குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த படகானது இன்று (16.08.2026) பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகட்டுவான் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.
இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தவேளை நயினாதீவு மீனவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அந்த படகு அனர்த்தத்திற்குள்ளாகியிருந்த போது அதிலிருந்த
அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதி இன்றைய தினம் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடற்பயணங்களை
தவிர்க்குமாறு முன்னதாகவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை
பொருட்படுத்தாமல் இந்த படகின் ஊடாக அவர்கள் பயணித்திருந்ததாக கடற்படை
பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
இதேவேளை அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் தெரியவரவில்லை. இந்நிலையில் யாராவது காணாமல் போயுள்ளார்களா என்ற கோணத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!