news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கனடாவில் தொழில் வாய்ப்பு – இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் !

17 Nov, 2026
கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், முக்கிய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், திறன்சார் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முன்னுரிமைத் தொழில்துறைப் பிரிவுகளை கனடா அறிவித்துள்ளது.

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் தனது எக்ஸ்பிரஸ் என்ட்ரி குடிவரவு முறைமையின் ஊடாகப் பல்வேறு துறைகளில் அனுபவமுள்ள நிபுணர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதன்படி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், தகைமையுடைய தொழிலாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பணியாற்றுவோர் மற்றும் போக்குவரத்துத் துறைசார் நிபுணர்கள் ஆகியோர் முன்னுரிமைப் பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கனடாவில் பணி அனுபவமுள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவப் பொறுப்புகளில் பணியாற்றுவோருக்கும் இந்த அறிவிப்பின் ஊடாக வாய்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்துடன், பிரெஞ்சு மொழித் திறன் கொண்டவர்களும் எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறைமையின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் பிரிவினராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

கனடாவின் தற்போதைய தொழிலாளர் வளத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கூடிய திறன்மிக்க நபர்களை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்பது கனடாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற விரும்பும் திறன்மிக்க வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடிவரவு விண்ணப்பங்களை நிர்வகிக்கும் முறைமையாகும்.

இந்த முறைமையின் கீழ், குறிப்பிட்ட தொழில்துறைத் தகுதிகள், பணி அனுபவம் அல்லது மொழித் திறன் கொண்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, பிரிவுசார் தெரிவு முறையின் ஊடாக நிரந்தர வதிவிடத்துக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்புகள் விடுக்கப்படலாம்.

கனடாவில் குடியேறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் இலங்கையின் திறன்மிக்க தொழில்முறை நிபுணர்களுக்கும் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இருப்பினும், அவர்கள் கனடா குடிவரவுத் திணைக்களம் நிர்ணயித்துள்ள தகைமைகள் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.தீவுகள் ஆராயுங்கள்

எக்ஸ்பிரஸ் என்ட்ரி பிரிவுசார் தெரிவுகள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான அழைப்புகள் தொடர்பான மேலதிக தகவல்களை கனடாவின் உத்தியோகபூர்வ குடிவரவு இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!