சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வியூகங்களின் சமநிலை மிக வேகமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கின் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகப் பாதைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வல்லரசுகளின் கவனம் இப்போது ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களை நோக்கித் திரும்பியுள்ளது.
இந்த உலகளாவிய அதிகாரப் போட்டியின் மையப்புள்ளியாக, இந்தியப் பெருங்கடலின் இதயப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடான இலங்கை மாறியுள்ளது. வெறும் பொருளாதார முதலீடுகள் என்ற போர்வையில் இலங்கையின் அதிமுக்கிய மூலோபாய மையங்களை நோக்கி அமெரிக்கா நகர்த்தும் புதிய வியூகங்கள், பிராந்திய வல்லரசுகளான சீனா மற்றும் இந்தியாவை உற்றுநோக்க வைத்துள்ளன.
அமெரிக்கா தற்போது இலங்கைக்குள் மகா பரிமாணத்தில் ஊடுருவுவதற்கான ஒரு புதிய புவிசார் அரசியல் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன் மிக அண்மைய மற்றும் சக்திவாய்ந்த உத்தியோகபூர்வ நகர்வாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான டொனால்ட் டிரம்ப்பின் விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோரின் இலங்கை விஜயத்தைக் குறிப்பிடலாம்.
இலங்கைக்கு வருகை தந்த அவர், எவ்வித ஆரவாரமுமின்றி நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
ஜனாதிபதியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பு முடிந்த உடனேயே, செர்ஜியோ கோர் நேராகச் சென்றது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்திற்கு ஆகும்.
எந்தவொரு பிரதான ஊடகங்களின் வெளிச்சமும் இன்றி அமைதியாக நடத்தப்பட்ட இந்தத் திடீர் கண்காணிப்பு விஜயம், அமெரிக்காவின் நீண்டகால இராணுவ மற்றும் வணிக உத்திகளின் ஒரு பகுதியாகும்.
உலகளாவிய வழித்தடங்களின் சந்திப்பில் அமைந்துள்ள கொழும்பு துறைமுகத்தின் கட்டமைப்பை, அமெரிக்காவின் மூலோபாயத் தேவைகளுக்கும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்புப் பயன்பாடுகளுக்கும் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுகளுக்குப் பின்னாலுள்ள உண்மையான காரணங்கள் வாஷிங்டனின் செனட் சபையில் நடைபெற்ற விவாதங்களின் போது பகிரங்கமாக வெளிவந்துள்ளன.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் கூட்டத்தில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் சமர்ப்பித்த விசேட அறிக்கை இதற்கு மிகச்சிறந்த சான்றாகும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் வெற்றிக்கு இலங்கை எவ்வளவு முக்கியமானது என்பதை கபூர் அங்கு தெளிவாக விவரித்திருந்தார்.

இலங்கை என்பது சர்வதேச வரைபடத்தில் உள்ள வெறும் சாதாரண தீவு அல்ல என்றும், இந்தியப் பெருங்கடலின் ஒட்டுமொத்த கடற்படை விநியோகப் பாதைகளையும், கடல்சார் பாதுகாப்பையும் தன் வசம் வைத்திருக்கக்கூடிய மிக முக்கியமான புவி-மூலோபாய மையப்புள்ளி அதுவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தும் இறக்குமதி-ஏற்றுமதி வர்த்தகமும் இந்த எல்லைகளைக் கடந்தே நடக்கின்றன என்பதால் இலங்கையின் பொருளாதார மையங்கள் மற்றும் துறைமுகங்கள் மீது அமெரிக்காவின் முழுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று போல் கபூர் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
ஒரு காலத்தில் வாஷிங்டனின் கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் பெரிய முக்கியத்துவம் பெறாத இலங்கை, இன்று சீனாவின் அசுர வேக உள்கட்டமைப்பு விரிவாக்கம் காரணமாக அமெரிக்காவால் புறக்கணிக்க முடியாத ஒரு தேசமாக மாறியுள்ளது.
குறிப்பாக, சீனா ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமையும், 2022 இல் சீன உளவுக்கப்பல் இலங்கைக்கு வருகை தந்தமையும் அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட ஒரு கடுமையான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இலங்கையை மீண்டும் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வருவதற்காக போல் கபூர் அமெரிக்க செனட் குழுவின் முன்னிலையில் பல முக்கிய உத்திகளைப் பரிந்துரைத்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா தமக்குச் சாதகமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த முயல்கிறது.
இலங்கையிடம் முறையான நீண்டகால பொருளாதாரத் திட்டம் இல்லாத குறையைப் பயன்படுத்தி, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொடுத்தல், இலங்கை சிக்கியுள்ள இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு மற்றும் முதலீட்டுப் பற்றாக்குறைகளைத் தீர்க்க உதவுவதன் மூலம் சீனப் பிடியிலிருந்து இலங்கையை விடுவித்தல், மற்றும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையுடன் இணக்கமாக மாற்றுவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துதல் ஆகியன இதில் அடங்கும்.இலங்கை செய்திகள்
அமெரிக்கா இலங்கைக்குள் ஒரு நேரடி இராணுவத் தளத்தை அமைப்பதை விட, உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளல், கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் அதிநவீன இராணுவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் இலங்கையைத் தன் பக்கம் தக்கவைக்க விரும்புகிறது.
மேலும், இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலைக் கண்காணிப்பதற்கான ஒரு கூட்டுப் பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குவதும் அமெரிக்காவின் அடுத்த கட்டத் திட்டமாகும்.

ஜெனரல் கெவின் ஷ்னைடர்
போல் கபூரின் இராஜதந்திர அறிக்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் விமானப்படைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் எவ்வித சத்தமுமின்றி இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இராணுவ மற்றும் வான்வெளி வியூகங்களில் மிகச் சிறந்தவரான ஜெனரல் ஷ்னைடர், இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இந்தியாவில் தங்கி இந்திய பாதுகாப்புப் பிரதானிகள் மற்றும் தூதுவர் செர்ஜியோ கோருடன் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார்.
மத்திய கிழக்கில் அமெரிக்க-ஈரான் பதற்றங்கள் தற்காலிகமாகத் தணிந்துள்ள நிலையில், அமெரிக்காவின் முழுப் பார்வையும் இப்போது இலங்கையின் கடல் எல்லைகளை நோக்கித் திரும்பியுள்ளதை இந்த அடுத்தடுத்த இராணுவ உயர் அதிகாரிகளின் விஜயங்கள் உறுதிப்படுத்துகின்றன.
கொழும்பு துறைமுகத்திற்கு அடுத்ததாக அமெரிக்காவின் இலக்கு இப்போது திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மற்றும் மத்தல விமான நிலையம் மீது விழுந்துள்ளது.
திருகோணமலையிலுள்ள பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகளின் ஒரு பகுதி ஏற்கனவே இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள சுமார் அறுபது தாங்கிகளையும் முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஜெனரல் கெவின் ஷ்னைடர் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்த எண்ணெய் தாங்கிகளை முழுமையாகக் கைப்பற்றி, பில்லியன் கணக்கிலான முதலீடுகளைச் செய்வதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் அமெரிக்காவின் பிரம்மாண்ட கப்பல் படைகளுக்கு தங்கு தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய வாஷிங்டன் திட்டமிடுகிறது.
அதேபோன்று, மத்தல விமான நிலையத்தில் போயிங் ரக விமான ஓட்டிகளுக்கான சர்வதேச பயிற்சி மையத்தை அமைப்பதன் மூலம், சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மிக அருகில் அமெரிக்கா தனது வான்வெளிப் பாதுகாப்பை பலப்படுத்த முயல்கிறது. இதன் மூலம் தென்பகுதியில் சீனாவின் நகர்வுகளுக்கு எதிரான வான்வெளி கண்காணிப்பை அமெரிக்காவால் பலப்படுத்த முடியும்.
அமெரிக்காவின் இந்த அசுர வேக முதலீட்டு முன்மொழிவுகள் இலங்கைக்குப் பொருளாதார ரீதியாகப் பெருமளவிலான வெளிநாட்டு நாணய ஓட்டத்தையும், கடனிலிருந்து மீள்வதற்கான பொன்னான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தாலும், இதன் பின்னாலுள்ள புவிசார் அரசியல் ஆபத்துகள் மிகக் கடுமையானவை.
இந்தத் திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால், இலங்கையில் ஏற்கனவே காலூன்றியுள்ள சீனாவும், தனது பாரம்பரியப் பாதுகாப்பு எல்லையாக இலங்கையைக் கருதும் இந்தியாவும் சும்மா இருக்கப்போவதில்லை.
இந்தியாவின் பாதுகாப்பு வலயத்திற்குள் அமெரிக்க கடற்படை நுழைவதையும், சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமெரிக்கா மாறுவதையும் இரு நாடுகளும் தத்தமது இராஜதந்திர வழிகளில் எதிர்க்கக்கூடும்.
இலங்கை அரசாங்கம் இந்த வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கு நடுவில் சிக்கி ஒரு பகடைக்காயாக மாறப்போகிறதா, அல்லது அணிசேராக் கொள்கையைப் பயன்படுத்தி தனது இறையாண்மையைப் பாதுகாத்துக் கொண்டு பொருளாதாரப் பலன்களைப் பெறப்போகிறதா என்பதை கொழும்பு கையாளும் இராஜதந்திர நகர்வுகளே தீர்மானிக்கும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!