சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் அப்கியூக் நகரில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம், தமாம் நகரில் உள்ள கிங் பகத் சர்வதேச விமான நிலையம், நிஜ்ரன் பகுதியில் உள்ள இராணுவ படைத்தளம் போன்ற பல இடங்களில் ஹூதியினர் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை இந்தத் தாக்குதல்களை சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஹூதியினர் அனுப்பிய ஏவுகணையின் சிதறல் பட்டு சவூதியின் தலைநகர் ரியாத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சவூதி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் விளைவாக பல வாகனங்கள் சேதமடைந்திருப்பதாகவும் சவூதி அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
ஏமன் நாட்டில் அரசு தரப்புக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் சவூதி, ஈரான் ஆகிய இரு நாடுகள் தலையிட்டு, தாமும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதும் இடம்பெற்று வருகிறது.
ஏமன் அரசு தரப்புக்கு சவூதியும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவளித்து, ஏமன் உள்நாட்டு யுத்தத்தில் அவரவர் ஆதரவுத் தரப்புக்காக சவூதியும் ஈரானும் ஏமனுக்குள் தாக்குதல் நடத்தி வருவதோடு, ஈரான் - சவூதி ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான மோதலும் தொடர்ந்து இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.
அமெரிக்கா, ஈரான் ஆகியவற்றுக்கு இடையே போர் நிலவியபோது ஏமனில் செயற்பட்டு வரும் ஹூதியினர் சவூதி மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, சவூதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற பிரம்மாண்ட தளங்களை நோக்கி தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவூதியும் ஏமன் அரசு படைகளுடன் இணைந்து, ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இவ்விதமாக உள்நாட்டுப் போருக்குள் மற்ற நாடுகளின் தலையீட்டினால் பல முனைகளில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையிலேயே சவூதியில் இன்று ஹூதியினர் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!