சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இலங்கை வந்த மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட் தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சீனாவில் இருந்து சிகரெட்டுகளை வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுங்க அதிகாரிகளின் கண்காணிப்பை தவிர்க்கும் நோக்கில், சந்தேகநபர்கள் “பசுமை வழித்தடம்” ஊடாக வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொண்டு வந்த ஆறு பயணப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 சிகரெட்டுகள் அடங்கிய 202 பெட்டிகள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 60 லட்சத்து 60 ஆயிரம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!