தான் பேசியுள்ளனர். 

இருப்பினும், இறந்த பெண் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சஞ்சய்யை ரிமாண்ட் செய்துள்ளோம். 

தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தவறு செய்தவர்களை கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த மரணம் என்பதால், புலன் விசாரணைக்காக முதல் தகவல் அறிக்கையின் நகல் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியருக்கும், கோவை மாநகர் குனியமுத்தூர் சரக காவல் உதவி ஆணையர் மகேஷ்குமாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அடுத்தகட்ட விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்றனர்.

``சாதிய அவமதிப்பிலும் வரதட்சணை நெருக்கடியிலும் ஓர் உயிர் பறிபோயிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து பவித்ராவின் குடும்பத்துக்கு முழுமையான நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார்கள் செயற்பாட்டாளர்கள்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!