ஆண்டாண்டு காலமாக உணரக்கூடிய விடயங்களை வைத்தே அரசியல் அதிகாரம் தீர்மானிக்கப்பட்டது. காணிகள், தொழிற்சாலைகள், இயற்கை வளங்கள், நிதி மூலதனம் ஆகியவையே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அடிப்படைகளாக இருந்தன.அரசியல் செய்திகள்
பாரம்பரிய முதலாளித்துவம் (Traditional Capitalism) உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. கம்பனிகள் பொருட்களை உற்பத்தி செய்தன. தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, இலாப நோக்கில் அவற்றை விற்பனை செய்தன.
இன்று இந்த முதலாளித்துவம் புதிய பரிமாணத்திற்குள் நுழைந்துள்ளது. இது தொழில்நுட்பம் கோலோச்சும் முதலாளித்துவம் (Techno-----Capitalism). இங்கு எண்ணெய்யோ காணியோ மாத்திரம் பெறுமதியான பண்டமல்ல. மனிதர்களின் தரவுகளும் (Data), கவனக்குவிப்பும் (Attention) முக்கியமான மூலதனங்களாக மாறியுள்ளன.
மெட்டா, கூகுள், டிக்டொக் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதர்களின் தரவுகளையும் நடத்தைகளையும் வணிகப் பொருட்களாக மாற்றுகின்றன.
செயற்கை நுண்ணறிவு, இரகசிய அல்கோரிதம் போன்ற கருவிகள் மூலம் எமது விருப்பங்களையும் சிந்தனைப் போக்குகளையும் கண்காணித்து, விளம்பரங்கள் வாயிலாக இலாபமீட்டுகின்றன. இதனை ஆய்வாளர்கள் கண்காணிப்பு முதலாளித்துவம் (Surveillance Capitalism) என்றும் அழைக்கின்றனர்.
இலாபத்தை அதிகரிப்பதற்காக மனித உளவியலின் பலவீனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கோபம், வெறுப்பு, அச்சம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் பதிவுகள் சமூக ஊடகங்களில் அதிக எதிர்வினைகளைப் பெற்றுத் தருகின்றன.
அமைதியான கொள்கை சார்ந்த விவாதங்களைவிட ஆவேசத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்தும் உள்ளடக்கங்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. இதுவே, மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை மூலதனமாக்கும் ஆவேசப் பொருளாதாரம் (Outrage Economy) எனப்படுகிறது.
முன்னர் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, மக்கள் அரங்குகள் ஆகியவை பொதுவிவாதங்களுக்கான முக்கிய களங்களாக இருந்தன.
அவற்றிலும் உரிமையாளர்களினதும் அரசியல் நலன்களினதும் செல்வாக்கு இருந்தது. ஆனால், இன்று அந்தப் பொதுவெளியின் பெரும்பகுதி கோடீஸ்வர வர்த்தகர்களுக்குச் சொந்தமான டிஜிட்டல் தளங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. தகவல்கள் எதை அடைய வேண்டும், எது பின்தள்ளப்பட வேண்டும் என்பதை அல்கோரிதங்கள் (Algorithmic) தீர்மானிக்கின்றன.
இதில் மறைமுகத் தடை (Shadow--banning), அல்கோரிதம் வழியிலான தகவல் ஒடுக்கம் (Algorithmic Suppression), செயற்கை நுண்ணறிவின் தகவல் வாயிற்காவல் (AI Gatekeeping) ஆகியவை முக்கியமானவை.
ஒருவரது பதிவை அவருக்குத் தெரியாமல் குறைவானவர்களிடம் கொண்டு சேர்ப்பது முதல், குறிப்பிட்ட தகவல்களைப் பரிந்துரைகளிலிருந்து நீக்குவது வரை இவை பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் சில சந்தர்ப்பங்களில் முறையான உள்ளடக்கக் கட்டுப்பாடாக இருந்தாலும், வெளிப்படைத்தன்மையற்ற பயன்பாடு அரசியல் பாரபட்சத்திற்கு வழிவகுக்கலாம்.
இஸ்ரேலின் ஹாரெட்ஸ் பத்திரிகை அண்மையில் நடத்திய ஆய்வு இதற்கொரு முக்கிய உதாரணம். சமூக ஊடகத் தளங்கள் பெஞ்சமின் நெதன்யாஹுவின் பதிவுகளை, அவரது அரசியல் போட்டியாளரான காடி ஐசென்கோட்டின் பதிவுகளைவிட மூன்று மடங்கு அதிகமாகப் பரிந்துரைத்ததாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.
நெதன்யாஹு மீதான ஆதரவும் எதிர்ப்பும் உருவாக்கிய அதிக ஈடுபாடு அவரது அரசியல் தெரிவுநிலையை மேலும் அதிகரித்திருக்கலாம். ஒரு தலைவரை அல்கோரிதம் (Algorithmic) கருத்தியல் ரீதியாக ஆதரிக்காவிட்டாலும், அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் அவருக்கு அரசியல் அனுகூலத்தை ஏற்படுத்த முடியும்.
பிரேசிலிலும் இதேபோன்ற சர்ச்சை எழுந்தது. ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தேர்தல் பிரசாரத் தரப்பு, மெட்டாவின் தளங்களில் தமது பதிவுகளின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியது.
மெட்டா ஏ.ஐ. கருவி, லூலாவுக்கு ஆதரவான படங்களை உருவாக்க மறுத்தபோதும், எதிர்த்தரப்பு வேட்பாளர் ஃப்ளேவியோ பொல்சனாரோ தொடர்பான படங்களை உருவாக்கியதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
இதையடுத்து பிரேசிலின் உயர்மட்ட தேர்தல் நீதிமன்றம் (TSE), இரு வேட்பாளர்களுக்கும் சமமான அணுகுமுறையைப் பின்பற்றுமாறு மெட்டாவுக்கு உத்தரவிட்டது.
உத்தரவை மீறினால் நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் பிரேசில் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தது. மெட்டா இதனைத் தொழில்நுட்பக் கோளாறுகளுடன் தொடர்புபடுத்தியதுடன், திட்டமிட்ட அரசியல் பாரபட்சம் இல்லை என மறுத்தது.அரசியல் செய்திகள்
பூகோள தெற்கு (Global South) எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. சமூக ஊடகம் நடுநிலையான பொதுவசதியோ இலவசப் பரிசோ அல்ல. அது இலாபத்தை நோக்கமாகக் கொண்ட தனியார் வணிகம். அந்நிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நாட்டின் டிஜிட்டல் வெளியை ஆதிக்கம் செலுத்தும்போது, அதன் டிஜிட்டல் இறையாண்மையும் ஜனநாயக சுதந்திரமும் கேள்விக்குள்ளாகின்றன.
இலங்கை போன்ற நாடுகளில் இன, மத, அரசியல் பிளவுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் இலாபமீட்டும் வாய்ப்புகளாக மாற்றும் இந்தப் போக்கின் ஆபத்தை உணர வேண்டியிருக்கிறது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரம் மட்டுமன்றி, அவற்றுடன் இணைந்து செயல்படக்கூடிய அரச அதிகாரத்தின் செல்வாக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுதந்திர சிந்தனையை மீட்டெடுப்ப தற்கான முதற்படி தொழில்நுட்ப முதலாளித்துவத்தைப் புரிந்துகொள்வதாகும். தொழில்நுட்பப் பெருநிறுவனங்களின் நிறந்தீட்டப்பட்ட சாளரங்கள் ஊடாகவே அரசியல் உண்மைகளைத் தொடர்ந்து நோக்குவோமாயின், சுதந்திரமாகச் சிந்தித்து வாக்களிக்கும் குடிமக்களாக நாம் இருக்க முடியாது.
மாறாக, கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டல் அதிகாரக் கட்டமைப்புகளால் கையாளப்படும் வெறும் தரவுப் புள்ளிகளாகவே (Data Points) மாறிவிடுவோம்.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!