news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் வெற்றி

13 May, 2026
தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கூறும் தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

 இதனைதொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று நம்பிக்கை தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். 

இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை சட்டப்பேரவையின் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சட்டபேரவை அரசியல் அமைப்பு நடைமுறையின்படி, முதலில் முதல்வர் ஜோசப் விஜய் தனது அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்யவேண்டும். 

இதன் மீதான அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, தீர்மானத்தைச் சபாநாயகர் வாக்கெடுப்பிற்கு முன்மொழிய வேண்டும். இதில் 'குரல் வாக்கெடுப்பு' நடத்தப்பட்டால், பேரவையில் கூடியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று முழங்கித் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

இதில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை எனில், 'டிவிஷன்' (Division) முறை கடைப்பிடிக்கப்படும். இதற்காகச் சட்டமன்றத்தில் உள்ள ஆறு பிரிவுகளுக்கு ஏற்ப, தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக எழுந்து நின்று தங்கள் வாக்கினைப் பதிவு செய்வர்.

பின்னர், ஒவ்வொரு பிரிவிலும் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கிடப்பட்டுச் சபாநாயகரிடம் வழங்கப்படும்.

இறுதியாக, பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பின், முதல்வர் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாகச் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

அந்த வகையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் டிவிஷன் முறையில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்கப்பட்டது.

அந்த வகையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும், நடுநிலையாக 5 வாக்குகளும் பதிவானது.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

அதிமுகவை சார்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!