news@ilakkiyainfo.com

பிரிவுகள்

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் ; மின்சாரக் கட்டணமும் உயரும் - ஜீ.எல்.பீரிஸ்

02 Jun, 2026
எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கட்டாய நிபந்தனைகளாகும். இந்த நிபந்தனைகளுக்கு அடிபணிந்துதான் கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்திற்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. இந்த விலை அதிகரிப்பும் மீண்டும் அதிகரிக்கும். மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.Geographic Reference

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி இன்று (01) நடத்திய  செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து  குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலை கடந்த ஐந்து மாதங்களுக்குள் ஏழாவது முறையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் என அனைத்துமே. இம்முறை கணிசமான தொகையினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அது இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. மீண்டும் விலை அதிகரிக்கும். மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும்.

இவை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கட்டாய நிபந்தனைகளாகும். இந்த நிபந்தனைகளுக்கு அடிபணிந்துதான் கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு 695 மில்லியன் அமெரிக்க டாெலர்களை வழங்கியது. இந்த நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கத்தைக் கீழ்ப்படியச் செய்தே வழங்கியுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. பாகிஸ்தான் அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் எரிபொருள் விலை 22 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் சுமை பற்றிய யதார்த்தமான உணர்வுடனும், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையும் போது, அதன் நிவாரணத்தை பாகிஸ்தான் மக்களுக்கு வழங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் எமது நாட்டில் அது முற்றிலும் தலைகீழானது. செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக இது தொடர்பான அனைத்து நிவாரணங்களையும் நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளது, அப்படியென்றால் அதன் விளைவாக  நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவு அதிகரிக்கும் .

மத்திய கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட ஒரே நாடு இலங்கை மட்டுமல்ல. அது ஒரு பொதுவான பிரச்சினை. ஆனால், மற்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் அந்நாட்டு மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். 

ஜப்பானின் பிரதமர் தினமும் அந்நாட்டு வர்த்தக சமூகத்துடன் பேசுகிறார். சிங்கப்பூர் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் தங்களது நேரத்தின் பெரும்பகுதியை சிங்கப்பூர் மக்களுடன் இவ்வாறான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்காகவே செலவிடுகிறார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த பிரச்சினைகளில் இருந்து ஓரளவு மீள  இந்திய மக்களுக்கு 4 நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அஸ்திரேலியாவின் 3 மாநிலங்கள் இப்பிரச்சினையின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்டு, குறிப்பிட்ட காலத்திற்கு ஆஸ்திரேலிய மக்களுக்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. அந்த அளவுக்கு அந்நாட்டு அரசாங்கங்கள் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுடன் கலந்துரையாடி வருகின்றன. எமது நாட்டு அரசாங்கம் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கொள்கையையே பின்பற்றி வருகிறது. மக்களை ஏமாற்றுவது, மக்களுக்குப் பொய் சொல்வது.

மேலும் திறைசேரியிலிருந்து ஒரு முறை அல்ல, பத்து தடவைகள் இந்நாட்டு மக்களின் பணத்தை ஒரு திருட்டுக் கணக்கிற்கு அனுப்பினார்கள். அதன் பிறகு சொல்கிறார்கள் இது ஒரு பிரச்சினை அல்ல என்று. இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, இப்பணத்தை நாம் திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்று. தெரிவித்தார்கள். ஒரு சதம்கூட திரும்பக் கிடைக்காது என்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். 

எனவே, அரசாங்கம் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறார்கள். உண்மையை மறைக்க முயற்சிக்கிறார்கள். இத்தகைய கொள்கையினால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு ஒரே காரணம் மத்திய கிழக்கு போர்ச் சூழல் மட்டுமல்ல. நமது நாட்டு மக்களின் பணத்தைக் கொண்டு பாரியளவிலான மோசடி, ஊழல், அலட்சியம் காரணமாக நம்ப முடியாத அளவிலான பெருந்தொகை பணம் பாழடிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி ஊழலினால் நமது நாட்டுக்கு இருபத்திரண்டாயிரம் இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. தரக்குறைவான நிலக்கரி  காரணமாக  மின்சார உற்பத்தியில் கடுமையான பிரச்சினை ஏற்பட்டது.

நிலக்கரி மோசடி காரணமாக மிக அதிக விலைக்கு டீசலைப் பெற வேண்டியிருந்தது. உலகில் டீசலுக்காக அதிக தொகையைச் செலுத்திய நாடு இலங்கைதான். இந்த மோசடியை மூடிமறைப்பதற்காக ஒரு பீப்பாய்க்கு 286 டாெலர்களை இலங்கை செலுத்தியது. ஆனால் உலக சந்தையில் நிலவிய விலை ஒரு பீப்பாய்க்கு 130 முதல் 155 அமெரிக்க டாெலர்களுக்கு இடைப்பட்டதாகும்.Geographic Reference

திறைசேரியின் எந்தவொரு கவனமும் இன்றி, கள்ளக் கணக்கொன்றிற்கு தொடர்ச்சியாகப் பணம் அனுப்பியதால் ஏற்பட்ட நஷ்டம் எட்டாயிரத்து எண்ணூறு இலட்சம் ரூபா. அஸ்வெசும முறைகேடுகளால் ஏற்பட்ட நஷ்டம் இரண்டாயிரத்து 480 இலட்சம்  ரூபா. தேசிய அபிவிருத்தி வங்கியின் மோசடியால் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் இலட்சம்  ரூபா. தபால் அலுவலக மோசடியால் இரண்டாயிரத்து இருநூறு லட்சம் ரூபா. அதுதவிர காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, நமது நாட்டு மக்களின் பணம் எவ்வளவு தூரம் பாழடிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இதில் ஒரு சிறிய பகுதியையேனும் சேமிக்க முடிந்திருந்தால், நமது மக்களை இந்த அளவுக்கு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டியிருந்திருக்காது. இந்த அளவிற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஆகாயத்தை நோக்கி உயர்ந்திருக்காது. இவ்வாறான பாரியளவிலான கொள்ளைகள் இடம்பெறாமல் இருந்திருந்தால், இந்த முறையில் வரிகளை விதித்து மக்களை அசாதாரணமான அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது.

சமீபத்தில் இந்நாட்டிற்கு உலகின் மிகச்சிறந்த, அதிக மதிப்புமிக்க சொகுசு மோட்டார் வாகனங்கள் கொண்டுவரப்பட்டன. முழு உலகிற்குமே இவ்வாறான வாகனங்கள் 25 மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஹெலிகாப்டர்கள் கொண்டுவரப்பட்டன. இந்த கோடீஸ்வரர்களுக்கு ரூபாய் தட்டுப்பாடு இல்லை, பில்லியன் கணக்கில் அவர்களிடம் ரூபாய் இருக்கிறது. 

ஆனால் அரசாங்கம் என்ன செய்தது, அந்த ரூபாயை டாெலர்களாக மாற்றுவதற்கு அனுமதி அளித்தது. இப்போது அந்த டாெலர்கள்தான் நமது நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கான தேவைகளைப் பெற்றுக்கொள்ள அவசியமாகின்றன.

மக்களின் குறைந்தபட்ச கட்டாய தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இருக்கின்ற டாெலர்களைத்தான், இந்த கோடீஸ்வரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த அரசாங்கம் வழங்கி இருக்கிறது.

இதில் என்ன நியாயம் இருக்கிறது? இதில் என்ன மனிதாபிமானம் இருக்கிறது? இது ஒரு அரசாங்கமா? அரசாங்கம் ஒன்று எதற்குத் தேவை? உண்மையில் அரசாங்கம் ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இதைவிட நிலைமை நன்றாக இருந்திருக்குமே என்ற கேள்வி அனைவருக்குமே எழுகிறது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு கட்டாயக் கடமை உள்ளது. கடந்த வாரம் வழங்கப்பட்ட 695 மில்லியன் அமெரிக்க டாெலர்கள் நன்கொடைகள் அல்ல, அவை கடன். இவற்றைத் திருப்பிச் செலுத்த வேண்டியது இந்நாட்டு மக்களேயன்றி அரசாங்கம் அல்ல. இக்கடன்கள் வட்டியுடன் திருப்பிப் பெறப்படும். மக்களிடமிருந்து பேற்றே அவை செலுத்தப்படுகிறது.

அப்படியென்றால், இப்பணம் சரியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறதா.மக்களின் நலனுக்கும் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தெளிவான கடமை சர்வதேச நாணய நிதியத்திற்கு உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இப்பணத்தைக் கடனாக நமக்கு வழங்குகிறது என்றால், அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், அவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது என்றார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!