news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜனாதிபதியைச் சந்தித்த அனோஜனின் குடும்பத்தினர்

22 Sep, 2026
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோரை, திங்கட்கிழமை (21)  முற்பகல் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சந்தித்தார்.

சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காகச் சட்டரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்யும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூலக் கோரிக்கையை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இதுவரை உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு அவரின் பெற்றோருக்குத் தெரிவித்த ஜனாதிபதி, குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவும் நெருக்கமாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!