மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி. இயக்கம் உருவாக்கப்பட்டு 61 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்காலத்தில் அவ்வியக்கம் தனது அரசியலில் சித்தாந்த ரீதியாக மட்டு மன்றி அணுகுமுறைகளிலும் தன்னை மாற்றிக்கொண்டு வந்திருப்பதைக் காணமுடிகிறது.
பல சந்தர்ப்பங்களில் அக்கட்சியினால் சொல்லப்பட்ட அதன் அரசியல் சிந்தாந்தங்களுக்கும் அது கைக்கொண்ட அரசியல் அணுகுமுறைகளுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் காணப்பட்டே வந்துள்ளன.
புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற நிலையிலிருந்து அது தேர்தல் ஜனநாயக முறை மையினுள் நுழைந்ததைத் தொடர்ந்து அதன் அடிப்படைச் அரசியல் கொள்கைகள் படிப்படியாக மறைந்து தேச,சர்வதேச அரசியல் களநிலைவரங்களுக்கேற்ப அதன் அரசியல் முகமும் காலத்துக்குக்காலம் படிப்படியாக மாற்றமடைந்து வருவதை அவதானிக்க முடியும்.
தொடக்கத்தில் நாட்டின் ஆட்சி க்கட்டமைப்பை மாற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் பின்னர்
அந்தக் கட்டமைக்கு ஏற்றவாறு தன்னைப் பெருமளவு மாற்றிக்கொண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதுடன் நின்றுவிடாது அதனைத் தக்க வைப்பதற்காகவும் தன்னைப் பலவழிகளிலும் மாற்றிக் கொண்டு வருகிறது.
இம்மாற்றங்களினூடாக தனது ஆட்சியதிகாரத்தை நன்றாக நிலைப்படுத்திக்கொண்டு சீனாவின் அரசியல், பொருளாதா ரக் கட்டமைப்பு மாதிரியை இலங் கையிலும் உருவாக்க முனைகிறதா என்ற ஐயம் அண்மைக்காலத்தில் பரவலாக எழுந்து வருவதைக் காணமுடிகிறது.
இலங்கை சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவிலிருந்து வெளியேறிய 22 வயதுடைய றோகண விஜேவீர காலியிலுள்ள அக் மீமன என்ற இடத்தில் 1965 மே 14 ஆந்திகதி ஒரு போயா நாளில் தனது தோழர்கள் சிலருடன் சேர்ந்து தொடக்கிய ஒரு இயக்கமே ஜே.வி.பி. ஆகும்.
மாக்ஸிய-லெனினிய கொள்கைவழியில் சோசலிச அரசொன்றை இலங்கையில் உருவாக்குவதே அதனது நோக்கமென அப்போது அங்கு வெளிப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் 1971 இலும் பின்னர் 1987-88 களிலும் அரசாங்கத்துக்கெதிரான ஆயுதக்கிளர்ச்சிகளில் அது ஈடுபட்டிருந்தபோதிலும் அவற்றில் அதனால் வெற்றிபெற முடியவில்லை.
1971 இல் எந்த அரசாங்கத்துக்கெதிராக கிளரச்சியை ஜே.வி.பி.யினர் மேற்கொண்டார்களோ அதே அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக, அதாவது சிறிமாவோ பண்டார நாயக தலைமையிலான கூட்டு முன்னணியின் வெற்றிக்காக 1970 இல் நடந்த தேர்தலில் பரப்புரை செய்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இக்கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது மட்டுமன்றி ஜே.வி.பி.யின் உறுப்பினர் பலர் கொல்லப்பட்டதுடன் ஏனையோர் சிறையிலுமடைக்கப்பட்டனர்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனா
1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா றோகண விஜேவீர உட்பட சிறையிலடைக்கப்பட்டிருந்த ஜே.வி.பினருக்கு பொதுமன்னிப்பு அளித்ததைத் தொடர்ந்து றோகண விஜேவீர தமது இயக்கம் ஜனநாயக வழிக்குத் திரும்புவதாக அறிவித்திருந்தார்.
தொடர்ந்து 1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு 4.16% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியினரால்1983இல் திட்டமிடப் பட்டு நடத்தப்பட்ட இனக்கலவரத்தின் முழுப்பழியையும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜே.வி.பியின் தலையில் சுமத்தி அக்கட்சியைத் தடைசெய்திருந்தார்.
எனினும் இரகசியமான முறையில் இயங்கிய அக்கட்சி 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை -இந்திய உடன் படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகளில் பரவலாக ஈடுபட்டது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நீடித்த இக்கிளர்ச்சி மீண்டும் தோல்வியில் முடிவடைந்தது. இக் கிளர்ச்சியிலும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் மட்டுமன்றி ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து 1989 நவம்பர் 12 ஆந்திகதி கண்டியிலுள்ள உலப்பன தோட்டத்தில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட றோகண விஜேவீர அடுத்தநாள் காலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
றோகணவின் கொலைக்குப் பின்னர் முழுமையாக ஜனநாயக வழிக்குத் திரும்பிய அதன் முக்கிய உறுப்பினர்கள் 1994 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் இடம்பெற்ற சகல தேர்தல்களிலும் பங்கெடுத்து வருவதைக் காணமுடியும்.1994 இல் பாராளு மன்றத் தேர்தலில் 'தேசிய இரட்சிப்பு முன்னணி' என்ற பெயரில் போட்டியிட்டதுடன் தொடர்ந்து வந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாபண்டாரநாயகவுக்கு தமது ஆதரவை வழங்கினர்.
2004 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியாகப் போட்டியிட்டதுடன் நான்கு அமைச்சுப் பதவிகளையும் பெற்றிருந்திருந்தனர்.
ஆனால் 2005 இல் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவிருந்த 'TOMS' எனப்பட்ட சுனாமிக்குப் பிந்திய செயற்பாடுகளுக்கான முகாமைத்துவக் கட்டமைப்பு என்ற உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரவையிலிருந்து வெளியேறியதுடன் அரசாங்கத்திலிருந்தும் விலகிக்கொண்டனர்.
அத்துடன் அந்நேரத்தில் மின்சாரசபை யைத் தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்தமையும் அமைச் சரவையிலிருந்து விலகுவதற்கான இன்னெரு காரணமாகவும் அவர்களால் கூறப்பட்டது.
ஆனால் 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் ணியில் போட்டியிட்ட மகிந்த ராஜப க்ஷவுக்கு ஜே.வி.பி. ஆதரவளித்தது. அதற்கான காரணமாக விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகவே அவருக்கு தாம் ஆதரவளிப்பதாக அவர்களால் அப்போது சொல்லப்பட்டது.
ஜே.வி.பியின் தற்போதைய தலைவரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க 1997 இல் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றதுடன் 2014 இல் அதன் தலைவராகவும் தெரிவு செயப்பட்டார்.
அத்துடன் தங்களது கடந்தகாலத் தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்ளவும் அவர் தவறவில்லை. கட்சியின் தலைவராக அநுரகுமார பதவியேற்றபின் அவரின் அரசியல் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.
குறிப்பாகப் பௌத்த சிங்கள கடுந்தே சியவாதம், முதலாளித்துவம், இந்தியா உட்பட மேற்குலநாடுகளுக்கான எதிர்ப்புப் போன்ற முக்கிய விடயங்களில் தளர்வை ஏற்படுத்திக் கொண்டதற்கு அப்பால் அந்நாடுகளுடன் இறுக்கமான பிணைப்பையும் ஏற்படுத்தி வருவதைக் காணமுடியும்.
2019 இல் சிறிய அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள், தொழில்சார் அமைப்புகள் போன்ற 19 அமைப்புகளுடன் கூட்டுச்சே ர்ந்து ஜே.வி.பி. யால் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தைப் பெற்று இரண்டாண்டுகளைக் கடந்து மூன்றாவது ஆண்டில் தனது ஆட்சிப் பயணத்தைத் தொடர்கிறது.
மாக்ஸிய லெனினிய வழியில் சோச லிச நோக்கத்தில் தொடங்கி தீவிர சிங்களத் தேசியவாத நிலைப்பாட் டுக்கு மாறி முதலாளித்துவத்தையும் மேற்குலக தலையீடுகளையும் கடு மையாக எதிர்த்த ஜே.வி.பி. இன்று அவையெல்லாவற்றையும் வரவேற்று தன்னை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு மாறியுள்ளது.
இந்த நிலையிலிருந்து இப்போது சீனாவின் மாதிரிக்கு அது செல்ல விரும்புகிறதா என்ற ஐயத்தையே இன்று சில தரப்புகள் எழுப்பி வருகின்றன.
சீனமாதிரி என்பது பொருளாதாரத்தில் வரையறுக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தாராள முதலாளித்துவமும் அரசியலில் ஒரு கட்சிச் சர்வாதிகார ஆட்சியும் கொண்ட தொன்றாகும். இவ்வாறான மாதிரிக்கு நாட்டை நகர்த்த அரசாங்கம் விரும்புகிறதா என்ற ஐயத்தை எழுப்பி வருவதில் எதிர்க்கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன.
ஆட்சிக்கு வரும்வரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துவந்த ஜே.வி.பி. இன்று அதே சட்டத்தை வேறுவேறு வடிவங்களில் சிலவிடயங்களில் இன்னும் மோசமான தாக கொண்டுவர முயற்சிக்கிறது.
இச் சட்டங்கள் இராணுவத்துக்கும் காவல்து றைக்கும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. இவற்றின்மூலம் மக்கள் மற்றும் ஊடகங்களின் கருத்துச் சுதந் திரம் கட்டுப்படுத்தப்படுவதுடன் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூறுவது போல அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பவர்களைப் பயங்கரவா
திகளாகக் குற்றஞ்சாட்டுவதற்கும் வழிவகுக்கிறது. இவை தொடர்பில் ஐ.நா.உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கவலை தெரிவித்து வருகின்றன.
இருந்தபோதும் இக்குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்து வருவதுடன் அச்சட்டங்களை மனித உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து மீளாய்வு செய்வதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற அனைத்து மதத்தலைவர்களுடனான
கலந்துரையாடலின்போது மக்களின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் இவ்வாறான சட்டங்களினால் பாதிக்கப்பட்ட நாம் அவ்வாறு ஒருபோதும் செய்யப்போவ தில்லை என்றும் அச்சட்டங்களிலுள்ள சில பிரிவுகளை நீக்கவும் மாற்றியமைக்கவும் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எனினும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சொல்லியவையும் ஆட்சிக்கு வந்தபின் செய்பவையும் ஒன்றாக இருப்பதில்லை என்பதற்கு ஜே.வி.பியும் விதிவிலக்கல்ல என்பதை பலவழிகளில் உறுதிப் படுத்தியே வருகிறது.
அதேவேளை சிலநாட்களுக்கு முன் நடைபெற்ற புத்திஜீவிகளின் மாநாட்டில் குருநாகல் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தமது அரசாங்கம் சீனமாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுகிறது எனக் கூறியிருந்ததையும் காணமுடிகிறது.
எனவே கடந்த 61 ஆண்டு கால ஜே.வி.பியின் வரலாற்றில் பல அரசியல் நிலைப்பாடுகளை எடுத்த ஜே.வி.பி. பலரும் ஐயப்படுவதுபோல சீனாவில் நிலவிவரும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை நோக்கி நகருகிறதா என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகும்.
கந்தையா அருந்தவபாலன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!