news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செம்மணியில் முதன்முதலில் 3 என்புக் கூடுகள் மீட்கப்பட்டதை பதிவுசெய்தவன் நான்!

10 Aug, 2026
1999 இல் முதல்கட்ட அகழ்வுப் பணிகளின் நேரடிச் சாட்சியமான ஊடகவியலாளர் ந. பரமேஸ்வரனின் அனுபவப் பதிவுகள்….

கிருஷாந்தி விவகாரம் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் அவமானத்தை தேடிக்கொடுத்திருந்த படியால் விசாரணைகள் மிக நேர்த்தியாக இடம்பெற்றன.

இந்த வழக்கை விசாரிப்பதற்கென வவுனியா நீதிபதியாக கடமையாற்றி வந்த இளஞ்செழியன் தற்காலிகமாக யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டார்.

தற்போது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் போது சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் உட்பட 499 எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் செம்மணி பற்றி ஒரு பின்னோக்கிய பார்வை.

1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து இராணுவத்தினர் மீட்டதைத்தொடர்ந்து வலிகாமத்திலிருந்து வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் இடம் பெயர்ந்திருந்த மக்கள் மீண்டும் வலிகாமம் பகுதியில் குடியேறினர். 

1996-97 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர் யுவதிகள் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 634 என மனித உரிமைகள் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன.


கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட யுவதிகளில் கிருஷாந்தி என்ற சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியும் ஒருவர். கிருஷாந்தியின் கல்லூரித் தோழி ஞானந்தி முதல் நாள் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது படையினரின் ட்ரக் மோதி மரணமடைந்திருந்தார்.
 

ஞானந்தியின் மரணச்சடங்கில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்புகையில் நாவற்குழி சந்தியிலிருந்த இராணுவக் காவலரணில் கடமையிலீடுபட்டிருந்த சிப்பாய்களால் கைது செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட பின் கயிற்றால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருந்தார். மறுநாள் கிருஷாந்தியை தேடிச்சென்ற தாயும் சகோதரனும் பக்கத்து வீட்டுக்காரரும் கயிற்றால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் தபால் அதிபராக கடமையாற்றிய கோடீஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து கோடீஸ்வரன் ஜனாதிபதி சந்திரிகாவின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். 

ஜனாதிபதி சந்திரிகாவின் உத்தரவின் பேரில் இரண்டு சிறப்பு புலனாய்வுக்குழுக்கள் விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்று (அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கான சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது) நாவற்குழி சோதனைச் சாவடியிலிருந்த இராணுவத்தினரிடமும் பொலிஸாரிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்ததால் பொதுமக்களெவரும் சாட்சியளிக்க முன்வரவில்லை. கிருஷாந்தியின் மிதிவண்டி, மிதிவண்டி திருத்தகம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. மிதிவண்டி திருத்தக உரிமையாளர் நாவற்குழி இராணுவக் காவலரணில் கடமையிலீடுபட்டிருந்த படையினரே மிதிவண்டியை ஒப்படைத்ததாக சாட்சியமளித்தார்.

இதனையடுத்து நாவற்குழி காவலரணிலிருந்த படையினரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது சோமரத்ன ராஜபக்ச என்ற சிப்பாய் அப்ரூவராக மாறி சாட்சியமளித்தார். குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஆறு பேருக்கு மரணதண்டனையும் மூவருக்கு 20 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

அப்ரூவராக மாறி சாட்சியமளித்த சோமரத்ன ராஜபக்ச இந்தக்காலப்பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட 450 பேரின் சடலங்கள் செம்மணிப்பகுதியில் புதைக்கப்பட்டதாகவும் அவற்றை தன்னால் அடையாளம் காட்ட முடியும் எனவும் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து ஆரம்பத்தில் கொழும்பில் நடைபெற்ற வழக்கு விசாரணை பின்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, 16.06.1999 புதன்கிழமையன்று விசாரணைகள் ஆரம்பமாகின. 

இந்த வழக்கை விசாரிப்பதற்கென வவுனியா நீதிபதியாக கடமையாற்றி வந்த இளஞ்செழியன் தற்காலிகமாக யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டார். கிருஷாந்தி விவகாரம் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் அவமானத்தை தேடிக்கொடுத்திருந்த படியால் விசாரணைகள் மிக நேர்த்தியாக இடம்பெற்றன; படையினரும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.

விசாரணைகள் ஒழுங்காக நடைபெறுவதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காக கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் 75 உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

யாழ்ப்பாணத்தில் அந்தக்காலப்பகுதியில் விடுதிகளெவையும் இல்லாத காரணத்தால் (இருந்த இரண்டு விடுதிகளும் சுபாஸ், ஞானம்ஸ் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்தன) பஸ்ரியன் சந்தியில் இருந்த புனர்வாழ்வு (RRAN) அமைச்சுக்குச் சொந்தமான கட்டடத்திலேயே அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். அழைத்துவரப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தேவையான உதவிகளை நிமலராஜன் செய்து கொடுத்தார்.

நான்காம் குறுக்குத்தெருவிலுள்ள ஒரு வாடகை வீட்டிலேயே நீதிமன்றம் இயங்கி வந்தது. வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகிய அன்று காணாமலாக்கப்பட்டோர் சங்கம் நீதிமன்ற வாசலில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 


சோமரத்ன ராஜபக்சவும் ஏனைய குற்றவாளிகளும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட படியால் நீதிமன்றத்தைச்சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்ற வாசலுக்கு வாகனங்களை அனுமதிக்காததால் நான் எனது மிதிவண்டியை மூன்றாம் குறுக்குத்தெருவிலுள்ள ஒரு வீட்டு மதிலுடன் சாத்தி பூட்டி விட்டுச்சென்றேன். குற்றவாளிகள் அழைத்து வரப்பட்ட போது காணாமலாக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மண் அள்ளித்திட்டி பெருங்குரலில் கோஷமெழுப்பினர்.

அன்றைய தினம் நீதிமன்ற சம்பிரதாயங்களை மீறி தொலைக்காட்சி ஊடகவியாளர்கள் நீதிமன்றத்தின் பின் வரிசை வாங்கின் மேல் ஏறி நின்று ஒளிப்பதிவு செய்தனர். 

அச்சு ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தின் உள்ளே நின்றவாறு தமது கமெராக்கள் மூலம் படம் பிடித்தனர். நீதிமன்ற அமர்வு முடிந்ததும் ஊடகவியலார்கள் செம்மணி பகுதிக்கு பஸ்ஸில் அழைத்துச்செல்லப்பட்டனர். 

செம்மணி சந்தியில் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் பி.பி.சி.தமிழோசை தயாரிப்பாளர் ஆனந்தி “நான் ஓடி ஆடி விளையாடிய இடமெல்லாம் ஆமிக்காரன் நிற்கிறான்” என்றார். 

ரொய்ட்டர்ஸ் படப்பிடிப்பாளர் வருண கருணாதிலக முன்னே செல்ல ஏனையோர் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். நானும் அவர்களுடன் சென்றேன் அப்போது அங்கு கடமையிலிருந்த கப்டன் ஒருவர் என்னைப்பார்த்து “Are you a journalist” என்று கேட்டார் நான் அப்போது பணிபுரிந்த பத்திரிகையின் பெயரைக் கூறி அதன் உடகவியலாளன் என்றேன். oh sorry sorry என்றார். 

கையில் டயறியும் பேனையுமாக காலில் சாதாரண சாண்டில்சுடன் சென்றது, என்னை மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்க வேண்டும், 

அதனாலேயே அந்த கப்டன் என்னைப் பார்த்து அவ்வாறு கேட்டிருக்க வேண்டும். முதலில் சென்ற வருண கருணாதிலக பாதையிலிருந்து சற்று ஓரமாக நின்று வீடியோ எடுக்கத்தொடங்கினார். 

வீதியோரத்தில் கடமையிலீடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் சேர் மிதிவெடி இருக்கும் கவனம் என்றார்: வருண கருணாதிலக அந்த சிப்பாயை பளையங் என்று முழங்கையால் தட்டி விட்டார். இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அந்தக் காலப்பகுதியில் படையினர் தமிழர்களை இரண்டாந்தர பிரசைகளாகவே நடத்தி வந்தனர். அதனால் வருண கருணாதிலகவின் செயற்பாடு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

புதைகுழி தோண்டும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை வருண கருணாதிலக நிமலராஜனிடம் சிங்களத்தில் ஏதோ கேட்டார். நிமலராஜன் சிரித்தார்,

 நான் நிலமராஜனிடம் என்னவாம் என்று கேட்டேன் பி.பி.சி ஆனந்தியை புலி என்று சொல்கிறார் என்றார் நிமலராஜன். அனைவருக்கும் கடும் பசி. வெளியே செல்லவும் முடியாது. மாலை நான்கு மணியளவில் பற்றீசும், சான்விச்சும் தேநீரும் வந்தன. 

சான்விச் மாமிசமாக இருந்த படியால் நான் பற்றீசை மட்டும் எடுத்தேன். யானைப்பசிக்கு சோளப்பொரி போலிருந்தது, பற்றீசும் தேநீரும். மலை 4.30 வரை ஒன்றுமே கிடைக்கவில்லை. 

எலிகளின் எலும்புகள் தான் கிடைத்தன. கொழும்பிலிருந்து வந்தவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு விட்டனர். 4.30 மணிக்குப்பின்னர் இரண்டு எலும்புக்கூடுகள் முழுமையாகவும் ஒன்று பகுதியாகவும் மீட்கப்பட்டன. மறுநாள் நான் அப்போது பணியாற்றிய பத்திரிகை தவிர்ந்த சிங்கள, ஆங்கில ஊடகங்கள் யாவும் செம்மணியில் எலிகளின் எலும்புகளே மீட்கப்பட்டன என செய்தி வெளியிட்டன. 

நான் களத்தில் நின்ற படியால் 3 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட செய்தியை நான் கடமையாற்றிய பத்திரிகைக்கு அனுப்ப முடிந்தது. அப்போது தான் நான் டெய்லி மிரர் செய்தியாளராக நியமிக்கப்பட்டிருந்தேன். அத்துடன் அதுவரை புதன்கிழமைகளில் வார பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகை அன்றுதான் தினசரியாக வெளிவரத்தொடங்கியிருந்தது. எனது செய்தி வெளிவந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்து பத்திரிகையின் நிருபர் நிருபமா சுப்பிரமணியனும், சண்டே லீடர் பத்திரிகையாளரும் விமானத்தில் கொழும்பு செல்லாமல் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தனர். 

முதல் நாள் அனுபவம் இருந்த படியால் நான் மனைவியிடம் சொல்லி இட்லி தயாரித்து எடுத்துச்சென்று நிரூபமாவுக்கு கொடுத்தேன்; நிரூபமா ஒரு பிராமணப் பெண்மணி, தமிழ் எழுத வாசிக்கத்தெரியாது; தான் டெல்லியில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றதால் தனக்கு தமிழ் எழுத வாசிக்கத்தெரியாது என்றும் என்னிடம் சொன்னார்.

செம்மணி புதைகுழி தோண்டப்பட்ட காலத்தில் காலையிலிருந்து மாலை வரை அகழ்வுப்பணிகள் நடைபெறும் நானும், நிமலராஜனும், வித்தியாதரனும் தினமும் மாலையில் செல்வோம். 

மாலையில் சட்ட வைத்திய அதிகாரி அன்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்பட்டவற்றைப்பற்றி விபரிப்பார்; நாங்கள் நகரப்பகுதிக்குச் சென்று தொலைபேசி மூலமும் பக்ஸ் மூலமும் செய்திகளை அனுப்புவோம். லேக் ஹவுஸ் நிருபர் கதிர்காமத்தம்பியும் பக்ஸ் மூலம் செய்தி அனுப்புவார். அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தொலைபேசி வசதி இருக்கவில்லை தமிழ் அரசியல் கட்சிகளின் அலுவலக தொலைபேசிகள் மூலமே செய்திகளை வழங்கி வந்தோம்.

இந்த காலப்பகுதியில் 15 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இவை யாவும் அரியாலை பகுதியில் கைது செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள். அவற்றை உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

இப்போது மீட்கப்படும் எலும்புக்கூடுகள் 1996-97 காலப்பகுதியில் காணாமல் போனவர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை. அத்துடன் மீட்கப்பட்ட தடயப்பொருட்களும் அந்தக்காலப் பகுதிக்குரியவையாகக் காணப்படவில்லை. உரிய நிபுணத்துவ ஆய்வுகள் மூலமே தற்போது மீட்கப்படும் எலும்புக்கூடுகள் பற்றி முடிவு செய்யலாம்.


1999 இல் முதல்கட்ட அகழ்வுப் பணிகளின் நேரடிச் சாட்சியமான ஊடகவியலாளர் ந. பரமேஸ்வரனின் அனுபவப் பதிவுகள்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!