'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கோசம் எல்லா ஆட்சிக் காலங்களிலும் முன் வைக்கப்பட்ட ஒன்றாகும். ஆயினும் நடைமுறையில் இனங்களுக்கு இடையே வேறுபட்டதாகவும், பௌத்த மதகுருமார்கள், அமைச்சர்கள்,
அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு சலுகை வழங்கும் வகையிலேயே இந்தக் கோசம் அமுல்படுத்தப்பட்டது. 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பது சிறுபான்மையினரை அடக்கி ஆள்வதற்காகவும், அவர்களின் உரிமைகளை பறிப்பதற்கும், மறுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாகவே வரலாறு கூறுகின்றது.

கோட்டாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போது 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கோசம் மிகவும் தீவிரமடைந்திருந்தது. அன்று அம்முயற்சிக்கு தலைமை வகித்த பௌத்த மதகுருமார்களும், அரசியல்வாதிகளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதை அமுல்படுத்துவதற்கு தடைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். பௌத்த மதகுருமார்கள் குற்றவாளிகள் என்றாலும், அவர்களை சட்டத்தினால் தண்டிக்கக் கூடாதென வலியுறுத்துவதுடன், ஜனாதிபதிக்கு எச்சரிக்கை செய்வதோடு மட்டுமல்லாது ‘சூனியம்’ செய்வதிலும் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் சதியுள்ளது என்பது கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கஸ்ஸப்ப தேரர் அரசியல்வாதிகளுடன் மேற்கொண்ட இரகசியச் சந்திப்பபையடுத்து அம்பலமான நிலையில், ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விஹாரமகாதேவி பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டமும் கைவிடப்பட்டது.
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதை இன்றைய அரசாங்கமும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், கோட்டாவின் ஆட்சியில் சொன்னதற்கும், தற்போதைய ஆட்சியாளர்கள் இன்றைய அரசியல் சூழலில் சொல்வதற்குமிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன.
கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில், 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற முழக்கம் சிறுபான்மையினரை அடக்குவதற்காகவே பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது. இலங்கையில் பொதுவான சிவில் சட்டங்கள் தவிர, வெவ்வேறு சமூகங்களுக்கென பாரம்பரிய மற்றும் மத ரீதியான தனித்துவ சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவை போன்ற சிறுபான்மையினருக்கான தனித்துவ சட்டங்களை ஒழிப்பதற்காகவே இந்த கோசத்தை கையில் எடுத்தார்கள்.
இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும், சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பௌத்த சிங்கள கலாசாரத்திற்கு முன்னுரிமை இருக்க வேண்டும் என்றும், சிறுபான்மையினருக்கு பிரத்தியேக சட்ட சலுகைகள் இருக்கக் கூடாது. அத்தகைய சலுகைகள் பௌத்த சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பிரசாரம் செய்தனர்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும், 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் கோட்டாபய ராஜபக் ஷ மற்றும் பொதுஜன பெரமுன பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைத் திரட்டுவதற்கு இந்த முழக்கம் ஒரு முக்கிய அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
இதனால், ஆட்சியை அமைத்ததன் பின்னர் இந்தக் கோரிக்கைகளின் தொடர்ச்சியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவினால் 2021ஆம் ஆண்டு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' எனும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது.
இதன் தலைவராக பௌத்த கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார்.
இதனால் இச்செயலணி குறித்து சிறுபான்மை மக்களிடையே பெரும் அச்சமும், அதிருப்தியும் விமர்சனங்களும் ஏற்பட்டன. இச்செயலணி 2022ஆம் ஆண்டு நடுப்பகுதியில் 43 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவிடம் சமர்ப்பித்தது.அரசியல் செய்திகள்
இச்செயலணி மூலமாக பௌத்த சிங்கள மக்களின் ஆதரவை தொடர்ச்சியாக பேணிக் கொள்ள முடியுமென்றும், ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க முடியுமென்றும் கணக்கு போட்டார்கள். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கணக்கு போடத் தெரியாமல் நாட்டை வங்குரோத்து நிலைக்குள் தள்ளினார்கள். இறுதியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இப்போது முன்னாள் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எனப் பலரும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதிலிருந்து தப்புவதற்கு இன்றைய ஆட்சியை மாற்ற வேண்டுமென்று திட்டமிட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்திட்டங்களில் ஒன்றுதான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டுமென்று முன்னெடுக்கப்பட்ட போராட்டமாகும்.
இலங்கையின் சமகால அரசியல் மற்றும் சமூகச் சூழலில் சட்டம், நீதித்துறைச் சுதந்திரம் மற்றும் மதவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான மோதல்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாக ஞானசார தேரரின் சிறைத்தண்டனை விவகாரம் உருவெடுத்துள்ளது.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் முற்றிலும் அரசியல் பின்னணியைக் கொண்டவை என்பதில் ஐயமில்லை.
கண்டியில் தொடங்கி கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் விஹாரமகாதேவி பூங்கா வரை நீடித்த இந்த 'சத்தியாக்கிரக' மற்றும் 'நீதிக்கான பேரணி'யின் போராட்டங்கள், ஆரம்பத்தில் 'மத ஆடையின் மாண்பைப் பாதுகாத்தல்' என்ற போர்வையில் தொடங்கினாலும், பின்னர் 'ஞானசார தேரரை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என்ற அரசியல் கோரிக்கையாக மாறியது.புவியியல் காண்
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் 'சட்டத்தின் ஆட்சி' மற்றும் 'அனைவருக்கும் சமமான நீதி' என்ற மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே ஆட்சிக்கு வந்தது. இப்போராட்டங்கள் மூலமாக புதிய அரசாங்கத்தின் சட்டத்தின் ஆட்சிப் பிரகடனத்தைச் சீர்குலைத்து, அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் திட்டமாகும்.
சிங்கள பௌத்தர்களின் மத உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம், தங்களுக்குத் தேவையான வாக்கு வங்கியைத் பெற்றுக் கொள்ளலாம் என்பதே இவர்களின் எண்ணமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற அரசியல் தரப்புகள், ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை கையில் எடுத்துக்கொண்டன.
ஞானசார தேரரும், அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று போராட்டங்களை மேற்கொண்டவர்களும் நீண்ட காலமாகவே இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான கடும்போக்குவாதிகளாக செயற்பட்டவர்கள். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், மீண்டும் ஒருமுறை இன, மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி, தாங்கள் இழந்துள்ள அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க நினைக்கிறார்கள்.
அரசியல் பின்னணியில் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் சிலர், ஜனாதிபதிக்கு 10 நிமிட அவகாசம் வழங்கியதும், ஞானசார தேரரை விடுவிக்காவிட்டால் ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிடும் என எச்சரித்ததும், இது வெறும் மதப் போராட்டம் அல்ல, மாறாக அரசை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் ஒரு திட்டமிட்ட அரசியல் சதி என்பதை உறுதிப்படுத்தியது.
என்ற போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், முக்கிய அமைச்சர்களும் ஆத்திரம் கொண்டு கருத்துக்களை வெளியிடவோ, நீதிக்கு புறம்பான அழுத்தங்களுக்கு அடிபணியவோ இல்லை.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது தங்களின் முதன்மைக் கடமை என்றும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மதிப்பளித்து சட்டம் தன் கடமையைச் செய்ய அரசாங்கம் இடமளிக்கும் என்றும் நாட்டுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
எவ்வித அரசியல் இலாபத்திற்காகவும், மிரட்டல்களுக்காகவும் பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்ற அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு, இப்போராட்டங்களின் நோக்கங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து விஹாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டங்கள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளன.வக்கீல் தேடு
ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டிருப்பது சட்டப்படியானதும், நீதிமன்ற சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும். ஆனால், நாட்டின் சட்ட அமைப்பையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சவாலுக்கு உட்படுத்தி, அவரை விடுதலை செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் பௌத்த மதப் பாதுகாப்புக்கானது அல்ல. அது அவர்களின் குறுகிய அரசியல் தேவைகளுக்கானது என்பது தெளிவாகியுள்ளது.
ஜனநாயக சமூகமொன்றில் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற தத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டுமாயின், இத்தகைய அரசியல் பின்னணி கொண்ட, நீதிக்கு புறம்பான அழுத்தங்கள் நிராகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அத்தோடு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்றைய நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக உறுதியாக இருப்பதும் அவசியமாகும்.அரசியல் செய்திகள்
போராட்டக்காரர்கள் அரசியல் ரீதியாக தேசிய மக்கள் சக்திக்கு எதிரானவர்கள் என்பதற்காக அவர்களை சட்டத்தினால் கட்டுப்படுத்துவது இன்றைய ஆட்சியாளர்களுக்கு அரசியல் இலாபத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகளிடையேயும் பௌத்த கடும்போக்குவாதிகள் உள்ளனர். அவர்கள் இதுபோன்றதொரு போராட்டத்தை முன்னெடுக்கும் போது அரசாங்கம் சட்டத்தின் அமுலாக்கத்திற்கும், நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கும் இடமளிக்கின்ற போதுதான் உண்மையாக சட்டம் அனைவருக்கும் சமம் என்பது உறுதிப்படுத்தப்படும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!