தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் இருந்தே இயக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இரண்டு ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.தேர்தல்
அதனை ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தொடர்ந்து மறுத்து வந்தாலும், அவரை மையப்படுத்தியே ஆட்சி முன்னெடுக்கப்படுகிறது. அதனால் தான் இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் அவரை அடிக்கடி சந்திக்கிறார்கள்.
அண்மையில் லங்காதீப நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலும் ரில்வின் சில்வா, எதிர்க்கட்சியினர் பெலவத்தையில் ஒரு 'அறியப்படாத சக்தி'தான் நாட்டை இயக்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.
உண்மையில் அப்படி எதுவுமில்லை. பெலவத்தை என்பது அரசாங்க நிர்வாகம் தொடர்பான பணிகள் நடைபெறும் ஒரு இடமே தவிர, அங்கு அரசாங்கத்தை இயக்கும் ஓர் 'அறியப்படாத நபர்' யாரும் இல்லை” எனக் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில், கடந்த 5ஆம் திகதி பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி. தலைமையகத்திற்கு சீனத் தூதுவர், வெய் ஹூவா சியாங், சென்றிருந்தார்.
அந்தச் சந்திப்பு தொடர்பாக ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா முகநூலில் சில தகவல்களைப் பதிவிட்டிருக்கிறார்.
“இதன்போது, ஒக்டோபர் 29ஆம் திகதி நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் ஐந்தாவது முழு அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த முடிவுகளின் பின்னணியில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் முழுமையான மற்றும் கடுமையான சுய-ஒழுக்கத்தைப் பேணுவது குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்தும் சீனத் தூதுவர் விளக்கமளித்தார்.
இது தொடர்பான மேலதிக விளக்கங்களை வழங்குவதற்காக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி ஒருவர் விரைவில் இலங்கைக்கு வருகை தந்து ஜே.வி.பி. உறுப்பினர்களுக்குத் விளக்கமளிக்கவுள்ளார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
முதலீடு, தொழில்நுட்பம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீனத் தூதுவர் ஹுவா சியாங் தெரிவித்தார்.
ஜே.வி.பிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் மற்றும் கட்சிக் கட்டமைப்பில் சீனாவின் அனுபவங்களின் முக்கியத்துவம் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன என்று அந்தப் பதிவில் ரில்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார்.
ஒக்டோபர் 29 ஆம் திகதி நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் ஐந்தாவது அமர்வில், அப்படியென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது தெரிந்தால் தான், அதற்கும் ஜே.வி.பிக்கும் என்ன தொடர்பு என்பதை விபரிக்க முடியும்.
பெய்ஜிங்கில் ஒக்டோபர் 26 முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் ஐந்தாவது முழு அமர்வில், கட்சியின் ஒழுங்குமுறை மற்றும் அரசியல் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சி அமைப்பை முழுமையாகச் சீரமைத்தல் ஆகிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறையைத் தொடர்வது தொடர்பான முக்கிய தீர்மானம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கட்சியின் அரசியல் பிரிவு ஏற்கெனவே எடுத்திருந்த முடிவின்படி, ஊழல் மற்றும் ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான, 33 மத்திய குழு உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கும் முடிவு உறுதி செய்யப்பட்டது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மிக மூத்த தளபதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான அதிரடி நடவடிக்கைகளுக்குப் பின்னர், ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவரான சாங் ஷெங்மின் கட்சியின் சக்திவாய்ந்த நிறைவேற்றுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய வளர்ந்து வரும் துறைகளிலும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல், அதிகாரிகளின் தகுதியை மேம்படுத்துதல் மற்றும் ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கின் தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றை மைய அதிகாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
பொருளாதாரத் திட்டங்களை விட, கட்சியின் உள்ளகத் தூய்மை மற்றும் அரசியல் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதே இந்த 5ஆவது முழு அமர்வின் முதன்மை நோக்கமாக இருந்தது. இந்த தீர்மானங்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இருதரப்பு உறவுகளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளன.
இலங்கையின் ஆளும் கட்சியான ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும், சீனாவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளில் இந்த தீர்மானங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.தேர்தல் செய்திகள்
அதனால் தான், இந்த மாநாட்டு முடிவுகள் தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் இலங்கைக்கு வந்து, ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழல் ஒழிப்பு மற்றும் ஒழுக்கமான அரச நிர்வாகத்தை முதன்மையான இலக்காக கொண்டு செயற்பட்டு வருகிறது.
அதேவேளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 5ஆவது முழு அமர்வின் முக்கிய நோக்கமும், ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கின் கீழ், ஊழலுக்கு எதிரான கடுமையான ஒழுங்க விதிகளை கொண்டு வருவதாகும். ஒரு கட்சி எவ்வாறு ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் என்ற சீனாவின் தத்துவார்த்த அனுபவங்களை, ஜே.வி.பியுடன் பகிர்ந்து கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது.
அதாவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது உள்நாட்டு அரசியலைத் தூய்மைப்படுத்த எடுத்த முடிவுகளை, ஜே.வி.பியுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சிக்கிறது.
இதனூடாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம், ஜே.வி.பி.யின் ஊடாக இலங்கையின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பிற்குக் கடத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.அரசியல் செய்திகள்
ரில்வின் சில்வா சீனாவுக்குச் சென்றிருந்த போது, இலங்கையில் ஜே.வி.பி. எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, 15 முதல் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று, சீன அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இப்போது, அவர்கள், ஜே.வி.பி.யை குறைந்தபட்சம் இரண்டு தசாப்தங்களுக்கு ஆட்சியில் அமர வைக்க திட்டமிடுகிறார்கள்.
இந்த திட்டத்தை செயற்படுத்துவதாயின், சீன முன்மாதிரியை ஜே.வி.பி. பின்பற்ற வேண்டும்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் தீர்மானங்களின்படி, சுய ஒழுக்கம் முக்கியமானது. அதுபற்றி ஜே.வி.பி.யினருக்கு சீனா பாடம் கற்பிக்கவுள்ளது.
ஏனென்றால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு கொள்கையில் தீவிரமாக இருந்தாலும், இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியினரின் பல நம்பிக்கையில்லா பிரேரைணைகளை எதிர்கொண்டிருக்கிறது.
முன்னாள் சபாநாயகர் அசோக்க ரன்வல குற்றச்சாட்டுகளால் பதவி விலக நேரிட்டது.
தற்போதைய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையில்லா பிரேரணையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அது தவிர, முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து பதவி விலகியிருக்கிறார். அவருக்கு எதிராக வழக்கும் நடக்கிறது.
குமார ஜயகொடி மற்றும் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கிறது.
இவ்வாறான சம்பவங்கள், நீண்டகாலத்திற்கு ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி.யினது மட்டுமல்ல சீனாவின் திட்டத்திற்கும் சவாலானது.
இதனால் தான், இறுக்கமான கட்சிக் கட்டுப்பாடுகளும், இலஞ்ச ஊழலுக்கு எதிரான தீவிர ஒழுக்காற்று நடவடிக்கைகளும் சீனத் தரப்பினால் வலியுறுத்தப்படுகிறது.
இந்த இடத்தில் சிக்கல் ஒன்று இருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஜே.வி.பி. உறுப்பினர்களை விட, தேசிய மக்கள் சக்தியின் ஏனைய அங்கத்துவ அமைப்புகளின் உறுப்பினர்களே அதிகம். பிரதமர் ஹரிணி அமரசூரிய கூட அப்படிப்பட்டவர் தான்.
தேசிய மக்கள் சக்தி பல்வேறு பல்வேறு துறைசார் அமைப்புகளால் உருவாக்கப்பட்டது. அவர்களை ஜே.வி.பி. கட்டமைப்புக்குள் கொண்டு வந்தால் தான், அந்த இறுக்கமான உள்ளக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த முடியும்..
இதற்கான யோசனைகளையே சீன அதிகாரிகள் முன்வைக்கவுள்ளனர் எனத் தெரிகிறது.
அது தவிர, சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், ஜனாதிபதி ஜின்பிங்கின் தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றை மைய அதிகாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அங்கு ஏற்கெனவே அது தான் நடைமுறையில் இருக்கிறது. அதனை இன்னும் வலுப்படுத்த முயற்சிக்கப்படுகிறது.
இதுபோன்ற முன்னுதாரணத்தை இலங்கையில் உருவாக்குவதிலும் சிக்கல் உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யின் தலைவராக இருந்தாலும், பெலவத்தையினால், அதாவது ரில்வின் சில்வாவினால் கட்டுப்படுத்தப்படுகிறார் என்ற கருத்து நிலவுகிறது.
இவ்வாறான நிலையில், சீன மாதிரியைப் பின்பற்றி, ஒற்றை மைய அதிகாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் தீர்மானத்தை ஜே.வி.பி.யினால் அவ்வளவு இலகுவாக எடுத்து விட முடியாது.
அந்தக் கட்டம் வரும் போது, யார் அந்த ஒற்றை மைய அதிகாரக் கட்டமைப்பு என்ற கேள்வி வரும்.
ஜனாதிபதி அநுரவா அல்லது ரில்வின் சில்வாவா என்ற கேள்வி எழும்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தியில் இடம்பெற்றுள்ள ஏனைய தரப்புகள் இந்த தீர்மானங்களுடன் எவ்வாறு இணங்கிப் போகும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இலங்கையின் அரசியல் அதிகாரத்தை சீனா எப்படி வடிவமைக்க முற்படுகிறது என்பதை நிறுவுவதற்கான சில வழி வரைபடங்கள் இப்போது கிடைக்கத் தொடங்குகின்றன.இலங்கை செய்திகள்
இந்த வழிவரைபடங்கள், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது போல, ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கிய திசையில் நாடு பயணிப்பதற்கான அறிகுறிகளையும் வெளிப்படுத்துகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க- இந்திய வல்லரசுகள் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?
என். கண்ணன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!