news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ; இழுபறி நிலையில் தொழிலாளர் காணி உரிமை

10 Sep, 2026
பெருந்தோட்டத் தொழிலாளர் காணி உரிமை பற்றி பேசும் போதெல்லாம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கம்பனிகள் அதற்கு தடையாக உள்ளன என்ற கதைகளையே கூறி வருகின்றார். 

தேர்தல் பிரசார காலத்தில் அவர் கம்பனிகளைப் பற்றி ஒன்றும் கதைக்கவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உரிமையைப் பெற்றுத்தருவோம் என்றே கூறினார். 

கடந்த மாதம் 28 ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் பூனாகலை தோட்ட கபரகல பிரிவில் நவோதயபுரம் வீட்டுத்திட்டத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார   ‘ மத்திய மலை நாடானது நாட்டின் இதயமாகக் கருதப்படுகின்றது ‘ என்று கூறியதுடன்  அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை வலியுறுத்தினார். 

மட்டுமின்றி அதற்கான பொறுப்புகளை வகிக்கும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து, முழுமையான அதிகாரங்களைக் கொண்ட மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகாரசபையை அமைப்பதற்கான சட்டத்தை இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

கடந்த மாதம் 5 ஆம் திகதி  தமிழ்ப் பேசும் கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்த போது மலையக சமூகத்துக்கான காணி உரிமைப் பற்றி உரையாடப்பட்டது. 

அதன்  போது  அவர் மத்திய மலை நாட்டின்  நிலையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே அந்த சிக்கலுக்கான தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அதற்காகத் தற்போது தனி அதிகாரசபையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

 ஜனாதிபதி கூறும் மலையக பாதுகாப்பு அதிகார சபை யாரை பாதுகாக்க கொண்டு வரப்படப் போகின்றதென்பது புரியாத புதிராக உள்ளது. 

நல்லாட்சி காலத்தில் மலையக சமூகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் வகையில் கொண்டு வரப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகாரசபை என ஒரு அமைப்பு இருக்கும் போது புதிய அதிகார சபையொன்று எதற்கு என்ற கேள்வி அச்சந்தர்ப்பத்தில் எழுந்திருந்தது. 


 


நட்டமடையும் அரச நிறுவனங்கள் பட்டியலில் மலையக அதிகார சபையை உள்ளீர்த்து அதை கலைப்பதற்கான முயற்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம்.   தற்போது அவ் அதிகார சபையை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்க தரப்பில் கூறப்பட்டாலும் அப்படி எதுவும் அதிசயங்கள் இடம்பெறவில்லை. அது உறங்கு நிலையிலேயே உள்ளது.

இவ்வாறிருக்கும் போது ஜனாதிபதி மலையக பாதுகாப்பு அதிகார சபை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் அக்கறை செலுத்துகின்றார். அவரது இந்த முயற்சி மலையக பெருந்தோட்ட மக்களின் நெடுநாள் கனவான காணி உரிமையை இழுபறியாக்கும் ஒரு  விடயமாக அமையலாம் என்ற சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது. 

தமிழப் பேசும் கட்சிகள் காணி உரிமை பற்றி பேசிய போது அவர் கம்பனிகளை காரணங் காட்டி அதைத் தவிர்க்க முயன்றார்.  அதே வேளை பூனாகலை நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி  ‘காணிகள் தொடர்பாகப் பெரியதொரு பிரச்சினை நிலவுவதை நான் அறிவேன்.தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கம்பனிகள் இலகுவில் காணியை வழங்க தயாராக இல்லை.

இருப்பினும் இந்த கம்பனிகளுடனான ஒப்பந்தங்கள் 2042 ஆம் ஆண்டளவில் நிறைவடையவுள்ளன.ஏற்கனவே அமைச்சு அந்த ஒப்பந்தங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காகக் குழுவொன்றை நியமித்து ஆராய்ந்து வருகின்றது.

நாம் மிக விரைவாக அந்த ஒப்பந்தங்களை நிறைவுக்குக் கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்.ஆனால் அதில் முக்கியமான ஒரு சரத்து சேர்க்கப்படும்.அதாவது, இந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சரத்துக்களை உள்ளடக்கியே அடுத்தகட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறித்து நாம் கவனம் செலுத்துவோம்’ என அவர் கூறியிருந்தார்.

கம்பனிகள்   ஜனாதிபதி அநுரவையும் தமது கட்டுப்பாட்டுக்குள்      கொண்டு வந்து விட்டன  என்று தான் கூற வேண்டியுள்ளது. ஏனெனில் குத்தகை ஒப்பந்தம் பற்றிய எந்த தெளிவும் இல்லாமல் அன்று ஜனாதிபதி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


1992 ஆம் ஆண்டு 53 மற்றும் 99 வருட குத்தகைக்கே தோட்டங்கள் கம்பனிகளின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதாவது சில  தோட்டங்கள் 53 வருடங்களுக்கும் ஒரு சில  தோட்டங்கள் 99 வருடங்களுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டன. 53 வருடங்களுக்கு  ஒப்பந்தம் செய்யப்பட்ட தோட்டங்களின் குத்தகை காலம் எதிர்வரும் 2045 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது.99 வருட குத்தகை ஒப்பந்தம் 2091 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும். 

அதற்கிடையில் ஜனாதிபதி கம்பனிகளுடனான ஒப்பந்தங்கள் 2042 ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதாக கூறியிருக்கின்றமை தற்செயலான விடயமா அல்லது அவருக்கு தவறான தரவுகள் வழங்கப்பட்டனவா என்று ஆராய வேண்டியுள்ளது. 

மேலும் 53 வருட ஒப்பந்த காலம் முடிய இன்னும் 19 வருடங்கள் இருக்கையில் ஏன் அவசர அவசரமாக ஒப்பந்த காலத்தை நீடிக்க வேண்டும்? 

 தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் ஜனாதிபதி கூறிய தொகைக்கு எந்த எதிர்ப்புகளும் இல்லாமல் கம்பனிகள் அதற்கு தலையசைத்தமைக்கு சில நிபந்தனைகளை அவர்கள் சார்பில் முன் வைத்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகின்றது.  

தமது ஒப்பந்த காலத்தை நீடிப்பதற்கான ஒரு நிபந்தனையும் அதில் உள்ளடங்கியிருக்கலாம். மகிந்த , மைத்ரி, கோட்டாபாய, ரணில் ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே கம்பனிகள் எதற்கும் அடிபணியாத தமது குணத்தை தொழிலாளர்களின் சம்பள விவகாரங்களில் வெளிப்படுத்தியிருந்தன. 

பலமான தொழிற்சங்கங்களாலும் கம்பனிகளை எதிர்த்து சம்பள விடயத்தில் பேரம் பேச முடியவில்லை. என்ன தான் போராட்டங்கள் ,வேலை நிறுத்தங்களை தொழிலாளர்கள் செய்தாலும் இறுதியில் கம்பனிகள் தீர்மானித்த ஒரு தொகையே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டு வந்தது. இதை எவரும் மறுக்க முடியாது.  

முடியுமானால் அரசாங்கம் தோட்டங்களை எடுத்து நடத்தட்டும் பார்க்கலாம் என கம்பனிகள் பல தடவைகள்  சவால் விட்டிருந்தன. இப்போது ஜனாதிபதி அநுரவின் சம்பள கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள கம்பனிகள், அரசாங்கத்தை தமது பொறிக்குள் விழ வைத்துள்ளன என்று தான் கூற வேண்டும். அந்தப் பொறி  தோட்டங்களின் குத்தகை காலத்தை நீடிப்பதாகவே இருக்க வேண்டும். 

ஜனாதிபதிக்கு  அவ்வொப்பந்தத்தின் சரத்துகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள்   கிடைக்குமா என்பது தெரியவில்லை. அவர் நியமித்துள்ள குழுவின்  அதிகாரிகள் என்ன பரிந்துரைகளை செய்யப்போகின்றனர், என்ன சரத்துகளை சேர்க்கப் போகின்றனர் அல்லது அகற்றப்போகின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் 1992 ஆம் ஆண்டிலிருந்து இம்மக்களின் சம்பள கூட்டு ஒப்பந்தம் மற்றும் நலன்புரி ஒப்பந்தங்களின் தொழிற்சங்க உரிமைகளைக் கொண்டிருக்கக் கூடிய மலையக தொழிற்சங்கங்களின் தலையீடின்றி ஜனாதிபதி எவ்வாறு குத்தகை ஒப்பந்தத்தை நீடிக்கப் போகின்றார்? 

முதலில் இவ் ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி எவ்வாறு தன்னிச்சையான முடிவுகளை எடுக்கலாம் என்ற கேள்வியை ஏன் இதுவரை மலையகத் தொழிற்சங்கங்கள் எழுப்பாமல் உள்ளன? ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் சரத்துகள் காரணமாகவே தொழிலாளர்களுக்கான காணி உரிமை இலகுவாக மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை மறுக்க முடியாது. 

எனவே மலையக பாதுகாப்பு அதிகார சபையானது கம்பனிகளை பாதுகாப்பதற்கா  அல்லது தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கா  ஸ்தாபிக்கப்படப் போகின்றது என்பது குறித்த உண்மைகளை மலையக சமூகம் அறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமக்கு ஒரு நல்ல பாதையை காட்டும் என்ற நம்பிக்கை மலையக பெருந்தோட்ட மக்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையை கட்சியானது தனது தேர்தல் பிரசார காலத்தில் அவர்கள் மனதில் ஆழமாக விதைத்து விட்டது. 

அதன் ஆரம்பமாகவே அரசாங்கம் தனது நிதியில்  பூனாகலை நவோதயகம வீட்டுத்திட்டத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. சகல வசதிகளும் இருந்தும் அவ்வீட்டுத்திட்டத்த பயனாளிகளுக்கு வீட்டுரிமைப் பத்திரம் வழங்கப்படாமல் புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணம் ஒன்றே வழங்கப்பட்டுள்ளது. 

முறையான உறுதிப் பத்திரம் வழங்குவதற்கு குறித்த தோட்டத்தின் கம்பனி நிர்வாகம் அரசாங்கத்துக்கு என்ன நிபந்தனைகளை முன் வைத்தது என்பது தெரியாது. 

ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டுமானால் தேயிலைச் செடிகள் உள்ள பூமியைத் தவிர மற்றையது அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை சரத்து உள்ளடக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதி கம்பனிகளிடம் ஒரு நிபந்தனையை முன் வைத்திருந்தால் அது வரவேற்கத் தக்கதாகும். 

அதன் பிறகு தொழிலாளர் குடியிருப்பு சார்ந்த காணியை அவர்களுக்கு உரித்தாக்குவதில் சட்டச் சிக்கல்கள் இருக்காது.  ஆனால் இதற்கு கம்பனிகள் சம்மதிக்குமா என்பது தெரியவில்லை. 

தொழிலாளர் காணி உரிமை விடயத்தில் கம்பனிகளை பலகீனமாக்கும் விதமாக ஜனாதிபதி குத்தகை ஒப்பந்தத்தில் மாற்றங்களை கொண்டு வருவாராயின் கம்பனிகள் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் சில கட்டுப்பாடுகளை உருவாக்கக் கூடும். எனவே இவ்விடயத்தில் ஜனாதிபதி கம்பனிகளுடன் சற்று விட்டுக்கொடுப்புடன் தான் நடந்து கொள்ள வேண்டி வருமோ தெரியாது. ஆனால் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரையில் தொழிலாளர் காணி உரிமை விவகாரம் இழுபறியில் தான் இருக்கும் என்றும் கூறலாம்.

சி.சி.என்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!