2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது, உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானிய மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி மீட்பு நடவடிக்கைகளில் பெரும் அவசரம் காட்டின.
தலிபான் ஆட்சியின் தொடக்கக் காலத்தில், உடனடிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஆளான சுமார் ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் மிக விரைவாக சிறப்பு விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
மேலும் மில்லியன் கணக்கான மக்கள் உயிருக்குப் பயந்து அண்டைய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்குத் தப்பிச் சென்றனர். ஆனால், ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள தற்போதைய சூழலில், சர்வதேச சமூகத்தின் கொள்கை நிலைப்பாடு முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.
ஆப்கானியர்களுக்கு அகதி அந்தஸ்தும் பாதுகாப்பும் வழங்கி வந்த அண்டைய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும், தற்போது அவர்களை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்பும் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு மக்களைத் திருப்பி அனுப்புவதே சிக்கலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் இத்தகைய அகதிகள் வெளியேற்றக் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. இருப்பினும், மக்கள் எந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்து தங்களது தாய்நாட்டை விட்டு வெளியேறினார்களோ, அந்த அடிப்படைப் பிரச்சினைகளும் அரசியல் உறுதியற்ற தன்மையும் ஆப்கானிஸ்தானில் இன்றும் மாறாமல் அப்படியே தொடர்கின்றன என்பதே கசப்பான யதார்த்தமாகும்.
2023 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானியர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குப் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சர்வதேச இடம்பெயர்வு அமைப்பான கலப்பு இடம்பெயர்வு மையம் (Mixed Migration Centre – MMC) நடத்திய விரிவான ஆய்வின்படி, தாய்நாடு திரும்பிய ஆப்கானியர்களில் சுமார் எண்பது சதவீதம் பேர் பாகிஸ்தான் மற்றும் ஈரானிய அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.
அதாவது, அவர்களின் தாய்நாடு திரும்புதல் என்பது சுயவிருப்பத்தின் பேரில் நடந்த ஒன்று அல்ல. மாறாக, அது தீவிர நெருக்குதல், கட்டாயப்படுத்துதல் மற்றும் நேரடி நாடு கடத்தல் ஆகியவற்றின் விளைவாகவே நடந்துள்ளது. இவ்வாறு கட்டாயப்படுத்தி அனுப்பப்படும் மக்கள் தங்களின் பல தசாப்த கால நண்பர்கள், உறவினர்கள், வாழ்வாதாரங்கள், சொத்துக்கள் மற்றும் இத்தனை ஆண்டுகளாகக் கட்டமைத்த சமூகப் பாதுகாப்பு அமைப்புகளைத் துறந்துவிட்டு வெற்றுக்கையோடு திரும்பும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானை வந்தடையும் பெரும்பாலான மக்களுக்கு முறையான உறைவிடமோ, நிலையான வேலையோ அல்லது வாழ்வாதார வாய்ப்புகளோ கிடைப்பதில்லை. இது அவர்கள் தாய்நாட்டில் மீண்டும் ஒருங்கிணைவதில் கடுமையான நெருக்கடிகளை உருவாக்குகிறது.
இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகளும் ஆப்கானியர்களைத் திருப்பி அனுப்புவதற்கான சட்டப்பூர்வ வழிகளை உருவாக்க முற்பட்டு வருகின்றன. பிரஸ்ஸல்ஸ் நகரில் பதினைந்து ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் உறுப்பினர்களுடன் தலிபான் உயர்மட்டக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தைகள், ஐரோப்பாவும் தனது எல்லைகளிலிருந்து ஆப்கானியர்களை வெளியேற்றுவதில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

தீவிரமடையும் மனிதநேயக் காரிருள்
ஒரு நாட்டின் அகதிகள் மீண்டும் தங்களது தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டுமானால், அங்கே சுயவிருப்பம், கண்ணியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய மூன்று அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஆனால், தற்போதைய ஆப்கானிஸ்தானின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் சூழலில் இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். குறிப்பாக, இன மற்றும் மத சிறுபான்மையினர், தலிபான் ஆட்சியை எதிர்ப்பவர்களாகக் கருதப்படுபவர்கள் மற்றும் பல்வேறு ஆபத்தான பின்னணியைக் கொண்ட மக்களுக்குத் தாய்நாடு திரும்புதல் என்பது நேரடியாக ஆபத்தைச் சந்திப்பதற்குச் சமமாகும்.
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு வன்முறைகளின் அளவு சற்றே குறைந்திருந்தாலும், ஆப்கானிஸ்தான் இன்னும் ஒரு சிக்கலான மனிதநேய நெருக்கடியிலேயே சுழல்கிறது. கடந்த பதினெட்டு மாதங்களில் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான முகவர் அமைப்பின் (USAID) செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாலும், சர்வதேச நிவாரண நிதிகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதாலும் ஆப்கானிஸ்தானின் நிலைமை மேலும் சீர்குலைந்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நாடு, ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களை மீண்டும் உள்வாங்குவது என்பது உறைவிடமின்மை, வேலையின்மை மற்றும் பசிப் பட்டினியை மட்டுமே அதிகரிக்கும். தாய்நாடு திரும்பிய ஆண்களில் ஐம்பத்தொன்பது சதவீதம் பேருக்கு மட்டுமே ஏதேனும் ஒரு சிறிய வருமான வாய்ப்பு கிடைக்கிறது, பெண்களின் நிலைமையோ இன்னும் பரிதாபகரமாக உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பும் பெண்கள் எவராலும் விவரிக்க முடியாத அளவிலான கட்டுப்பாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகின்றனர். தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து பெண்களின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன.
பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் உட்பட பெரும்பாலான துறைகளில் பெண்கள் பணியாற்றுவது முடக்கப்பட்டுள்ளது.
ஆண் உறவினர் துணையின்றி பெண்கள் வெளியில் செல்வதோ அல்லது நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. சமூக முடிவெடுக்கும் இடங்களிலிருந்தும் பொது இடங்களிலிருந்தும் பெண்கள் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பெண்களுக்கு நடமாட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதால், அவர்களால் சர்வதேச அமைப்புகளின் நிவாரண உதவிகளையும் பெற முடிவதில்லை. தாய்நாடு திரும்பியவர்களில் ஐம்பத்து மூன்று சதவீதம் பேருக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்றும், அதில் பெண்களின் பங்களிப்பு அறுபத்தைந்து சதவீதம் என்றும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இன மற்றும் மதச் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பாலினம் மற்றும் அடையாள அடிப்படையிலான இரட்டைப் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தாய்நாடு திரும்பிய பெண்களில் பெருமளவிலானோர் தங்களின் தற்போதைய வாழ்க்கையில் கடுமையான விரக்தியடைந்துள்ளனர். பெண்கள் கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் வாழ முடியாத ஒரு சூழலில், மக்களைத் திரும்ப அனுப்புவதை எப்படி ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வி உலகளவில் எழுகிறது.
அமெரிக்காவின் சுயநல இராஜதந்திரமும் கைவிடப்பட்ட வரலாற்றுப் பொறுப்புகளும்அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து அவசர அவசரமாக வெளியேறியதிலிருந்து, வாஷிங்டன் நிர்வாகம் தலிபான்களை ஆப்கானிஸ்தானின் சட்டப்பூர்வ அரசாங்கமாக அங்கீகரிக்கவில்லை.
மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்தையே தான் விரும்புவதாக அமெரிக்கா மேலோட்டமாகக் கூறி வந்தாலும், நடைமுறையில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கைதிகள் பரிமாற்றம் போன்ற குறிப்பிட்ட சுயநலத் தேவைகளுக்காகத் தலிபான்களுடன் வாஷிங்டன் இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
ஜோ பைடன் நிர்வாகத்தின் இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் ஜோர்ஜ் கெல்ஸ்மேன் மற்றும் மஹ்மூத் ஹபீபி ஆகிய அமெரிக்கக் குடிமக்கள் தலிபான்களால் விடுவிக்கப்பட்டனர். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தை என்பது தங்களது குடிமக்களை மீட்கும் நடவடிக்கை மட்டுமே என்றாலும், தலிபான்களைப் பொறுத்தவரையில் இது சர்வதேச சமூகத்தின் தடைகளுக்கு மத்தியிலும் தங்களது அதிகாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் ஒரு வாய்ப்பாகும்.
இதனிடையே, டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆப்கானிஸ்தானுக்கான தனது வெளியுறவு மற்றும் குடிவரவுக் கொள்கையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
பைடன் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டு வந்த பில்லியன் கணக்கிலான சர்வதேச மனிதநேய உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், போரின் போது அமெரிக்கப் படைகளுக்கு உதவிய ஆப்கானியர்களுக்கான சிறப்பு விசா திட்டங்கள், அகதிகள் மீள்குடியேற்ற திட்டங்கள் மற்றும் வெளியுறவுத் துறையின் ஆப்கானிய மறுசீரமைப்பு அலுவலகம் ஆகியவை முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டன.
அமெரிக்க அரசியலில் ஆப்கானிஸ்தான் போர் என்பது ஒரு மறக்கப்பட்ட அத்தியாயமாக மாறியுள்ளது. வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்க சமூகம் எப்படிக் குற்ற உணர்ச்சியினாலும் தோல்வியினாலும் அந்த நினைவுகளைத் தவிர்க்க முயன்றதோ, அதேபோலவே ஆப்கானிஸ்தான் விவகாரமும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலிருந்து படிப்படியாக மறைக்கப்பட்டுவிட்டது.

சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகரும் தலிபான் ஆட்சியும் பிராந்திய அரசியலும்2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பின் போது பெண்களின் உரிமைகளையே முதன்மைப் பிரச்சாரமாகப் பயன்படுத்திய அமெரிக்கா, தலிபான்களுடனான ஒப்பந்தங்களின் போது பெண்கள் உரிமையைக் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது.
இது ஆப்கானியப் பெண்களைப் படுகுழியில் தள்ளியுள்ளது. மறுபுறம், சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்குப் பணியாமல் தலிபான்கள் தங்களது அதிகாரத்தை மெல்ல மெல்ல வலுப்படுத்தி வருகின்றனர்.
சர்வதேசத் தடைகள் தொடர்ந்த போதிலும், ரஷ்யா தலிபான் அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதேபோல இந்தியாவும் தலிபான்களுடன் இராஜதந்திர உறவுகளை வளர்த்து வருகிறது. உலக நாடுகளின் இந்த உத்திசார் மாற்றங்கள் தலிபான் ஆட்சிக்கான அங்கீகாரத்தை மறைமுகமாக அதிகரித்து வருகின்றன.
ஆப்கானியர்களுக்கு அரசியல் கொந்தளிப்பும் மனிதநேய நெருக்கடிகளும் புதிதல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாடு பல்வேறு ஆட்சி மாற்றங்களையும் உள்நாட்டுப் போர்களையும் சந்தித்து வந்துள்ளது.
இன்றைய சூழலில் ஆப்கானிஸ்தானுக்குத் தேவைப்படுவது வெறுமனே மனிதர்களைத் திருப்பி அனுப்பும் அவசர முடிவுகள் அல்ல. மாறாக, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூக மறுசீரமைப்புக்கான நீண்டகால முதலீடுகளே ஆகும்.
ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டும். வெறும் அகதிகள் எண்ணிக்கையைக் குறைப்பதை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், மக்களின் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
ஆப்கானிய அகதிகளுக்கான தீர்வு உத்தியின் கீழ் வரவிருக்கும் பிராந்திய மாநாட்டில், ஆப்கானியர்களைக் கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதைத் தவிர்த்து, பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் நீண்டகால மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து சர்வதேச சமூகம் ஆலோசிக்க வேண்டும். ஆப்கானியர்கள் எப்போது தங்களின் உரிமைகளைப் பாகுபாடின்றி பெற முடிகிறதோ, அப்போது மட்டுமே தாய்நாடு திரும்புதல் என்பது ஒரு உண்மையான தீர்வாக மாற முடியும்.
லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!