மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து தமது இரண்டு குழந்தைகளுடன் வாவியில் குதித்து உயிர்மாய்த்துக்கொள்ள முயன்ற தந்தையையும், குழந்தைகளையும் பொதுமக்களும் மீனவர்களும் இணைந்து காப்பாற்றிப் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (23) திங்கட்கிழமை இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொச்சிமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் பாலத்திலிருந்து குதிக்க முற்பட்ட வேளை, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உடனடியாகச் செயற்பட்டு இரு குழந்தைகளையும் மீட்டெடுத்தார்.
எனினும் தந்தை வாவியில் குதித்த நிலையில், அங்கிருந்த மீனவர்கள் துரிதமாகச் செயற்பட்டு அவரை உயிருடன் மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
குறித்த நபரின் மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகச் சென்றுள்ள நிலையில், அவர்களது மூன்று பிள்ளைகளும் மனைவியின் சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை 6.00 மணியளவில் மூத்த பிள்ளையை வீட்டில் விட்டுவிட்டு, ஏனைய இரு பிள்ளைகளையும் துவிச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றே அவர் இவ்விபரீத முடிவை எடுக்க முற்பட்டுள்ளார்.
மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த முகவர் ஒருவரால் போலி ஆவணங்கள் மூலம் ஓமான் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமது மனைவி, அங்கு வேலையின்றி அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுவதாகவும், வாரத்திற்கு ஒருமுறை மாத்திரமே தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுவதாகவும் அந்நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மனைவியை மீட்க வேறு வழியில்லாத விரக்தியிலேயே தாம் இம்முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து காத்தான்குடி பொலிஸார் அந்நபரையும் குழந்தைகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நேற்று மாலை இதே பாலத்தில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து வாவியில் குதித்து உயிர்மாய்த்துக்கொள்ள முயன்ற உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவரை, அங்கு கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸார் காப்பாற்றி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!