news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கசிப்புடன் பெண் கைது ; பெருமளவு கோடா மீட்பு

24 May, 2026
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடாப் பகுதியில், வீடு மற்றும் களப்பு (வாவி) பகுதிகளில் சூட்சுமமான முறையில் கசிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களை சுற்றிவளைத்த பொலிஸார், ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது இருவர் தப்பி ஓடியுள்ளதுடன், 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 75,000 மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்பகுதியிலுள்ள சதுப்புநிலக் காடுகளில் சூட்சுமமான முறையில் கசிப்பு தயாரித்து, அங்கிருந்து தோணிகள் மூலம் தாழங்குடா, மாவிலங்குத்துறை, கல்லடி, நாவற்குடா மற்றும் மட்டக்களப்பு கருவப்பங்கேணி போன்ற பிரதேசங்களுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பாக விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் இரு குழுவினர் சனிக்கிழமை (23) காலை களப்புப் பகுதியை முற்றுகையிட்டனர்.

இதன்போது, உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 8 பரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை பொலிஸார் மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மற்றுமொரு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைத்தபோது, அங்கிருந்தவர்களும் தப்பியோடியுள்ளனர்.   அங்கிருந்து பிளாஸ்ரிக் போத்தல்கள் கொண்ட 4 மூட்டைகள், 8 ஊறல் பரல்கள் மற்றும் 2 தோணிகள் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, முதலைக்குடாப் பகுதியில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட, மாவிலங்குத்துறை மற்றும் தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரை 75,000 மில்லி லீட்டர் கசிப்புடன் பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!