news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காலி மருத்துவ பீட மாணவியின் மரணத்தில் மர்மம் நீடிப்பு : நீதிமன்றம் திறந்த தீர்ப்பு!!

09 Nov, 2026
காலி – கிந்தோட்டை பகுதியில் புகையிரதப் பாதைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையில், மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் திறந்த தீர்ப்பு (Open Verdict) வழங்கப்பட்டுள்ளது.ஆன்மீகம் பார்

காலி, கராப்பிட்டிய மருத்துவ பீடத்தில் கல்வி பயின்று வந்த ஒலொக்குவ பட்டபெந்திகே கவிந்தி யுத்மினி டி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி காமினி குலசிங்க, மருத்துவ அறிக்கைகள் மற்றும் விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மாணவியின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட செயற்பாட்டின் விளைவா என்பது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 மரண விசாரணையின்போது சாட்சியமளித்த மாணவியின் தந்தை, தனது மகள் மூன்றாவது முயற்சியில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகி மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்த விஷ்மித விஷாரத விஜயநாயக்க என்பவரை கடந்த ஓகஸ்ட் மாதம் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தில் பாரிய முரண்பாடுகள் எதுவும் இருக்கவில்லை என்றும் தந்தை சாட்சியமளித்துள்ளார். எனினும், கல்விச் சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், சிறிது காலம் தனிமையில் இருக்க விரும்புவதாகவும் மாணவி உறவினர்களிடம் தெரிவித்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருக்கு குடும்பத்தினர் ஆதரவளிக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் திகதி கிந்தோட்டை பகுதியில் நடைபெற்ற சமூக சுகாதாரத் திட்டமொன்றில் பங்கேற்ற பின்னர், மாணவி மீண்டும் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அன்றைய தினம் பிற்பகல் அவரைச் சந்தித்த கணவரிடமும் தனிமையில் இருக்க விரும்புவதாக மாணவி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அன்றைய மாலை தனது கணவர் மற்றும் பெற்றோருக்கு மாணவி குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். அவற்றைப் பார்த்த குடும்பத்தினர் கவலையடைந்து அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மறுநாள் அதிகாலை மாணவியின் தந்தை மருத்துவ பீட விடுதிக்குச் சென்றுள்ளார்.கோர்ஸ் சேர்


அங்கு மகளைக் காண முடியாத நிலையில், அவரது நண்பர்களிடமும் விசாரித்துள்ளார். எனினும், மாணவி தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாணவி விடுதியில் இல்லை என்ற தகவலை அறிந்த அவரது கணவரும் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார்.


நவம்பர் 3ஆம் திகதி காலை புகையிரத நிலைய ஊழியர் ஒருவர் மாணவியின் சடலத்தைக் கண்டுபிடித்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். மரண விசாரணையின்போது, மாணவியின் உடலில் புகையிரதம் மோதியதால் ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடிய காலப்பகுதியில் அந்தப் பாதையில் பயணித்த இரண்டு புகையிரதங்களின் சாரதிகளும் இவ்வாறான சம்பவம் எதனையும் அவதானிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.காப்பீடு பெறு

இதனால், மாணவி மீது மோதிய புகையிரதம் எது என்பதையும், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதையும் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

அத்துடன், தனது மகளின் மரணத்தில் மற்றொரு நபருக்குத் தொடர்பு இருப்பதாகத் தாம் சந்தேகிக்கவில்லை என மாணவியின் தந்தை மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் எச்.டி. வீரரத்னவின் மருத்துவ அறிக்கைகளும் மரண விசாரணையின்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.

எனினும், மரணத்திற்கான சூழ்நிலைகளையும் காரணத்தையும் உறுதிப்படுத்தப் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆன்மீகம் பார்

புகையிரத நிலைய அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் மேலதிக தகவல்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளின் முடிவுகள் மூலம் மாணவியின் மரணம் தொடர்பான உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர், கணவர் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைகள் நிறைவடைந்து அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை, மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!