news@ilakkiyainfo.com

பிரிவுகள்

குகை ஒன்றில் தங்கியிருந்தபோது குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயது சிறுமியின் காதல் கதை

16 Nov, 2026
உடுதும்பரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரம்பகெட்டிய பகுதியில் உள்ள மலை உச்சியிலுள்ள குகை ஒன்றில் தங்கியிருந்தபோது குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயது சிறுமி தொடர்பான சம்பவத்தில், உடுதும்பரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது சந்தேகநபரை ஐந்தாயிரம ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க தெல்தெனிய நீதிவான் கமல் சஞ்சய ஜெயதிலக உத்தரவிட்டார்.

இவ்வாறு நீதிமன்றத்தால் சரீரப் பிணை விதிக்கப்பட்டது நுகேதென்னையைச் சேர்ந்த எம். ரவி சந்திரன் (23) என்பவருக்கு ஆகும்.

உடுதும்பரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித தொம்பனவின் மேற்பார்வையின் கீழ், உடுதும்பரை பொலிஸாரால் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரன் (36) என்ற நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர் 23 வயது சந்தேகநபரின் மாமா என பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

காதலர்களின் காதல் கதை

குகையில் வாழ்ந்த இந்த விசித்திரமான காதல் கதை பொலிஸில் அம்பலமானது.

பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட 23 வயது இளைஞர் ஹுன்னஸ்கிரியவைச் சேர்ந்தவராவார். சிறுமியும் அந்த இளைஞர் வசித்த வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர்.

பெற்றோர் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், சிறுமி பாடசாலைக்குச் செல்லும் காலத்தில் வீட்டுக்கு அருகில் வசிக்கும் இந்த இளைஞருடன் காதல் தொடர்பைப் பேணி வந்துள்ளார்.

இதன் இறுதி விளைவு அவர் கர்ப்பமடைவதில் முடிந்தது.

தொடக்கத்தில் இதைப் பற்றி எதையும் அறியாத சிறுமி வழமை போல பாடசாலைக்கும் சென்றுள்ளார்.

தன் கருவில் ஒரு உயிர் உருவானது குறித்து அவருக்குப் பெரிய அளவில் புரிதல் இல்லாவிட்டாலும், தன் மூலமாகத்தான் அவள் கர்ப்பம் தரித்தாள் என்பதை இளைஞர் அவளது வயிறு பெரிதாகிய பின்னர்தான் அறிந்துகொண்டார்.

"என்னால் என் காதலி கர்ப்பமானதை நான் அவளுக்குச் சொல்லும் வரை அது பற்றி அவளுக்குப் பெரிய அறிவு இருக்கவில்லை. 

நான் அவளிடம் நாம் இருவரும் ஓடிப்போய் மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் குழந்தை சற்று வளரும் வரை வாழ்வோம் என்று யோசனை கூறினேன். அவளும் அதற்குச் சம்மதித்தாள். சமூகத்திடமிருந்து கிடைக்கும் நிந்தனைகளையும் அவமானங்களையும் கேட்க விருப்பம் இல்லாததால்தான் நான் அத்தகைய யோசனையை அவளிடம் கூறினேன். அப்போது அவளது கருவுற்ற காலம் சுமார் எட்டு மாதங்களாகும்."

"நாங்கள் இருவரும் மலை உச்சியில் உள்ள குகை ஒன்றைச் சுத்தம் செய்து அங்கு வசிக்கத் தொடங்கினோம். எனது மாமா ஒருவரும் எங்களுடன் குகையில் வசிக்க வந்தார். 

நான் அங்கு காய்கறி பயிரிட்டேன். கித்துள் மரத்தைக் செதுக்கி கள்ளிறக்கி, அவற்றை காய்ச்சி கித்துள் பாணி தயாரித்தேன். கித்துள் கருப்பட்டியும் செய்தேன். இவற்றை விற்பனை செய்துதான் எங்களுக்குத் தேவையான சிறு சிறு பொருட்களை வாங்கிக் கொண்டோம்."

"கித்துள் கருப்பட்டியையும் பாணியையும் வாங்கிச் செல்ல வாரத்திற்கு ஒருமுறை ஒருவர் நாங்கள் வசிக்கும் குகைக்கு வருகிறார். நாங்கள் அவற்றை விற்பனை செய்து பணம் பெற்றுக் கொள்வோம். நாங்க மலையில் உள்ள குகையில் வசிப்பது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவரிடமும் சொல்லியிருந்தோம், அவரும் அந்த ரகசியத்தைப் பாதுகாத்தார்."

"எங்கள் மூவருக்குத் தேவையான அரிசி, பருப்பு, சீனி, மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்து தருவது கித்துள் கருப்பட்டியையும் பாணியையும் வாங்க வருபவர்கள்தான். கைப்பேசியின் மின்கலன் (Battery) தீர்ந்ததும் அதனை மின்னூட்டம் (Charge) செய்து கொண்டு வந்து தருபவர்களும் அவர்கள்தான்."

பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட 23 வயது இளைஞர் விசாரணையின் போது இவ்வாறு தெரிவித்ததாக அறியமுடிகிறது.
குகை வாழ்க்கை மற்றும் பிரசவம்

பொலிஸ் விசாரணையின் போது அவர் மேலும் தெரிவித்தவை இவ்வாறு:

"குகைக்குக் குடியிருக்க வந்த பிறகு நாங்கள் எப்போதுமே மலையிலிருந்து இறங்கி கிராமத்திற்கு வந்ததே இல்லை. மனைவியை எப்போதுமே மருத்துவ சிகிச்சைகளுக்கு அழைத்துச் சென்றதும் இல்லை. நான் அவளை என்னால் இயன்றவரை நன்றாகப் பார்த்துக் கொண்டேன். குழந்தை பிரசவிக்கும் காலம் நெருங்கியபோது வீட்டின் அத்தனை வேலைகளையும் செய்தவன் நான்தான்."

"நாங்கள் இருவரும் மிகவும் அன்பாகக் குகையில் வாழ்ந்தோம். அவளுக்கும் என் மீது அளவுகடந்த பாசம் இருந்தது. நாங்கள் இருவரும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்யாவிட்டாலும் அவள் என் மனைவி, சந்தர்ப்பம் கிடைக்கும் ஒரு வேளையில் அவளைச் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளத்தான் எண்ணியிருந்தேன்."

"பயிரிட்டப்பட்ட பொருட்கள்தான் உணவுக்குப் பயன்படுத்தினோம். அதனுடன் பூசணி, பலாக்காய் ஆகியவற்றை நிறையச் சாப்பிட்டோம். இறைச்சி, மீன் என்கிற பேச்சுக்கே இடமிருந்ததில்லை. உணவுக்கு ஏற்ற கீரை வகைகளைத் தேடிப் பறித்து வந்து சமைத்துச் சாப்பிட்டோம்."

"மனைவிக்கு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிரசவ வலி உண்டானது. பிரசவம் பார்த்தது நான்தான். முன்கூட்டியே தயாராக வைத்திருந்த கத்தரிக்கோலால் நச்சுக் கொடியை (Umbilical cord) வெட்டினேன். அதன் பிறகு ஒரு வகையான எண்ணெயைத் தடவினேன். கீரை வகைகளைக் கொதிக்க வைத்து மனைவியைக் குளிக்க வைத்தேன்."

"மனைவி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது ஆகஸ்ட் 30 ஆம் திகதி பகல் 1.58 மணியளவில் ஆகும். எனது கைப்பேசியில் குழந்தை பிறந்த நேரத்தைப் பார்த்து ஞாபகம் வைத்துக் கொண்டேன். 

இப்போது குழந்தைக்கு இரண்டரை மாதங்கள் ஆகின்றன. குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இன்னும் பெயரிடவும் இல்லை. குழந்தை பிறந்த பிறகாவது மருத்துவக் கிளிங்குக்கு அழைத்துச் செல்லவில்லை. குழந்தைக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகள் கூட வழங்கப்படவில்லை. நீரைச் கொதிக்க வைத்து பாணி காய்ச்சப் பயன்படுத்திய இரும்புச் சட்டியில் போட்டுத்தான் குழந்தையைக் குளிப்பாட்டினேன்."

"குழந்தைக்கு ஒன்று, இரண்டு ஆண்டுகள் சென்ற பிறகு நாங்கள் இருவரும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டு குழந்தைக்குப் பெயரிட்டுப் பிறப்புச் சான்றிதழ் தயாரிக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அதனுடன் பிறந்த நேரத்தைக் கொடுத்துக் குழந்தையின் ஜாதகத்தையும் தயாரிக்க இருந்தோம். அதுவரை சமூகத்திடமிருந்து மறைந்து வாழத்தான் முடிவு செய்திருந்தோம்."

காதலி கர்ப்பமானதை அறிந்தும் கருவைக் கலைக்கவோ அல்லது குழந்தை பிறந்த பிறகு குகையில் கைவிட்டுவிட்டுச் செல்லவோ இந்த இருவருக்கும் எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் அவ்வாறு செய்யாதது உண்மையான  மனிதத்துவத்தையும் உண்மையான அன்பையும் காட்டுகிறது.

கர்ப்பத்தைக் கலைப்பவர்கள் அல்லது குழந்தை பிறந்த பிறகு வீதிகளில் கைவிட்டுச் செல்லும் நபர்கள் உள்ள சமூகச் சூழலில் இவர்கள் இருவரும் அவ்வாறு செய்யாதது பாராட்டத்தக்கது.


மருத்துவமனை அனுமதி மற்றும் பெற்றோர் அதிர்ச்சி

சிறு வயது தாயையும் அவள் பெற்றெடுத்த சிசுவையும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் அவசியமான சிகிச்சைகளை வழங்குவதற்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுமியைக் கர்ப்பமாக்கிய 23 வயது இளைஞரும் அந்த இளைஞரின் உறவினரும் பொலிஸ் விசாரணைகளின் முடிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சிறு வயது தாய் பொலிஸாரால் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து அவளது பெற்றோரும் பொலிஸாருக்கு அழைக்கப் பட்டனர்.

"மகள் வயிற்றுப் பகுதி பெரிதாகியிருந்தது. ஆனால் மகள் கர்ப்பிணியாகிவிட்டாள் என்பது பற்றி எங்களுக்குத் துளியளவும் தெரியாது. மகள் தொடர்ந்து பாடசாலைக்கும் சென்றதால் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. உடல் பருமனடைந்து வருகிறது என்றுதான் நினைத்தோம்."

எனச் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் மாஅதிபர் லலித் பத்தினாயக்கவின் முழுமையான மேற்பார்வையின் கீழ், தெல்தெனிய பிரிவுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ஹர்ஷ அமரசிங்க மற்றும் தெல்தெனிய உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த லொக்குகே ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், ஹசலக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித தொம்பன தலைமையில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகி சுஜீவா ஜெயசிங்க மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!