news@ilakkiyainfo.com

பிரிவுகள்

டெங்கு : 58,810 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 39 ஆக உயர்வு

06 Jul, 2026
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 58,810 ஆகக் காணப்படுவதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 3 ஆம் திகதி டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 58,810 ஆகக் காணப்பட்டது.

கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 12,017 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் 11,740 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாடு தழுவிய ரீதியில் பதிவான மொத்த தொற்றாளர்களில் 40 வீதத்துக்கும் அதிகமானோர் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர்.
மேலும் கண்டறிக


மே மாதத்தில் 8,590 நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை 21,549 ஆக கணிசமாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தின் காரணமாக பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார். 

தற்போது டெங்கு பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, கொழும்பு பார்வை மற்றும் காட்சி கலைகளுக்கான பல்கலைக்கழகம் (University of the Visual and Performing Arts), சுகாதாரப் பிரிவினரின் பரிந்துரைகளின்படி எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், “நாட்டில் தற்போது தேசிய மட்டத்தில் டெங்கு தொற்று அபாயம் நிலவுவதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அதேபோன்று, அதிக அவதானம் மிக்க சில மாவட்டங்களும் பிரதேசங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை இந்த டெங்கு தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகப் பல வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. 

உயர் கல்வி நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக பதிவாகுமாயின், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றை மூட வேண்டியேற்படும். பார்வை மற்றும் காட்சி கலைகளுக்கான பல்கலைக்கழகம் மூடப்பட்டதற்கும் இதுவே காரணமாகும்.மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் விசேட வழிகாட்டல்கள் ஆலோசனைக் கோவையாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
previous post 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!