மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, இந்திய மக்கள் தங்கம் மற்றும் பெற்றோலியப் பொருட்களைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நேற்று (மே 10) தெலுங்கானாவில் நடைபெற்ற வளர்ச்சித் திட்ட விழாவில் உரையாற்றிய அவர், இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களுக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அடுத்த ஓராண்டு காலத்திற்கு அவசியமின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களை அவர் கேட்டுக்கொண்டார். "முன்பு போர் காலங்களில் மக்கள் தங்கத்தைத் தானமாக வழங்கினர், இன்று தானம் தேவையில்லை; ஆனால் தங்கம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழி போதும்" என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். மேலும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்குமாறும், அதற்குத் தீர்வாகத் தனியார் நிறுவனங்கள் மீண்டும் 'Work From Home' முறையைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். மெட்ரோ ரயில் வசதி உள்ள இடங்களில் பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சூரிய சக்தி மற்றும் எத்தனால் கலப்பு போன்ற மாற்று எரிசக்தித் திட்டங்களால் இந்தியா நெருக்கடியைச் சமாளித்து வருவதாகவும், குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி இதன்போது சுட்டிக்காட்டினார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!