நீர்கொழும்பு போலவலான பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது,
கண்டெய்னர் லொறிக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பிரதேச மக்கள், விபத்தில் தொடர்புடைய கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர். இதனை அடுத்து கட்டான பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சீர்செய்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கண்டெய்னர் லொறியின் சாரதி கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள், நீர்கொழும்பைச் சேர்ந்த சிரிவர்தன ஆராச்சிலாகே தலிஷ் நிம்நெத் சிரிவர்தன (18) மற்றும் தாகொன்ன, விஜேசுந்தர அப்புஹாமிலாகே கவிந்து ஹஷான் சோமதிலக (19) ஆகிய இரு இளைஞர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட கண்டெய்னர் லொறியின் சாரதி ஹிப்பலகெதர உதித திலங்க நிர்மல என்பவராவார். இவர் பன்னில தென்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!