news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார்

04 Nov, 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய அரசியல் பிரமுகர்,  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கடந்த வாரத்தில் சந்தித்த போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உள்வீட்டு தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். ஞானசார தேரரின் கைது குறித்து அவர் குறிப்பிடுகையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனக்குத்தானே தேடிக்கொண்ட ஒரு தேவையற்ற நெருக்கடிதான் ஞானசார தேரரின் கைது மற்றும் காவி ஆடை விவகாரம். 

நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அன்று அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அவரது காவி உடையில் கைவைக்கவில்லை.

 ஏனெனில், அத்தகைய ஒரு நடவடிக்கை பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பையும் எதிர்வினையையும் ஏற்படுத்தும் என்பதை அரசியல் அனுபவம் மிக்க ரணில் நன்கு அறிந்திருந்தார். இதனால் அன்று அந்த விவகாரம் ஒரு பெரிய அரசியல் பேசுபொருளாக மாறாமல் கடந்துபோனது.அரசியல் செய்திகள்

ஆனால், ஒரு நாட்டை ஆளுவதற்கு அரசியல் அனுபவம் எந்தளவிற்கு அத்தியாவசியமானது என்பதை தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய செயற்பாடுகள் அனைவருக்கும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. 

தமது அதிகாரப் பெருமிதத்தால் காவி உடையைக் களைந்ததன் மூலம், சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த இனவாதச் சக்திகளின் கைகளில் அரசாங்கமே ஒரு பெரிய ஆயுதத்தைக் கொடுத்துவிட்டது. 

இதன் விளைவாக, காவி ஆடை விவகாரத்தையும் தாண்டி, தற்போது ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வரை பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. 

இந்த விடயத்தில் தமது தீர்மானத்தை நியாயப்படுத்தி உறுதியாக நிற்பதாகக் காட்டிக்கொண்ட அரசாங்கம், இத்தனை பெரிய எதிர்ப்பு கிளம்பும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. 

'ஒரு தனிநபருக்காகச் சட்டத்தை மாற்ற மாட்டேன்' என்று மேடைகளில் வீர வசனம் பேசிய ஜனாதிபதிக்கு, கண்டியில் தொடங்கிய பௌத்த தேரர்களின் பாதயாத்திரை கொழும்பை வந்தடைவதற்குள்ளாகவே, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசாங்கத்தின் இந்த பின்வாங்கல் இனவாதிகளுக்கு மேலும் சாதகமாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில் அரசாங்கம் அமைதி காத்திருந்தால் அவர்கள் தம் வழியில் சென்றிருப்பார்கள். ஆனால், தற்போது அழுத்தங்களைக் கொடுத்தால் அரசாங்கம் வளைந்து கொடுக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டதால், தங்களின் கோரிக்கையைப் பொதுமன்னிப்பு வரை கொண்டு சென்றுவிட்டனர்.


இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தால் அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடி உருவாகும் என்பதை உணர்ந்த ஜனாதிபதி, அடுத்ததாக ஒரு புதிய பேசுபொருள் வரும் வரை இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டு, பின்னர் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்துவிட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதால் பொதுமன்னிப்பு வழங்குவது எளிதாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் இது நிச்சயமாக நடக்கும் என்றார்.

ரணிலின் இரகசியக் காய்நகர்த்தலும் வீழ்ச்சியின் அத்திவாரமும்

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் இராஜதந்திரத்தை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் தீவிர அரசியலில் இருக்கும் அவருக்கு, இந்த நகர்வுகள் எங்கு போய் முடியும் என்பது நன்றாகவே தெரியும். இந்த விவகாரம் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வெறும் ஊடக அறிக்கை அல்ல, அதன் பின்னணியில் ஆழமான அரசியல் நோக்கம் உள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியடைவேன் என்று தெரிந்தும் ரணில் போட்டியிட்டார். சஜித் பிரேமதாச வெற்றிபெறக் கூடாது என்பதே அவரது ஒரே இலக்காக இருந்தது.

 'சஜித் வெற்றிபெற மாட்டார்; எனவே அநுரவுக்கு வாக்களியுங்கள்' என்று அவர் மேடைகளில் கூறியது விளையாட்டல்ல. ரணில் போட்டியிடாமல் சஜித்தை ஆதரித்திருந்தால் சஜித் எளிதாக வெற்றிபெற்றிருப்பார். ரணிலின் மறைமுக ஆதரவே அநுர குமார திசாநாயக்கவை ஆட்சியில் அமர்த்தியது.


அவ்வாறு இருந்தும், அநுரவின் ஆட்சியில் தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவேன் என்று ரணில் எதிர்பார்க்கவில்லை. சிறையில் அவரைச் சந்தித்தபோது, 'அநுர எனக்கு இப்படி செய்வார் என்று நான் நினைக்கவில்லை' என்று அவர் கூறிய வார்த்தைகளுக்குள் பெரிய அரசியல் இருக்கிறது. 

அன்றே அநுர அரசாங்கத்திற்கான கெடு தொடங்கிவிட்டது. ரணில் வெளியில் தீவிர அரசியலில் ஈடுபடாதது போல் தோன்றினாலும், பின்னணியில் மிக இலாவகமாகக் காய்களை நகர்த்தி வருகிறார். இதனால் அரசாங்கத்தின் அத்திவாரம் ஆடத் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டிய அவசியமில்லை, இவர்கள் செய்த தவறுகளால் தாமாகவே விழுவார்கள் என்று குறிப்பிட்டார்.

ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக நடுத்தர வர்க்கம்

இலங்கை மக்களின் அரசியல் அறிவு மிகவும் முதிர்ச்சியானது. 2010இல் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷ, 2015இல் யாரும் எதிர்பாராத வகையில் மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்கடிக்கப்பட்டார். 

பின்னர் 2019இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்; ஆனால் இரண்டே ஆண்டுகளில் மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பினர். அதன் பின்னர் ரணிலின் ஈராண்டு கால ஆட்சிக்குப் பிறகு, இன்று தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இருக்கிறது.


2010க்குப் பிந்தைய இலங்கையின் அரசியல் போக்கை உற்றுநோக்கினால், எந்தவொரு அரசாங்கமும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியமைக்கவில்லை என்பதை அறியலாம். 

நாட்டில் பெரும்பான்மையாக உள்ள நடுத்தர வர்க்க மக்களே இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். 

பொருளாதார ரீதியாக ஓரளவிற்கு ஸ்திரத்தன்மை கொண்ட இவர்கள், வெளிப்படையாக அரசியலில் ஈடுபடாவிட்டாலும், தங்களின் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும்போது ஆட்சியாளர்களைத் தூக்கியெறியத் தயங்குவதில்லை. 

அரசாங்கம் இந்த வர்க்கத்தினரின் நிலைப்பாட்டை மதிப்பீடு செய்யாமல், பழிவாங்கும் அரசியலிலேயே கவனம் செலுத்துகிறது. பழிவாங்கல் அரசியல் என்றாவது ஒருநாள் தங்களையே திருப்பித் தாக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என அனுபவ ரீதியாக குறிப்பிட்டார்.தீவுகள் ஆராயுங்கள்

'விஜய்' காட்டும் அரசியல் ஆளும் தரப்பிற்கு ஒரு பாடம்

அண்டைய மாநிலமான தமிழகத்தின் அரசியல் சூழலை நோக்கினால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் மிகவும் முதிர்ச்சியோடு நடந்துகொள்வதைக் காண முடிகிறது. 

தேர்தல் மேடைகளில் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக அவர் கடுமையாகப் பேசினாலும், வெற்றிக்குப் பிறகு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதுவரை எந்தவொரு முக்கிய புள்ளியையும் அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காகக் கைது செய்யவில்லை.

முதன்முறையாக முழுநேர அரசியலுக்குள் களமிறங்கியுள்ள விஜய்யிடம் இருக்கும் அந்த அரசியல் சாணக்கியம், துளியளவும் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை. 

எதிராளிகளை வரிசையாகச் சிறையில் அடைத்துவிட்டால் மட்டுமே மக்கள் திருப்தியடைந்து விடுவார்கள் என்று அரசாங்கம் தவறாகக் கணக்குப்போடுகிறது. அனுபவமின்மையும் பழிவாங்கல் போக்கும் தொடர்ந்தால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கான வீழ்ச்சி வெகுதொலைவில் இல்லை என்றும் பெயர் குறிப்பிடாத ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.சமூக உதவி செய்

முடிவுக்கு வந்த சத்யாகிரகமும் அடங்காத தணலும்

பௌத்த பிக்குகளின் சத்யாகிரஹப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்தாலும், அதற்கு ஆதாரமாக அமைந்த பிரச்சினை இன்னும் சாம்பலுக்குள் இருக்கும் தணல் போல் புகைந்துகொண்டுதான் இருக்கிறது. 

இந்த விடயத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழு சந்திப்பில் தெரிவித்தார். இந்த சந்திப்பு புதன்கிழமை இடம்பெற்றிருந்தது.

'ஞானசார தேரர் விடுதலை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியுடன் பேசியுள்ளனர். அதேபோன்று சத்யாகிரகத்தில் ஈடுபட்ட பிக்குகளும் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். 

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சத்யாகிரகத்தைக் கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் சம்பந்தப்பட்ட பிக்குகளுக்கு அறிவித்தனர். தற்போது அரசாங்கம் இதற்கு ஏதேனும் சாதகமான பதிலை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அத்தகைய சாதகமான பதிலை அளிப்பதா இல்லையா என்பதை இப்போது ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.' என ரணில் இதன் போது கூறினார்.


'பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது ஞானசார தேரரின் வழக்குத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், பொதுமன்னிப்பு வழங்குவது ஒரு பிரச்சினையாக இருக்கும் என்றே ஜனாதிபதி கூறுகிறார். பொதுமன்னிப்பு வழங்கப்படாவிட்டாலும், இந்தப் பிரச்சினை இதைவிடப் பெரிய அளவில் வெடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. இது மகாநாயக்க தேரர்களுக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகளையும் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும். அரசாங்கத்திற்கு மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது' என ரணில் எச்சரித்தார்.

இந்திய எதிர்ப்பு முயற்சி

எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்துக் குழுக்களும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி மீது அதிருப்தியில் உள்ளன. 

தற்போதைய சூழலில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி பிரதான கலந்துரையாடல் பொருளாக மாறியுள்ளது. 


இருப்பினும், பொதுமக்கள் மத்தியில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எந்தவொரு ஆர்வமும் இல்லை. மாறாக, மகா சங்கத்தினரின் கௌரவத்தைப் பாதுகாத்து பௌத்த தர்மத்தைப் பேணிப் பாதுகாப்பது குறித்தே பொதுச்சமூகத்தில் பலத்த உரையாடலும் கவனமும் நிலவுகிறது.

 ஆனால், நாட்டின் உண்மையான இந்தப் பிரதான பிரச்சினையை அடியோடு மூடிமறைத்துவிட்டு, சஜித் பிரேமதாசவின் குழுவினர் தொடர்பற்ற வேறு விடயங்களைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என வஜிர அபேவர்தன கூறினார்.சமூக உதவி செய்

இந்த பரபரப்பான அரசியல் பின்னணியில், அநுராதபுரம் புனித பூமியின் இருப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சமூகத்தில் பல்வேறு சந்தேகங்களும் அச்சங்களும் பரவி வருகின்றன. நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வரலாற்றுப் புனிதத் தலம் குறித்து எழும் வதந்திகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளபோதிலும், அரசாங்கம் இதுவரை இதற்கு எவ்வித தெளிவான பதிலும் வழங்காமல் மௌனம் காத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் இதன் போது தெரிவித்தார்.

'தற்போது அநுராதபுரம் புனித பூமி குறித்துப் பல்வேறு உரையாடல்கள் உருவெடுத்துள்ள நிலையில், அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாட்டிற்குத் தெளிவாகக் கூற வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. சிலர் இந்த விவகாரத்தை ஒரு 'இந்திய எதிர்ப்பு' பிரச்சாரமாக உருவகப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.' என ரணில் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் மூன்று புதிய சட்டமூலங்கள்

அரசாங்கத்தினால் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள மூன்று சர்ச்சைக்குரிய சட்டமூலங்கள் தொடர்பாகக் கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்த மூன்று சட்டமூலங்களும் தனித்தனியாக அல்லாமல் ஒன்றாகச் நடைமுறைப்படுத்தப்படும்போது, நாட்டில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.


'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டமூலம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூலம் ஆகிய மூன்றையும் ஒன்றாகப் பார்க்கும்போதுதான் இதன் பின்னணியில் உள்ள தீவிரமான ஆபத்து புரியும்.

 இது தொடர்பாக விரிவாக பகுப்பாய்வு செய்து, இதற்கு எதிராக நான் நீதிமன்றத்தை நாடினேன். ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எனக்காக உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்தார். இருப்பினும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதுடன் மட்டும் நமது பணி முடிந்துவிடாது என்பதை நாங்கள் தெளிவாகத் தீர்மானித்துள்ளோம். இந்தச் சட்டமூலங்களால் ஏற்படப்போகும் விபரீதங்கள் குறித்துப் பொதுமக்களுக்குப் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.' என்றார்.

சம்பிக்க ரணவக சுவாரசியமான விளக்கம்

கொழும்பு 7இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து, முன்னணி ஊடகப் பிரமுகர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக சில முக்கிய மற்றும் சுவாரசியமான அரசியல் தகவல்களை வெளிப்படுத்தினார்.பயண வழிகாட்டி

முந்தைய காலத்தில் சுனாமி நிவாரண சபை அமைக்கப்பட்டபோது தாம் முன்னெடுத்த போராட்ட முறைமையைப் பற்றி இதன் போது விளக்கிய பாடலி சம்பிக்க ரணவக, தந்திரோபாய ரீதியாக எவ்வாறு நகர்வுகளை மேற்கொண்டோம் என்பதைப் பகிர்ந்துகொண்டார், 'நாங்கள் போராட்டம் (சத்யாகிரஹம்) ஒன்றினை நடத்துவதற்காகக் கண்டி ஸ்ரீ  தலதா மாளிகைக்குச் சென்றோம். எனினும், ஸ்ரீ தலதா மாளிகையின் உட்புறத்தில் சத்யாகிரஹப் போராட்டத்தை நடத்துவதற்கு தியவடன நிலமே கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அதற்கு நாங்கள், மாளிகையின் உட்பகுதியில் போராட்டத்தை நடத்தும் எண்ணம் எமக்கு இல்லை என்றும், மாளிகைக்கு வெளியிலேயே அதனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றும் தெளிவுபடுத்தினோம். அதனைக் கேட்டவுடன், மாளிகைக்கு வெளியிலேயே சத்யாகிரஹத்தை நடத்துவதற்கான அனைத்து வசதிகளையும் அவர்களாகவே ஏற்பாடு செய்து தந்தனர். உண்மையில், நாங்களும் அதைத்தான் சாதித்துக்கொள்ள விரும்பினோம்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தையும் தற்போதைய அரசியல் சூழலையும் ஒப்பிட்டுப் பேசிய பாடலி சம்பிக்க, அரசாங்கத்திற்கு எதிரான அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்துப் பின்வருமாறு கூறினார்,அரசியல் செய்திகள்

'ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி தனது ஆட்சிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகக் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார். தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிலைமையும் மெல்ல மெல்ல அந்த திசையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம், இந்தச் சூழலுக்குச் சிறியதொரு அழுத்தத்தைக் கொடுத்துவிட்டு அமைதியாக ஒதுங்கி நின்று நடப்பதைப் பார்ப்பது மட்டுமே' என்றார்.


(லியோ நிரோஷ தர்ஷன்)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!