அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துவரும் போரினால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் அல்-சஃபா அரண்மனையில் நடைபெற்ற மக்கா கூட்டுப் பாதுகாப்பு உச்சிமாநாட்டின் போது, பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த உச்சிமாநாட்டின்போது, மூன்று தலைவர்களும் சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகள் குறித்து ஆய்வு செய்ததோடு பரஸ்பர நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த ஒப்பந்தம், மூன்று நாடுகளின் நீண்டகால வரலாற்றுத் தொடர்புகள், இஸ்லாமிய ஒற்றுமை, பகிரப்பட்ட மூலோபாய நலன்கள் மற்றும் நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது என்று விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சவுதி கெஸட் தெரிவித்துள்ளது.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான கூட்டுத் தடுப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த ஒப்பந்தம், மூன்று நாடுகளில் ஒன்றின் மீதான எந்தவொரு ஆயுதத் தாக்குதலும் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்றும் குறிப்பிடுகிறது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக மூன்று நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தங்களின் பகிரப்பட்ட பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பிராந்தியத்திலும் உலக அளவிலும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பதற்கும், அதே நேரத்தில் ஒரு பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிப் பணியாற்றுவதற்கும் உள்ள தங்களின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்று மூன்று நாடுகளும் தெரிவித்திருக்கின்றன.
இந்த ஒப்பந்தம் குறித்து சவுதியின் பொது இராஜதந்திர விவகாரப் பிரதியமைச்சர் ரயாத கிரிம்லி கூறுகையில், இது அணுசக்தி இலட்சியங்களுடனோ அல்லது ஆயுதப் போட்டியுடனோ தொடர்புடைய ஒப்பந்தமல்ல. மாறாக நீடித்த திறன்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாகக் கூட்டுப் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதையும், இராணுவத் தயார்நிலை மற்றும் மூலோபாயத் தடுப்புத்திறன்களை மேம்படுத்துவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றுள்ளார்.
யெமனின் ஹுதிக் கிளர்ச்சியாளர்கள் சவுதியின் அரம்கோ எண்ணெய் நிலையம், யெமனிலுள்ள சவுதி தளம், எல்லையருகே உள்ள சவுதியின் நஜ்ரான் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்த சில தினங்களாகத் தாக்கியுள்ளனர். இதற்கிடையில், ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்களும் சவுதி மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு சவுதி பதில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இதேவேளை அமெரிக்காவும் இஸ்ரேலும் தம்மீது மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஒமான், ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் அதன் நலன்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்தந்த நாடுகளின் எதிர்ப்புக்களுக்கும் ஆட்சேபனைகளுக்கும் மத்தியிலும் தாக்குதல்கள் முன்னெடுத்து வருகிறது.
இத்தகைய சூழலில் இந்த மூன்று நாடுகளும் மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மூன்று நாடுகளிலும் எவரேனும் ஒருவர் மீது நடத்தப்படும் தாக்குதல், அவர்கள் அனைவர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நேட்டோ பாணியிலான ஒப்பந்தம் என்று சி.என்.என் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து சவுதி அரேபியாவின் பொது உளவுத்துறைத் தலைவர் காலித் பின் அலி அல் ஹுமைதானுடன் ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி கலந்துரையாடியுள்ளதாக ஈராக் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!