இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாத முக்கியமான வழக்குகளில் ஒன்றாகக் காணப்படும் லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்ட விவகாரத்தின் விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
பல வருடங்களாக பாரியளவில் முன்னேற்றம் அடையாமல் தாமதமடைந்த இந்த வழக்கு விசாரணைகள் 2025- – 2026 காலப்பகுதியில் துரிதப்படுத்தப்பட்டு தற்போது விசாரணைகள் முன்னோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
லலித், குகன் ஆகியோர் காணாமல் போன காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவார். கடந்த காலங்களில் இந்த வழக்கு விசாரணைகளில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தனது தனிப்பட்ட பாதுகாப்பை காரணமாகக் கூறி ஆஜராகாமல் இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு நீதிமன்றத்தில் ஸும் வழியான விசாரணையில் ஆஜராகியிருந்தார். இதனால் இந்த வழக்குப் பற்றிய பரபரப்பு அதிகரித்துள்ளது.
லலித், குகன் என்பவர்கள் யார்?
அவருடைய செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்தவர் குகன் முருகானந்தன் என்பவர்.
இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தனர்.
இவர்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் தினத்திற்கு மறுநாள் அதாவது டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புக்கு இருவரும் தயாராகிக் கொண்டிருந்த போதே காணாமல் போயிருப்பதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.
சம்பவ தினத்தன்று குகனின் வீட்டிலிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் மாலை சுமார் 5 மணியளவில் புறப்பட்ட பின்னர், காணாமல் போனதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன.
இருவரும் வெள்ளை வானில் வந்த குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தேடும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக இவர்கள் இருவர்களினதும் விடயம் தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டது.
இதற்கமைய 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ 2017ஆம் ஆண்டு இந்த வழக்கில் சாட்சியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
எனினும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் கோட்டாபய ராஜபக்ஷ முக்கிய பங்காற்றியவர் என்பதால் யாழ்ப்பாணத்திற்குச் சென்று சாட்சியளிப்பதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தரப்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பலமுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் போதுமான விசாரணை முன்னேற்றம் இல்லாத காரணத்தால், 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்கு ஒதுக்கி வைக்கப்பட்டதாக 2025 இல் அரசாங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
மீண்டும் ஆரம்பமான விசாரணைகள்:
இவ்வாறான பின்னணியில் 2025ஆம் ஆண்டில் இந்த வழக்கின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின. இதன் பின்னரே வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது. லலித், குகன் காணாமல் போனமை குறித்த விசாரணைகளைப் பொறுப்பேற்குமாறு பொலிஸ்மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
அதன் பின்னர் அச்சுவேலி பொலிஸ் நிலையம், யாழ்ப்பாணப் பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பிராந்திய தடயவியல் ஆய்வகத்தில் இருந்த வழக்கு மற்றும் தடயவியல் ஆவணங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு விசாரணைகளை முடுக்கி விட்டது.
விசாரணைகள் ஒருபுறமிருக்க நீதிமன்ற விசாரணைகளில் ஏற்பட்ட முன்னேற்றமாக, கோட்டாபய ராஜபக்ஷவை இணைய வழியின் ஊடாக சாட்சியமளிக்க நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இதற்கு அமைய கடந்த செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய கோட்டாபய ராஜபக்ஷ, இணையவழியின் ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
குறித்த சம்பவம் இடம்பெற்று காலம் கடந்திருப்பதால் அவை குறித்து தனக்கு நினைவில் இல்லை என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேவேளை, பாதுகாப்புச் செயலாளராக தாம் பதவி வகித்த காலத்தில் கடத்தல்கள் அல்லது காணாமல் போகச் செய்த நடவடிக்கைகளுக்கு தாம் உத்தரவிடவில்லை என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு லலித் மற்றும் குகன் ஆகிய இருவரின் தனிப்பட்ட சம்பவமாக மட்டும் பார்க்கப்படாமல், இலங்கையில் காணாமற் போனோர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான நீண்ட காலப் பிரச்சினையின் முக்கியமான வழக்காக மனித உரிமை அமைப்புகளாலும் வழக்கில் ஆஜராகும் தரப்பினராலும் பார்க்கப்படுகிறது.
லலித், குகன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் மாத்திரமன்றி காணாமல் போனோர் தொடர்பான பல்வேறு சம்பவங்கள் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பவர் நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பில் முக்கியமான அதிகாரம் கொண்ட பதவியை வகிப்பவர் என்பது இலங்கையில் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்ட பொறுப்பு அந்தப் பதவியுடன் தொடர்புபட்டுள்ளது.
எனவே, லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ‘ஜனபலய’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
லலித்- – குகன் வழக்கு மாத்திரமன்றி, அந்தக் காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கடத்தப்பட்டதாகவும், காணாமலாக்கப்பட்டதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் அவசியமென்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“இந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷ குற்றவாளி என முன்கூட்டியே தீர்மானிப்பது அல்ல எமது நோக்கம். மாறாக, சம்பவம் தொடர்பில் அவரிடம் உள்ள தகவல்கள் முழுமையாகப் பெறப்பட்டு, நீதிமன்றத்தின் முன்னால் உள்ள சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும்” என்று ஜனபலய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வழக்கு விசாரணைகளின் போது ஊடகவியலாளர் கீத் நொயரின் கடத்தல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்தும் கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறுக்கு விசாரணையின் போது கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
எனினும், அவை தொடர்பில் முழுமையான தகவல்கள் தமக்கு நினைவு இல்லையென கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பிலிருந்த அவர், தாம் அப்பதவியை வகித்த காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தமக்கு நினைவில் இல்லையெனப் பதிலளிப்பது எந்தளவுக்குப் பொருத்தமானது என்ற கேள்வி பொதுவாக நிலவுகிறது.
அவர் இவ்வாறு தனக்கு நினைவில் இல்லையென்று கூறுவது தம் மீதான விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் தந்திரோபாயமா என்றும் நோக்கப்படுகின்றது.
கைது செய்யப்படுவாரா?
இது இவ்விதமிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளிலும் கோட்டாபய ராஜபக்ஷ மீதான விசாரணைகள் இறுக்கமடைந்து வருகின்றன.
இந்த வழக்கு விசாரணைகளில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்துள்ளது.
இதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகளைத் தீவிரப்படுத்தும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படலாம் என்ற ஊகங்களும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பொறுத்த வரையில் திரைமறைவில் சதித்திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது இன்னமும் முழுமையாக வெளிப்படவில்லை. தாக்குதலுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் அல்லது நேரடியாகத் தொடர்புபட்டவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களே நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளனர்.
எனினும், திரைமறைவில் இருந்ததாகக் கூறப்படும் சுரேஷ் சலே மற்றும் அவருக்கு உத்தரவிட்டவர்கள் எனப் பலரும் இருக்கின்றனர் என்று புலனாய்வு ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக தாம் இழந்த அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள இத்தாக்குதலை ராஜபக்ஷ குடும்பத்தினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற கேள்விக்கும் பதில் தேடப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே கோட்டாபய ராஜபக்ஷ மீதான விசாரணைகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டியிருப்பதாகத் தெரிகின்றது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!