செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இரு நாடுகளிடையே எந்நேரமும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வந்த தாக்குதலுக்கு கடந்த மாதம் தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவும், ஈரானும் நிரந்தர போர்நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இப்பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வந்தது. ஈரானும், அமெரிக்காவும் தங்களது கோரிக்கைகளை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர் இப்பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்து வந்தார். ஈரானிடம் இருக்கும் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
ஆனால் அதனை ஈரான் தொடர்ந்து நிராகரித்து வந்தது. அதோடு அமெரிக்கா தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், ஈரான் மீதான தடையை நீக்கவேண்டும் என்றும் ஈரான் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்தது. தொடர்ந்து இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் புதிய திருப்பமாக இப்பேச்சுவார்த்தையில் கத்தார் நாடும் கலந்து கொண்டது.
Mobile

ஈரான் அணு ஆராய்ச்சி மையம்
கத்தார் தனது நாட்டில் இருந்து உயர்மட்டக்குழுவை ஈரானுக்கு அனுப்பி வைத்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இப்பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் தன்னிடம் இருக்கும் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் உருவாகிவரும் ஓர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்மூலம் வாஷிங்டன், இஸ்ரேல் மற்றும் தெஹ்ரான் இடையே பல மாதங்களாக நீடித்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்போதைய முயற்சிகளில் இந்த முன்னேற்றம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் இருவர் ஈரான் கொள்கை அளவில் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது என்று தெரிவித்தனர். ஆனாலும் யுரேனியம் அழிக்கப்படுமா அல்லது அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுமா என்பது குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!