ஓடும் பஸ்ஸில் பெண்கள் இருவர், அவசர அவசரமாக டிரஸ்களை மாற்றிய சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால யாத்திரை தொடங்கியுள்ளதால், கேரளா முழுவதும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, எருமேலி உள்ளிட்ட யாத்திரை வழித்தடங்களில் கூட்டம் அலைமோதுகின்றது.
இந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பக்தர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருட சிலர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பக்தர்கள் கூட்டத்தில் திருட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் கேரளாவில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்; பஸ்ஸுக்குள் அவர்கள் செய்த ஒரு காரியமே சாரதி மற்றும் நடத்துநருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோழஞ்சேரியிலிருந்து ரான்னிக்குச் செல்லும் தனியார் பஸ்ஸில் குறித்த இரண்டு பெண்களும் ஏறியுள்ளனர். பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், அவசர அவசரமாகத் தங்களது ஆடைகளை பஸ்ஸுக்குள்ளேயே மாற்றத் தொடங்கியுள்ளனர்.
இதனை அவதானித்த பஸ் சாரதி மற்றும் நடத்துநருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. “எதற்காக இந்தப் பெண்கள் அவசர அவசரமாக ஆடைகளை மாற்றுகிறார்கள்?” என யோசித்த அவர்கள், பெண்களின் வித்தியாசமான நடவடிக்கையால் உடனடியாக ரான்னி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவல் கிடைத்ததும் விரைந்து செயற்பட்ட ரான்னி பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு அருகே குறித்த தனியார் பஸ்ஸை நிறுத்தி, அதில் பயணித்த இரண்டு பெண்களையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பொலிஸாரைக் கண்டதுமே பதற்றமடைந்த அப்பெண்கள், பொலிஸார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து மழுப்பியுள்ளனர். இதனால், அவர்கள் மீது பொலிஸாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது.
தொடர்ந்து, பெண் பொலிஸார் இருவரையும் சோதனையிட்டபோது, ஒரு பெண் தனது ஆடைக்குள் 21,000 இந்திய ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்தது. இந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது எனப் பொலிஸார் வினவியபோது, இருவரும் திருதிருவென விழித்துள்ளனர்.
பொலிஸார் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில், இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த பார்வதி மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த கீதா என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் பார்வதி, கீதா ஆகிய பெயர்களில் மட்டுமின்றி; பவானி, அனு, லட்சுமி உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களிலும் செயற்பட்டு வந்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சபரிமலை யாத்திரைக் காலத்தில் பக்தர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தித் திருடுவதற்காகவே இவர்கள் வந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பஸ் நடத்துநர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த ரான்னி பொலிஸார், இவர்கள் இதுவரை எந்தெந்தப் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு எச்சரிக்கை: சபரிமலை யாத்திரைக் காலத்தில் எருமேலி உள்ளிட்ட வழித்தடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். எனவே, பஸ் நிலையங்கள், பயண வழித்தடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் பக்தர்கள் தங்களது பணம், நகை உள்ளிட்ட உடைமைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தேகத்திற்கிடமான வகையில் எவரேனும் நடந்துகொண்டால், அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!