news@ilakkiyainfo.com

பிரிவுகள்

டாட்டூ, 100 சிசிடிவிக்கள் ஆய்வு': மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் நிஷாந்த் சிக்கியது எப்படி? யூடியூபருக்கு என்ன தொடர்பு?

17 Nov, 2026

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 11.384 கிலோ தங்கம், வைர நகைகள் திருடப்பட்டன என்றும், அவை தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் நேரடியாக கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் அவரது தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நிஷாந்த் கைது செய்யப்பட்டது எப்படி? இந்தக் கொள்ளையில் சமூக ஊடகப் பிரபலம் மீனாட்சிக்கு என்ன தொடர்பு?


நிஷாந்த் கைது செய்யப்பட்டது எப்படி?
 


நிஷாந்த்

நவம்பர் 12-ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடந்த நிலையில், ஏறக்குறைய 4 நாட்களுக்குப் பிறகு நிஷாந்தை தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக தருமபுரி மாவட்டக் காவல்துறை நேற்று (நவம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில், 'நிஷாந்த் (23), நவம்பர் 16 அன்று அதிகாலை தருமபுரி வழியாகச் சென்ற ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பேருந்து ஓட்டுநர் மாதேஸ்வரன், அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தார்.'
விளம்பரம்

'அப்போது இரவு ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் சேஷம்பட்டி அருகே பேருந்தை நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். அப்போது பேருந்தின் ஜன்னல் வழியாகத் தப்பிச் செல்ல முயன்ற நிஷாந்தை அவர்கள் துரிதமாகச் செயல்பட்டுப் பிடித்தனர்.'

'விசாரணையில், அவர் மதுரை தனிஷ்க் நகைக்கடை திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மேல் விசாரணைக்காக அவர்களிடம் நிஷாந்த் ஒப்படைக்கப்பட்டார்' என்று குறிப்பிடப்பட்டது.

"கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு, நிஷாந்த் போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு பயணித்துள்ளார், அப்படி பேருந்தில் பயணிக்கும் போது தான் தருமபுரியில் பிடிபட்டார்" என்று மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.


நிஷாந்துக்கு முன்னதாகவே இந்த வழக்கில், நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் சமூக ஊடகப் பிரபலம் மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மீனாட்சி அளித்த தகவலின்படி, மதுரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தரை கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நிஷாந்திடம் எஞ்சிய நகைகள் மீட்கப்பட்டதாகவும், மொத்தமாக 11.384 கிலோ தங்கம், வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், அவற்றின் மதிப்பு சுமார் 15 கோடி என்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
,


 மீட்கப்பட்ட நகைகள்

நிஷாந்தைப் பிடிக்க 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன எனக் கூறிய அவர், "வெளிமாவட்டங்களிலும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த வழக்கில் ஒரு காவல் துணை ஆணையர், 6 உதவி ஆணையர்கள், 14 முதல் 15 காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர்" என்றார்.

குறிப்பாக, நிஷாந்த் கையில் இருந்த 'டாட்டூ' அவரை அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"இந்தக் கொள்ளையில் நிஷாந்த் மட்டுமே நேரடியாக ஈடுபட்டதாக இதுவரை தெரியவந்துள்ளது" என்று குறிப்பிட்ட காவல் ஆணையர் ராஜேந்திரன், "அவருக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழ அவர் விரும்பியுள்ளார்" என்றார்.

"கைது செய்யப்பட்ட மூவரையும், நீதிமன்றக் காவலிலிருந்து காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, இதில் நகைக்கடை ஊழியர்கள் அல்லது வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா, உதவி செய்துள்ளார்களா என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.


சமூக ஊடகப் பிரபலம் மீனாட்சியின் பங்கு என்ன?



படக்குறிப்பு, தனிஷ்க் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சி, நிஷாந்த்


இது குறித்துப் பேசிய காவல் ஆணையர் ராஜேந்திரன், "தொடக்கக் கட்ட விசாரணையைப் பொறுத்தவரை, நிஷாந்தின் தோழி மீனாட்சிக்கு நிஷாந்த் கொள்ளையடித்தது குறித்து தெரிந்தும் அவர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். திருடப்பட்ட நகைகள் எங்கெங்கு இருந்தன என்பதும் ஓரளவு அவருக்குத் தெரிந்திருந்தது. இதன் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார்." என்றார்.

"மீனாட்சி- நிஷாந்த் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் மூலம் குறிப்பிட்டளவு நகைகளை கண்டுபிடித்தோம்" என்றும் அவர் கூறினார்.

அதேபோல, கொள்ளைச் சம்பவத்திற்கு நிஷாந்த் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மீனாட்சியின் பெயரில் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

நிஷாந்தின் தந்தை சுரேஷின் பங்கு குறித்துப் பேசிய ராஜேந்திரன், "அவரது அப்பாவுக்கும் இது தெரிந்திருக்கிறது. நிஷாந்த் அதிகாலையில் கொள்ளைச் சம்பவத்திற்கு பிறகு தனது தந்தையை அழைத்துள்ளார். அவரும், 'மகன் கொடுத்த பையை கொண்டு போய் வீட்டில் வைத்தேன்' என்று கூறுகிறார். இதுபோன்று அதிகாலையில் மகன் அழைத்து ஒரு பையைக் கொடுக்கும் போது, 'என்ன ஏது' என அவர் கேட்டிருக்கலாம்."

"கொள்ளை குறித்து அவருக்கு எப்போது தெரியவந்தது, நகைகளை மறைப்பதில் அவரது பங்கு என்ன அவரது தரப்பு விளக்கத்தை நாங்கள் இன்னும் முழுமையாகக் கேட்கவில்லை. நீதிமன்றக் காவலிலிருந்து எடுத்து விசாரிக்கும் போது மேலும் தகவல்கள் தெரியவரும்." என்று கூறினார்.

கொள்ளை நடந்தது எப்படி?




மதுரை புறவழிச் சாலையில் அமைந்துள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அன்று காலை சுமார் 9.45 மணிக்கு கடையைத் திறக்க வந்த ஊழியர், முதல் தளத்தில் தங்க வளையல்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். இதையடுத்து, கடை நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

"தீபாவளி பண்டிகைக் காலம் என்பதால் தனிஷ்க் நகைக்கடை அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையில் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதைப் பயன்படுத்தி, குற்றவாளி இக்கொள்ளைச் செயலில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கடையில் 'அலாரம்' இருந்துள்ளது, ஆனால் அது அன்று இரவு அணைத்து வைக்கப்பட்டிருந்தது" என்று கூறினார் காவல் ஆணையர் ராஜேந்திரன்.

"நகைக் கடைகள் இன்னும் அதிகமான சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில், கடைக்குப் பின்புறமும் சிசிடிவி கேமராக்கள் இருந்திருந்தால் குற்றவாளியைப் பிடிப்பது இன்னும் எளிதாக இருந்திருக்கும்" என்றார் அவர்.

இந்தச் சம்பவத்தில் கடையின் பிரதான நுழைவாயிலில் இருந்த பூட்டுகள் உடைக்கப்படாமல் இருந்தன. இதனால், நிஷாந்த் வேறு வழியாகக் கடைக்குள் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறையினர் கடையின் மொட்டை மாடிக்குச் சென்று ஆய்வு செய்தபோது, மின்தூக்கிக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டடப் பகுதியின் காற்றோட்டச் சாளரம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.


படக்குறிப்பு, இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன்

கட்டடத்தின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரக்கட்டின் வழியாக மேலே சென்ற நிஷாந்த், அந்தப் பகுதி வழியாகக் கடைக்குள் நுழைந்துள்ளார் என்றும், முகத்தை மறைத்தபடி அவர் கடைக்குள் நுழைந்து நகைகளை எடுத்துச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

அதேபோல, நவம்பர் 12 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) 15 கிலோ தங்க நகைகளும், 3 கிலோ வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 15 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டது.

மேலும், நவம்பர் 11-ஆம் தேதி இரவு கடை மூடப்பட்டபோது, இருப்புப் பட்டியலில் 3,324 நகைகள் இருந்தன. அவற்றின் மொத்த எடை 40 கிலோ 957 கிராம் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து விளக்கிய காவல் ஆணையர் ராஜேந்திரன், "முதலில் மொத்த நகைகளின் இருப்பைக் கணக்கெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், தோராயமாக 15 முதல் 18 கிலோ நகைகள் என பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடையின் நிர்வாகிகள் ஒவ்வொரு நகையாகக் கணக்கெடுத்துப் பார்த்ததில், இறுதியாக 11.384 கிலோ நகைகள் திருடுபோனது உறுதியானது. அந்த முழு நகைகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளன" என்றார்.

நிஷாந்த் இந்தக் கொள்ளைக்குப் பயன்படுத்திய கருவிகள் இதுவரை முழுமையாக மீட்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட ராஜேந்திரன், "நிஷாந்தின் கைப்பேசியை ஆய்வு செய்து, சமூக வலைதளங்கள் மூலம் கொள்ளைக்கான வழிமுறைகளைக் கற்றுக்கொண்டாரா? கொள்ளைக்குப் பிறகு பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சென்றதற்கான காரணம், யாரிடமாவது உதவி கேட்டாரா? ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!