ளுத்துறை - நாகொட பகுதியில் அமைந்துள்ள விடுதிக்குள் நுழைந்து, அதன் உரிமையாளரான 'டிராகன் சம்பத்' மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரதான கூலிப்படை துப்பாக்கித்தாரி உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு - நாவலடி பகுதியில் வைத்து காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கித்தாரி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடர்புபட்டிருந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யுத்தம் நிலவிய காலத்தில் எல்.டி.டி.இ. கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வசித்தவர் என்பதோடு, டீ-56 ரக ஆயுதங்களை மிகத் துல்லியமாகக் கையாளும் திறன் கொண்டவர் என்பதால், அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த துப்பாக்கித்தாரி எல்.டி.டி.இ. அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்பது தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை (11) வரை எத்தகைய உறுதிப்படுத்தலையும் செய்யவில்லை. அத்துடன், குறித்த சந்தேக நபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் புனர்வாழ்வுப் பட்டியலில் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்தச் சந்தேக நபர் குறித்து விரிவான விசாரணைகள் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஒரு புலி உறுப்பிவராகச் செயற்பட்டதாக அவர் எவ்வித வெளிப்படுத்தலையும் செய்யவில்லை என காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
நாகொட பகுதியில் கடந்த 09ஆம் திகதி காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதி உரிமையாளரின் மனைவியான சிரோமி சமரவீர, ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை உயிரிழந்தார்.
சுட்டிகாரரால் டீ-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி 30 ரவைகளுக்கு மேல் இந்தத் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் விடுதி உரிமையாளரான துஷார சம்பத் எதிரிசிங்க என்ற 'டிராகன் சம்பத்' சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பான சீ.சீ.டீ.வி. (CCTV) காணொளிகள் மற்றும் தொலைபேசிப் பகுப்பாய்வு அறிக்கைகளின் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், துப்பாக்கித்தாரிகளை உடனடியாக அடையாளம் கண்டிருந்தனர்.
இதற்கமைய, களுத்துறை கொட்தாச குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படைப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல காவல்துறைப் பிரிவுகள் இணைந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் ஊடாகவே இந்தச் துப்பாக்கித்தாரி கூண்டோடு பிடிபட்டுள்ளார்.
முப்பத்தைந்து வயதுடைய குறித்த பிரதான துப்பாக்கித்தாரி, பாலாவியப் பகுதியைச் சேர்ந்தவராவார். விசாரணைகளில் தெரியவந்த தகவலின்படி, இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் களுத்துறை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு மூன்று இடங்களில் தங்கியிருந்து, தாக்குதலுக்கான கட்டளை வரும் வரை அவர் காத்திருந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 09ஆம் திகதி காலை 7.50 மணியளவில் தனது தாக்குதலை நடத்திய துப்பாக்கித்தாரி, தான் வந்த மோட்டார் சைக்கிளிலேயே அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அன்றைய தினம் மதியம் கொழும்பு - புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த அவர், பாலாவியிலுள்ள தனது வீட்டிற்குச் செல்லும் நோக்கில் மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் பேருந்து ஒன்றில் ஏறிச் சென்றுள்ளார்.
எனினும், அதற்குள் துப்பாக்கித்தாரியை விசாரணை அதிகாரிகள் சரியாக அடையாளம் கண்டிருந்தனர். அவர் பயணிக்கும் பகுதிகளைத் துல்லியமாகக் கண்டறிந்த புலனாய்வு அதிகாரிகள், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர்.
துப்பாக்கித்தாரி மட்டக்களப்பு பேருந்தில் பயணிப்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள், அவரை கைது செய்யுமாறு வாழைச்சேனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு அறிவித்துள்ளனர். அதற்கமைய, நாவலடி சந்திப் பகுதியில் வைத்து துப்பாக்கித்தாரி பயணித்த பேருந்தை வழிமறித்த விசேட அதிரடிப்படையினர் அவரைக் கைது செய்தனர்.
சந்தேக நபரின் பிரயாணப் பையைச் சோதித்தபோது, அதிலிருந்து 40 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் 6 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இவர் கடுமையான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாழைச்சேனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்டையே, இந்த இரட்டைப் படுகொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றும் உளவு பார்த்த மற்றுமொரு இரு சந்தேக நபர்களையும் களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
விசாரணை அதிகாரிகளின் தகவல்படி, 'டிராகன் சம்பத்' மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டமைக்கு போதைப்பொருள் கடத்தல்காரரான 'போம்புவல நவீன்' என்பவரே பிரதான காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
நவீனின் உத்தரவுக்கு இணங்க, துபாயில் தலைமறைவாகியுள்ள தொட்டங்கொட தனுக்க மற்றும் நிபுண என்ற போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரே இந்தத் தாக்குதலை நெறிப்படுத்தியுள்ளதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட 'டிராகன் சம்பத்' தனக்கு நெருக்கமான நண்பராக இருந்தபோதிலும், போதைப்பொருள் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத பணத்தை சட்டப்பூர்வமான பணமாக மாற்றுவதில் அவர் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தப் பணப் பரிமாற்றம் தொடர்பாக ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தீவிரமாகச் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், 'டிராகன் சம்பத்' மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளை அவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் முற்றாக நிராகரித்துள்ளனர். அவர் எந்தவொரு போதைப்பொருள் கடத்தல்காரருடனும் தொடர்புகளைப் பேணவில்லை எனவும், போதைப்பொருள் வர்த்தகத்துடன் அவருக்கு எந்தவிதத் தொடர்பும் கிடையாது எனவும் அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!