news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கூட்டாட்சி, மாநில சுயாட்சி விவகாரத்தில் தமிழ்நாட்டை பின்வாங்கச் செய்கிறாரா முதலமைச்சர் விஜய்?

21 Nov, 2026
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்று  வலுவான பரிந்துரைகளை அளித்த, மத்திய -மாநில உறவுகள் குறித்த குரியன் குழுவை விஜய் தலைமையிலான அரசு நவம்பர் 6-ஆம் திகதி கலைத்துவிட்டது.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் ஆறு மாதங்களில், டெல்லியில் உள்ள அதிகார மையங்களுக்கு மிகவும் பணிந்து நடப்பவராகவே ஜோசப் விஜய் இருந்து வருகிறார். 

வாக்காளர் பட்டியல் விசேட தீவிர திருத்தம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சி ஆகியவற்றால் நாடே கொந்தளிப்பில் இருக்கும் வேளையில், விஜய் மயான அமைதி காத்து வருகிறார்.

 மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு அவர் அஞ்சுவதாகவும், அதன் தலைவர்களைத் திருப்திப்படுத்த விரும்புவதாகவும் அரசியல் வட்டாரத்தில் சிலர் இதைப் பார்க்கின்றனர்.

இதுவரை இது வெறும் யூகமாகவே இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான மத்திய -மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை திடீரெனக் கலைத்ததன் மூலம், அவர் அதனை ஏறக்குறைய உறுதிப்படுத்திவிட்டார்.

கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் அதிகரித்து வரும் சவால்களை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக, முன்னைய  தமிழ்நாடு அரசால் ஏப்ரல் 2025 ஏப்ரிலில்  இந்தக் குழு அமைக்கப்பட்டது.

மாநில சுயாட்சிக்கு வலுசேர்க்கும் க அறிக்கை

இந்தியாவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவது இது நான்காவது முறையாகும். தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு (1969-71), மாநில சுயாட்சியை மீட்டெடுக்க முக்கியமான அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தது. தேசிய அளவில், சர்க்காரியா ஆணையம் (1983-1988) மற்றும் புஞ்சி ஆணையம் (2007-2010) ஆகியவை மத்திய - மாநில உறவுகளை ஆராய்ந்து பல பரிந்துரைகளை வழங்கின. அதன்பிறகு, மத்திய-மாநில உறவுகளில் ஏற்பட்ட பல்வேறு அரசியலமைப்பு, நிதி, நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்கள், ஒரு புதிய மற்றும் விரிவான மறுஆய்வை அவசியமாக்கின.

குரியன் ஜோசப் குழு 2025 ஜூன் 1 அன்று  பணியைத் தொடங்கி, 2026 பெப்ரவரி 16,  அன்று அதன்  அறிக்கையின் முதல் பகுதியைத் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை பல்வேறு சவால்களைக் கையாள்வதுடன், நடைமுறைக்குச் சாத்தியமான பல தீர்வுகளையும் வழங்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 368(2)-இன் கீழ், ஒவ்வொரு அரசியலமைப்புத் திருத்த மசோதாவும் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற வேண்டும் என்று இக்குழு முன்மொழிந்துள்ளது. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, அனைத்துத் திருத்தங்களும் இரட்டைப் பெரும்பான்மை விதியின் கீழ் மாநிலச் சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். 

இந்தியாவின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும், மூன்றில் இரண்டு பங்கு மாநிலச் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவையும். பாராளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

"ஆளுநர்களின் அதிகார அத்துமீறல்" குறித்த பிரச்சினையையும் இக்குழு கையில் எடுத்துள்ளது. மாநிலச் சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களில் ஒருவரை ஜனாதிபதி  ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று அது பரிந்துரைக்கிறது. 

அவ்வாறு நியமிக்கப்படும் ஆளுநர், புதுப்பிக்க முடியாத ஐந்தாண்டு காலத்திற்கு மட்டுமே பதவியில் இருப்பார்; மேலும் மாநிலச் சட்டமன்றத்தின் பெரும்பான்மை தீர்மானத்தின் மூலம் மட்டுமே அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மத்திய அரசு தன் விருப்பப்படி ஆளுநரைத் திரும்பப் பெற முடியாது. இதன் மூலம் ஆளுநர் மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவராக மாற்றப்படுகிறார்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3-இன் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும், குறிப்பிட்ட மாநிலத்திற்கான அரசியலமைப்புத் திருத்தமும், பாதிக்கப்படும் மாநிலங்களின் ஒப்புதலும் தேவை என்று இக்குழு குறிப்பிடுகிறது. புதிய மாநிலத்தை உருவாக்குவதற்குச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்தால், அந்த மாநில மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதியில் ஜனாதிபதி  பொது வாக்கெடுப்புக்கு உத்தரவிடலாம். அதில் குறைந்தபட்சம் நான்கில் மூன்று பங்கு வாக்காளர்கள் பங்கேற்று, மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரவளித்தால் மட்டுமே அது வெற்றி பெறும். ஜனாதிபதி  ஆட்சியின் போது எல்லை மறுசீரமைப்புக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது. 

புதிதாக உருவாக்கப்பட வேண்டிய சட்டப் பிரிவு 3 ஏ, புதிய யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதைத் தடை செய்வதுடன், டெல்லியைத் தவிர தற்போதுள்ள யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழிவகை செய்கிறது.

‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற கருத்தை நிராகரிக்கும் இந்த அறிக்கை, மும்மொழிக் கொள்கைக்குப் பதிலாக இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளாவிய போட்டித்தன்மைக்கும் ஆங்கிலமும், கலாச்சாரத் தொடர்ச்சிக்கு பிராந்திய மொழி அல்லது தாய்மொழியும் அவசியம் என்று  அது கூறுகிறது. மேலும், ஒன்றிய அரசின் நிரந்தர அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்க, பிரிவு 343 க்கு  திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.


தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்து, 1971-ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மாநிலங்களுக்கு இடையிலான இட ஒதுக்கீடு மீதான தடையை 2126-ஆம் ஆண்டு வரையோ அல்லது அனைத்து மாநிலங்களின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rates) ஒரு குறிப்பிட்ட குறுகிய வரம்பிற்குள் ஒன்றிணையும் வரையோ நீடிக்க வேண்டும்  குழு முன்மொழிந்துள்ளது. 

மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) மாநிலங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், "ஒரு மாநிலத்திற்கு ஆறு இடங்கள் என்ற சீரான ஒதுக்கீடு" செய்யப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

தேர்தல்கள் குறித்து, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முன்மொழிவை இந்த அறிக்கை நிராகரித்துள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படும் உறுப்பினர்கள், ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.

தேர்தல் நடத்துவது தொடர்பாக, வரைவு அரசியலமைப்பின் 289-வது பிரிவில் உள்ள அதிகாரப் பகிர்வு முறைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் எனக் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி, பாராளுமன்றம், ஜனாதிபதி  மற்றும் துணை ஜனாதிபதி  ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களை மத்தியத் தேர்தல் ஆணையமும், மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை அந்தந்த மாநிலத் தேர்தல் ஆணையங்களும் நடத்த வேண்டும்.

கல்வியைப் பொதுப் பட்டியலில் (Concurrent List) இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு (State List) மாற்றக் குழு முன்மொழிந்துள்ளது. 

தேசியத் தேர்வு முகமையைக் (NTA) கலைக்கவும், அனைத்து நிலைகளிலும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்யவும், பொதுச் சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை மீதான கட்டுப்பாட்டை மாநிலங்களிடமும்  பல்கலைக்கழகங்களிடமும் மீண்டும் ஒப்படைக்கவும் அது அழைப்பு விடுத்துள்ளது. 

மருத்துவக் கல்வி மற்றும் மனிதவளத் திட்டமிடல் மீதான மாநிலங்களின் கட்டுப்பாடு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் மத்திய அரசு தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

பொருட்கள்  சேவை வரி (ஜிஎஸ்.ரி.) குறித்து, “ஜி.எஸ்.ரி கவுன்சிலின் முடிவுகள் ஆலோசனைத் தன்மை கொண்டவை மட்டுமே. அவை மத்திய  மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த சட்டமியற்றும் அதிகாரங்களுக்கு உட்பட்டவை” என்பதைத் தெளிவுபடுத்துவதன் மூலம் “சட்டமன்ற மேலாதிக்கத்தை மீட்டெடுக்க” குரியன் குழு கோரியுள்ளது.

 மேலும், ஒரு சுயாதீனமான ஜி.எஸ்.ரி. கவுன்சில் செயலகத்தையும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயமான ‘ஜி.எஸ்.ரி. தகராறு தீர்வு ஆணையத்தையும்’ (GST Dispute Settlement Authority) நிறுவவும் அது முன்மொழிந்துள்ளது.



இந்த அறிக்கை பெப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது பரவலாக விநியோகிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஆக்கப்பூர்வமான விவாதங்களைத் தூண்டியதுடன், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பலரிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றது. குழுவின் உறுப்பினர் கே. அசோக் வர்தன் ஷெட்டி அவர்களின் சில கருத்துக்களைத் தொகுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் சட்டமா அதிபர்  கே.கே. வேணுகோபால் ;  “தற்போது நம்மைப் பீடித்துள்ள குறைபாடுகளைக் கவனத்தில் கொண்டு, முக்கியப் பிரச்சினைகளை இந்த அறிக்கை நேரடியாக அணுகி, அர்த்தமுள்ள தீர்வுகளை வழங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அறிக்கையை வெளிக்கொண்டு வருவதில் உயர்மட்டக் குழு ஆற்றிய பணி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.”

நீதிபதி சி. சரவணன் (சென்னை உயர் நீதிமன்றம்) ;  “இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது மத்திய -மாநில உறவுகள் மற்றும் அரசியலமைப்பு நிர்வாகம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளில் எதிர்காலத்தில் ஒரு மதிப்புமிக்க ஆதாரமாக இது விளங்கும்.”

அசோக் லவாசா (முன்னாள் தேர்தல் ஆணையர்) ;! “இந்தப் பகுப்பாய்வு மிகவும் கூர்மையானது. இதில் உள்ள பரிந்துரைகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.”

சஞ்சய் ஹெக்டே (உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்) ; “நீதிபதி குரியன் ஜோசப் குழு  இந்திய அரசியலமைப்பு நடைமுறை அதன் அடிப்படை வடிவமைப்பிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என்பது குறித்த மிக விரிவான மதிப்பீட்டை  உருவாக்கியுள்ளது... 

இந்த விசாரணையை மேற்கொண்டதற்காக தமிழ்நாடு பாராட்டுக்குரியது. மத்திய அரசு அனுமதிக்கும் எந்தவொரு சுயாட்சிக்கும் மாநிலங்கள் அமைதியாக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு காலகட்டத்தில், அரசியலமைப்பு உரிமையை நிலைநாட்டும் இந்தச் செயலே ஒரு பொதுச் சேவையாகும்.”

ஃபைசான் முஸ்தபா (துணைவேந்தர், சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம்) ;  “மூன்று தசாப்தங்களாக அரசியலமைப்புச் சட்டத்தைக் கற்பித்தவன் என்ற முறையில், மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ள இந்த அறிக்கை செயல்படுத்தப்பட்டால், அது நமது தாராளவாத ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியின் அடிப்படை அரசியலமைப்புக் கோட்பாடுகளை நிச்சயமாக வலுப்படுத்தும் என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.”

கௌதம் பாட்டியா (அரசியலமைப்பு நிபுணர், எழுத்தாளர்) ; “அரசியலமைப்பின் அதிகார வரைபடத்தைப் பற்றிய ஒரு சிந்தனைமிக்க - கடுமையான ஆய்வு, மேலும் புதிய, சமநிலையான கூட்டாட்சி ஒப்பந்தத்திற்கான ஒரு சக்திவாய்ந்த முன்மொழிவு.”


குரியன் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளம் நீக்கப்படலாம் என்று கூறி, ஷெட்டி இந்த அறிக்கையைத் தனது சப்ஸ்டாக் (Substack) தளத்தில் இணைத்துள்ளார். அவசரகால விதிகள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள், உள்ளாட்சி அமைப்புகள், காலநிலை மாற்றம், மத்திய -மாநில சட்டமன்ற மற்றும் நிதி உறவுகள், சுரங்கங்கள்,  கனிமங்கள், மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் உள்ளிட்ட பிற முக்கியப் பகுதிகளை இரண்டாம் பாகம் உள்ளடக்குவதாக இருந்தது.

கூட்டாட்சித் தத்துவத்தில் விஜயின் குட்டிக்கரணம் 

இரண்டாம் பாகத்தைச் சமர்ப்பிப்பதற்கான 2027 மே 31 காலக்கெடுவுக்கு ஆறு மாதங்களுக்கும் சற்று அதிகமாகவே இருந்த நிலையில், ஆய்வுப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த தருணத்தில், நவம்பர் 6 அன்று விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு இக்குழுவைக் கலைக்க உத்தரவிட்டு, அதன் முற்றுப்பெறாத பணிகளை மாநில சட்ட ஆணையத்திற்கு மாற்றியது.

நிர்வாக உத்தரவின் மூலம் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் குழு, சட்டபூர்வ அந்தஸ்து இல்லாத ஒரு அமைப்பு என்றும், அதன் பணிகள் மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் கூறி விஜய் அரசு தனது தீர்மானத்தை  நியாயப்படுத்தியது. இருப்பினும், சட்ட ஆணையமும் 1994 ஆம் ஆண்டில்  முதன்முதலில் நிறுவப்பட்டு, நிர்வாக உத்தரவுகள் மூலமே மறுசீரமைக்கப்பட்டு வரும் ஒரு நிர்வாக அமைப்பு என்பதால், அரசின் இந்த வாதம் ஏற்புடையதல்ல.

கூட்டணி ஆட்சிக் காலத்தின் (1989-2014) அதிகாரப் பரவலாக்கல் போக்குகளைத் தலைகீழாக மாற்றி, பா.ஜ.க.  தலைமையிலான மத்திய  அரசு இந்தியாவில் அரசியல், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை மீண்டும் மையப்படுத்தி வரும் சூழலில், இந்தக் குழுவும் அதன் வலுவான பரிந்துரைகளும் வெளிவந்துள்ளன. 

நான்கு முக்கியக் காரணிகளால் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு சமீபகாலமாக அதிகப்படியான மத்தியக் கட்டுப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளது ; (1) ஆளும் பாஜகவின் கருத்தியல் நோக்குநிலை, (2) ஒரு கட்சி ஆதிக்கத்தின் மீள்வருகை, (3) இந்தியாவின் தேர்தல் முறையை ஆயுதமாகப் பயன்படுத்துதல் மற்றும் (4) பிரதமரின் தலைமைத்துவப் பாணி.

கூட்டாட்சிப் பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துதல், நிதி அதிகாரத்தை மையப்படுத்துதல் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு, அரசியல் தலையீடுகள், ஆளுநர் பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மாநில சுயாட்சியைச் சிதைத்தல் ஆகியவை அதிகாரத்தை மீண்டும் மையப்படுத்துவதற்கான முக்கிய வழிமுறைகளாகும். 

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற நகர்வு அதிகார மையப்படுத்தலை மேலும் உறுதிப்படுத்தும். இத்தகைய மத்தியக் கட்டுப்பாடு மாநில சுயாட்சியைப் பலவீனப்படுத்தியதுடன், அரசுகளுக்கு இடையேயான பதற்றங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. 

பா.ஜ.க.வின் கருத்தியல் மற்றும் அரசியல் நோக்கங்களுடன் இணைந்த மையப்படுத்தப்பட்ட தேசியப் பார்வைக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், மோடியின் ஆட்சி கூட்டுறவு கூட்டாட்சியிலிருந்து விலகிச் செல்வதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்த அதிகார மையப்படுத்தலுக்கும், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான தாக்குதலுக்கும் எதிராகத் தமிழ்நாட்டின் திராவிட அரசுகளே மிக வலுவான அரணாக இருந்து வருகின்றன. 1962 முதல் கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சிக்கான போராட்டத்தில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. இவை தமிழர்களின் 'புனித இலக்கு'  ஆகும். இவற்றில் எடுக்கப்படும் எந்தவொரு பின்வாங்கலும்  தமிழ்நாடு மற்றும்  இந்தியாவின் அரசியலமைப்புத் திட்டத்திற்கு எதிரானதாகும்.

(எம்.ஜி. தேவசகாயம் ஒரு ஓய்வுபெற்ற இந்திய நிருவாக சேவை அதிகாரியும்் 'பீப்பிள்-ஃபர்ஸ்ட்'  அமைப்பின் தலைவருமாவார்)

( த பிரினற் )


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!