news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொழும்பில் தம்பதியை மயக்கி 12 இலட்சம் மதிப்பிலான தங்க நகை கொள்ளை: வாடகை நாடகத்தில் வந்த கும்பலின் பகீர் திட்டம்

26 May, 2026

கொழும்பு மாளிகாவத்தை தொடருந்து வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற பணியாளர் ஒருவரும் அவரது மனைவியும் குறிவைத்து திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, 40 வயதுடைய பெண் ஒருவரை மையமாகக் கொண்ட கொள்ளைக் கும்பல், வீடு வாடகைக்கு எடுக்க விரும்புவதாக நடித்து தம்பதியருடன் பழக்கம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு முதன்முதலில் வீட்டிற்கு வந்த அந்தப் பெண், மேல்மாடி வீட்டை வாடகைக்கு பெற விருப்பம் இருப்பதாக கூறி, தம்பதியருடன் நெருக்கமாக பழகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற தினத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்த அந்தப் பெண், வீட்டு உரிமையாளரும் தரகரும் வரும்வரை காத்திருக்க வேண்டும் என கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர், அவரது கணவன் என அறிமுகப்படுத்தப்பட்ட நபர் ஒருவரும், தரகர் மற்றும் இளைஞன் ஒருவரும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

சிறிது நேரத்தில், தம்பதியரை மயக்கமடையச் செய்து, அவர்களிடம் இருந்த 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும், சந்தேகநபர்கள் வீட்டின் முன் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நகர்ப்புறங்களில் வீடு வாடகை தொடர்பான மோசடிகள் மற்றும் திட்டமிட்ட கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!