news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிதைந்த கனவும் உதிர்ந்த போர்க்கொடியும்: நந்திக்கடலில் முடிந்த ஒரு யுகம்

21 May, 2026
இலங்கை வரலாற்றில் 2009 மே மாதம் என்பது வெறும் நாட்;காட்டி பக்கங்கள் அல்ல. அவை முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் முடிவுரையும், ஒரு தேசத்தின் தலைவிதி மாற்றியமைக்கப்பட்ட தருணமுமாகும்.

 லலித் அத்துலத்முதலி போன்ற அரசியல்வாதிகள் எண்பதுகளில் மொசாட் உதவியுடன் எதைச் சாதிக்க முயன்றார்களோ, அதன் உச்சக்கட்டத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நிறைவேற்றி முடித்தது. 2009 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதலே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இராணுவ நெருக்குதல்கள் தீவிரமடைந்தன. 


வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும் பகுதியை இழந்த புலிகள், இறுதியாக முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் ஓரங்களில் சில சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டனர். சர்வதேசத்தின் போர்நிறுத்தக் கோரிக்கைகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற போர்வையில் இலங்கை இராணுவம் தனது இறுதித் தாக்குதலை தொடுத்தது.Beaches & Islands

மே 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நந்திக்கடல் பகுதி ஒரு போர்க்களமாக அல்லாமல், ஒரு மரணக் கூடாரமாக மாறியது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களுக்குள் தஞ்சமடைந்திருந்த வேளையில், கனரக ஆயுதங்களின் முழக்கம் அந்தப் பகுதியையே அதிரச் செய்தது.

 2009 மே 19 ஆம் திகதி காலை, இலங்கை பாராளுமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாடு பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. நாம் பயங்கரவாதத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்துள்ளோம், என்று அவர் முழக்கமிட்டார்.

அதே தினத்தில், நந்திக்கடல் ஓரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. 

அவரது நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில் இருந்த புகைப்படங்களும், காணொளிகளும் ஊடகங்களில் வெளியாகி உலகையே உலுக்கின. 

30 ஆண்டுகாலம் ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்தி வந்த ஒரு போராட்ட அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி, தமிழர்களிடையே அதிர்ச்சியையும், தென்னிலங்கையில் பட்டாசு வெடிக்கும் கொண்டாட்டங்களையும் உருவாக்கியது.



லலித் அத்துலத்முதலி முதல் மஹிந்த வரை: தொடந்த போரியல் தந்திரம்


எண்பதுகளில் லலித் அத்துலத்முதலி எத்தகைய போரியல் தந்திரங்களைக் கையாண்டாரோ, அதே பாணியைத்தான் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் காண முடிந்தது. லலித் அன்று 'பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்படுகிறார்கள்' என்று கூறியதைப்போலவே, 2009 போரின்போதும் 'பூச்சிய உயிரிழப்பு'  (Zero Casualty Policy) என்ற கோஷம் முன்னெடுக்கப்பட்டது. 

ஆனால், நந்திக்கடல் கரையில் சிதறிக்கிடந்த சடலங்களும், சரணடையச் சென்றவர்கள் மீதான தாக்குதல்களும், காணாமலாக்கப்பட்டவர்களின் நிலைமையும் வேறு ஒரு கதையை கூறியது. லலித் அத்துலத்முதலி இஸ்ரேலின் மொசாட் உதவியுடன் புலிகளை அழிக்கத் திட்டமிட்டார். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா எனப் பல நாடுகளின் இராணுவ மற்றும் இராஜதந்திர உதவிகளை ஒருங்கினைத்து 'ஒட்டுமொத்த அழிப்பு'  (Total Annihilation)  என்ற உத்தியைப் பயன்படுத்தினார்.


பிரபாகரனின் மரண அறிவிப்புக்குப் பிறகு, இலங்கை அரசியல் களம் முற்றாக மாறியது. மஹிந்த ராஜபக்ஷ ஒரு 'நவீன துட்டகைமுனுவாக' (சிங்கள மன்னன்) போற்றப்பட்டார். இது அவரது குடும்ப அதிகாரத்தை நிலைநிறுத்த வழிவகுத்தது. 


மறுபுறம் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழ் அரசியல் தலைமை மீண்டும் ஜனநாயகப் பாதைக்குத் தள்ளப்பட்டது. 

ஆனால், லலித் அத்துலத்முதலி அன்று குறிப்பிட்டது போல, கல்வியிலும் பொருளாதாரத்திலும் வட பகுதி மாணவர்கள் காட்டிய ஆர்வம் போர் முடிந்த பின்னரும் குறையவில்லை. போர் முடிவுக்கு வந்தாலும், இறுதிக்கட்டப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இலங்கையை இன்றும் சர்வதேச அரங்கில் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.

1993 இல் லலித் அத்துலத்முதலி சுட்டுக்கொல்லப்பட்டபோது இருந்த அதே அரசியல் கொந்தளிப்பு, 2009 இல் பிரபாகரனின் மரணத்தின் போதும் இலங்கையில் நிலவியது. 

லலித் அத்துலத்முதலி



லலித் அத்துலத்முதலி போன்றவர்கள் தமிழர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து ஒடுக்க நினைத்தாலும், அவர்களின் கல்வி மற்றும் உரிமைக் தாகத்தை அடக்க முடியாது என்பதைத் தனது இறுதி நாட்களிலேயே ஒப்புக்கொண்டிருந்தார். 

இன்று போர் முடிந்து 17 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், அன்று லலித் அத்துலத்முதலி விதைத்த 'பாதுகாப்பு' என்ற பெயரிலான இராணுவமயமாக்கல் இன்றும் இலங்கையின் பொருளாதாரத்தைச் சீரழித்து வருவதைக் காண முடிகிறது.



பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார், புலிகள் இயக்கம் மௌனிக்கப்பட்டுவிட்டது, ஆனால் அவர்கள் எழுப்பிய அரசியல் உரிமைக் கேள்விகளுக்கு இன்றும் கொழும்பு ஆட்சியாளர்களிடம் முறையான பதில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. போர் முடிந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் இயல்பு நிலை திரும்பியதாகக் கூறப்பட்டாலும், தமிழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் ஓயவில்லை. 


தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் இராணுவத் தேவைகள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் இன்றும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை திட்டமிட்ட 'புவிசார் மாற்றத்தை' ஏற்படுத்தும் முயற்சி என தமிழ் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. 

இதேவேளை தங்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறியக் கோரி, வடக்கு-கிழக்கு பகுதிகளில் தாய்மார்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் பல ஆயிரம் நாட்களைக் கடந்து நீடிக்கிறது. சர்வதேச விசாரணை ஒன்றே தங்களுக்குத் தீர்வைத் தரும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.


சமஷ்டி முறையிலான தீர்வு அல்லது குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரி தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. 

உள்நாட்டில் போராட்டங்கள் ஒடுக்கப்படும் வேளைகளில், புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களை வழங்கி வருகின்றனர். 

ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் இலங்கைப் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானங்கள் கொண்டுவரப்படுவதில் புலம்பெயர் அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. 

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பயணத் தடைகளைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் வெற்றியடைந்துள்ளனர். 

அரசியல் தீர்வு கிடைத்தால் மட்டுமே புலம்பெயர் முதலீடுகள் இலங்கைக்கு முழுமையாக வரும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டுள்ளனர். இது இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பாரிய பொருளாதார அழுத்தமாகவே உள்ளது.Beaches & Islands

பதினேழு ஆண்டுகள் கடந்தும் தீர்வு எட்டப்படாமைக்கு முக்கியக் காரணமாக எந்தவொரு சிங்களக் கட்சி அதிகாரப் பகிர்வுக்கு முன்வந்தாலும், எதிர்க்கட்சிகள் அதனை 'நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயல்' எனச் சித்தரித்து வாக்குகளைச் சேகரிக்கின்றன. 

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கையுடனான தங்களது மூலோபாய உறவுகளைப் பேணுவதில் காட்டும் அக்கறையை, தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் காட்டுவதில்லை என்ற ஆதங்கம் நிலவுகிறது.

 பிரபாகரன் கொல்லப்பட்டதாலோ அல்லது புலிகள் அமைப்பு மௌனிக்கப்பட்டதாலோ தமிழ் மக்களின் 'அரசியல் அபிலாஷைகள்' இறந்துவிடவில்லை என்பதே யதார்த்தமானது. 

17 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம். ஒரு தலைமுறை போருக்குப் பின்னரே பிறந்து வளர்ந்துவிட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள வேண்டுமாயின், உள்நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். 

அதுவரை, நந்திக்கடல் சுமந்து நிற்கும் அந்த நீதிக்கான குரல் உள்நாட்டிலும் உலகெங்கும் ஓயப்போவதில்லை.

(லியோ நிரோஷ தர்ஷன்)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!