எல்ல பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் – 7 குடும்பங்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிப்பு!
எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெமோதரை கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பிரிவினா – கொடபத்தன பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான பாதையில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி, நேற்று திங்கட்கிழமை (02) பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால் பாலத்தின் ஒரு பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், எஞ்சிய பகுதிகளிலும் வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட குப்பைகள் மற்றும் மரக்கிளைகள் குவிந்து காணப்படுகின்றன.
இந்த அனர்த்தம் காரணமாக குறித்த பகுதியில் வசிக்கும் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும், மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதான பாதையையே பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை எந்தவொரு அரசாங்க அதிகாரியும் சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிடவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, உரிய அரச அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து சேதமடைந்த பாலத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி, போக்குவரத்துப் பிரச்சினைக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
.





கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!