news@ilakkiyainfo.com

பிரிவுகள்

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள் பரிசோதனை

14 Aug, 2026
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து விமானிகளிடமும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் அல்லது மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்காக, வழக்கமான பரிசோதனைக்கு மேலதிகமாக விசேட பரிசோதனைகளை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து கடந்த 4ஆம் திகதி டெல்லிக்கு பயணித்த ‘ஏர் இந்தியா’ விமானம், கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக நடுவானில் குலுங்கியதுடன், பறந்து கொண்டிருந்த உயரத்திலிருந்து சில விநாடிகளில் சுமார் 300 அடி கீழே இறங்கியது.

இதனால் விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

விமான விபத்துகள் தொடர்பான விசாரணையின்போது,  விமானிகளை போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பரிசோதனை செய்தபோது, முதற்கட்ட பரிசோதனையில் தலைமை விமானி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார் என முடிவு கிடைத்தது.

இதனையடுத்து, உறுதிப்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் கஞ்சா பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணை மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இரு விமானிகளும் விமானங்களை இயக்குவதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தனது அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விமானப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விமானிகளுக்கான தற்போதைய போதைப்பொருள் பரிசோதனை விதிமுறைகளில் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து ஆய்வு செய்ய விமானப் போக்குவரத்து பணியகத்துக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி, விமானி ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டால், அவர் போதைப்பொருள் மறுவாழ்வு சிகிச்சைக்கு அனுப்பப்படுவார். இரண்டாவது முறையாக போதைப்பொருள் பயன்பாடு உறுதி செய்யப்பட்டால், அவரது விமானி உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும். மூன்றாவது முறையும் விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், உரிமம் நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!