காசாவில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் காசா எங்கும் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் மேலும் பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரில் இருந்து பாதுகாபபு அளிக்கும் கூடாரங்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.பேரிடர் உதவி கிட்
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரின் மேற்கே உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் மீது நேற்று (12) அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசல் தெரிவித்துள்ளார்.
கான் யூனிஸ் நகரிலுள்ள வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 20 பேர் காயமடைந்ததுடன், பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் மஹ்மூத் பசால் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களில் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காசா நகரின் தெற்கே அல் சப்ரா பகுதியில் இஸ்ரேல் கடந்த புதன்கிழமை நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 38 வயது முஹமது சலம் அல் தாஷ் என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
மத்திய காசாவின் அல் புரைஜ் முகாமில் இஸ்ரேலிய படையினரால் மற்றொரு பலஸ்தீனர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதோடு காசா நகரின் வடக்கே அல் நாசர் பகுதியில் இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதலில் மற்றொருவர் பலியாகியுள்ளார்.
அதேபோன்று காசா நகரின் வடக்கே ஷெய்க் ரத்வான் பகுதியில் இடம் பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் குறைந்தது இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் பொதுமக்களை கண்மூடித்தனமாக இலக்கு வைத்து நடத்தப்படுவதாக காசாவில் உள்ள அல் ஜசீரா செய்தியாளர் விபரித்துள்ளார். உயிர்வாழ்வதற்கான எளிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் கூட உயிரிழந்ததாகக் குறிப்பிட்ட அவர், ‘நீர் தாங்கி ஒன்றில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்த ஒருவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்’ எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் இஸ்ரேல் தினசரி அங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களில் 1,622 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 5,878 பேர் காயமடைந்திருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது..
இதன்படி காசாவில் கடந்த 2023 ஒக்டோபரில் போர் ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 74,653 ஆக அதிகரித்திருப்பதோடு 176,007 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
காசாவில் கடும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலேயே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வார இறுதியில் பெய்த மழையினால் குறைந்தது 70,000 கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அந்தப் பகுதிக்கு மேலும் கூடாரங்களை அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மைய நாட்களில் பெய்த கனமழையினால் காசாவில் குறைந்தது 106,000 பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளும் நிரம்பி வழிந்து வெள்ளநீர் முகாம்களுக்குள் கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் காசாவிற்குள் நுழைவதை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்படுத்தி வரும் நிலையில், இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவையான வளங்களோ அல்லது ஆற்றலோ தங்களிடம் இல்லை என அரச சார்பற்ற நிறுவனங்களும் உள்ளூர் அமைப்புகளும் தெரிவிக்கின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!