ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆவது பூர்த்தி நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. சில ஆங்கில பத்தி எழுத்தாளர்கள் ரணிலின் தலைமைத்துவ போக்குகள் குறித்து விமர்சித்து கட்டுரைகள் வரைந்திருந்தனர். தலைமைத்துவத்திற்கான அதிகார போட்டிகளே கட்சி சிதைவடையக் காரணம் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
டி.எஸ்.சேனாநாயக்கவால் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கழித்து பிறந்தவர் ரணில் விக்கிரமசிங்க. கடந்த 6 ஆம் திகதி தனது எழுபத்து ஏழாவது வயதில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை தலைமையேற்று நடத்தினார்.
இலங்கையை சுதந்திர நாடாக பரிணமிக்கச் செய்தல் மற்றும் சோசலிசத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்துதல் என்ற வேட்கையில் நாட்டின் முதலாவது அரசியல் கட்சியாக லங்கா சமசமாஜ கட்சி உருவாகினாலும், சுதந்திர இலங்கையின் முதலாவது ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சியையே சென்றடைகின்றது.
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் என்ற பெருமையோடு வலம் வந்த சேனாநாயக்க, தனது காலத்தில் கட்சியில் உயர் மேட்டுக்குடி வர்த்தகர்கள், தனவந்தர்கள், சமூக அந்தஸ்து மிக்க கல்வியியலாளர்களை மாத்திரமே உறுப்பினர்களாக இருக்கும் வகையில் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டார்.
1977இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆறில் ஐந்து என்ற பெரும்பான்மையைப் பெற்ற சாதனைக் கட்சியாக ஐ.தே.க. விளங்குகின்றது. அந்த சாதனையை வேறு எந்தக் கட்சியும் இதுவரை முறியடிக்கவில்லை. மொத்தத்தில் அது முதலாளித்துவ கட்சிகளின் தாயகமாக இருந்து வந்தது.

ருவன் விஜேவர்தன
கட்சியின் நிரந்தர தலைவராக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவராக விஜேவர்தன குடும்பத்தின் வாரிசான ருவன் விஜேவர்தனவை ஏற்கெனவே நியமித்து விட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் விளங்கிய ஆர்.பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் தலைமைப் பொறுப்பை விட்டுக்கொடுக்க அவர் எப்போதும் தயாராக இல்லை. தனது மூதாதையர் உருவாக்கிய பாரம்பரிய கட்சியின் தலைமைப் பொறுப்பை வெளி நபர்களுக்கு விட்டுக்கொடுக்காத பிடிவாதக் குணம் ரணிலுக்கு மாத்திரமில்லை. கடும்போக்கு ஜனாதிபதியாக விளங்கிய ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் இருந்தது.

சஜித் பிரேமதாச
தலைமைத்துவத்தை தக்க வைக்கும் பனிப்போர்கள் இன்று வரை கட்சியில் தொடர்கின்றன. கட்சியின் 80 ஆவது பூர்த்தி நிகழ்வானது ஒரு பழமைமிக்க ,பாரம்பரிய கட்சியின் நிகழ்வாக எவரையும் ஈர்த்திருக்கவில்லை. காரணம் ஐக்கிய தேசியக் கட்சி இப்போது ஆளுங் கட்சியுமில்லை எதிர்க்கட்சியுமில்லை.
இரண்டு பொதுத் தேர்தல்களிலும் படுதோல்வியைத் சந்தித்த ஐ.தே.க., 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் எந்த மாவட்டத்திலும் ஓர் இடத்தையேனும் வெல்ல முடியாமல், தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தைப் பெற்றது.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் ஒரே ஒரு ஆசனத்தை அது பெற்றாலும் அவ்வாசனத்துக்குரிய வாக்காளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதை மறுக்க முடியாது.
80 வருட வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை இன்று பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே உறுப்பினர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் என்பதை ஐ.தே.க. ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?
அதுவும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் அரசியல் களத்துக்குக் கொண்டு வர எத்தனிக்கும் சிலருக்கு அது புரிய வேண்டும். அவரே கட்சியின் தலைவராக அதிக காலம் (32 வருடங்கள்) இருக்கின்றார்.
ரணிலுக்குப் பிறகு அக்கட்சியின் தலைவராக ருவன் விஜேவர்தனவே இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், அவர் பிரபலமான அரசியல்வாதி கிடையாது.
மக்கள் மத்தியில் அவருக்கு ஜனரஞ்சகம் இல்லை. கட்சியின் தலைமைத்துவத்தை தக்க வைப்பதில் ஏற்பட்ட பிடிவாதங்களே கட்சியை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றது என்பதை அறிந்தும் ரணில் தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை.
அதற்குக் காரணம் வரலாற்று சம்பவங்கள் தான். கட்சியின் ஸ்தாபகரான டி.எஸ்.சேனாநாயக்கவுக்கும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவுக்குமிடையே உருவான தலைமைத்துவ போராட்டத்தால் பண்டாரநாயக்க பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தார். அதுவே கட்சியின் முதலாவது பிளவு எனலாம்.
1970ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு ஆட்சிய மைத்த போது தோல்வியைத் தழுவிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டட்லி சேனாநாயக்க மற்றும் அப்போதைய பிரதித் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்குமிடையே முரண்கள் வெடித்தன.
இது கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்ற இடம்பெற்ற இரண்டாவது போராட்டம். ஜே.ஆருக்குப் பிறகு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் பிரதமராகவும் விளங்கிய ரணசிங்க பிரேமதாசவுக்கு அப்பொறுப்பு செல்வதை எவராலும் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் இலங்கை– இந்திய ஒப்பந்தம், இந்திய இராணுவத்தினரின் பிரசன்னம் போன்றவற்றுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு வெளியிட்டிருந்த அவர் கணிசமான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக அனுபவித்த ஜே.ஆரும் இதில் தலையிட முடியாத அளவுக்கு வயோதிபத்தை எட்டியிருந்தார்.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் உருவெடுத்தார். ஆனால், மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த ஒருவரின் கரங்களில் கட்சியை தாரை வார்த்துக்கொடுக்க லலித் அத்துலத் முதலி மற்றும் காமினி திசாநாயக்க போன்றவர்கள் விரும்பவில்லை.
மேட்டுக் குடி சிங்களவர்கள் வாழ்ந்து வந்த கறுவாத்தோட்டமா அல்லது பிரேமதாச பிறந்து வளர்ந்த வாழைத்தோட்டமா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை தீர்மானிக்கப்போகின்றது என அக்காலத்தில் எதிர்ப்பார்ப்புகள் நிலவின. லலித் மற்றும் காமினி இருவரும் ஆர்.பிரேமதாசவுக்கு எதிராக கடும் எதிர்ப்புகளையும் சவால்களையும் ஏற்படுத்தினாலும் அதை பிரேமதாச சமயோசிதமாக முறியடித்தார். எனவே காமினி, லலித் ஆகியோர் இணைந்து ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து தாய் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறினர். இது ஐ.தே.க.வில் ஏற்பட்ட இரண்டாவது பிளவாகும்.

ஆர்.பிரேமதாச
குண்டுத்தாக்குதலில் ஆர்.பிரேமதாச கொல்லப்பட்டதும் காபந்து ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க விளங்கினார். கட்சித் தலைமையை ஏற்றாலும் பின்பு 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய நேரத்தில் காமினி திசாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அதன் தலைவராக பொறுப்பேற்றார்.

காமினி திசாநாயக்க
துரதிர்ஷ்டம் அவரை துரத்தியது. அதே ஆண்டு பாலத்துறையில் (தொட்டலங்க) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, குண்டுத் தாக்குதலில் காமினியும் கொல்லப்பட்டார்.
அதன் பிறகே கட்சியின் தலைமைப் பொறுப்பை ரணில் ஏற்றார். அப்போது அவருக்கு வயது45. எனினும் தனது தலைமைத்துவத்துக்கு எதிராக இடம்பெற்ற மூன்று கிளர்ச்சிகளையும் சர்வ சாதாரணமாக கடந்து தனது தலைவர் பொறுப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார் ரணில். அதனால் கட்சி என்ன நிலைக்குச் சென்றாலும் அது குறித்து கரிசனையும் கவலையும் அவருக்கில்லை.
அவர் தலைவராக பொறுப்பேற்ற ஆறு ஆண்டு களில் இடம்பெற்ற மாகாண சபை மற்றும் பொதுத் தேர்தல்களில் (2000) கட்சி படுதோல்வியைத் தழுவி யது. அதன் காரணமாக அப்போது கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் சிந்திக்கத் தொடங்கினர். எனவே 2001ஆம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளர் காமினி அத்துகோரள தலைமையிலான ஒரு குழு உருவாகி கரு ஜயசூரிய அதற்கு தலைவராக வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது.
எனினும் அப்போது சஜித் பிரேமதாச, ரணிலை ஆதரித்தார். அவ்வாண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ரணில் பிரதமரானார். ஜனாதிபதியாக சந்திரிகா விளங்கினாலும் பாராளுமன்ற அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சி வசம் இருந்தது.
2010ஆம் ஆண்டு மஹிந்த இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாவதை தடுக்கும் முகமாக ஐக்கிய தேசியக்கட்சி சரத் பொன்சேக்காவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியது.
அதில் பொன்சேகா தோல்வியைத் தழுவியவுடன் கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை தலைதூக்கியது. சஜித் தனித்து செல்ல விரும்பினார். கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்க தயார் என்றார். எனினும் 2015 ஜனாதிபதித் தேர்தல் வரை உட்கட்சி பூசல்களே இடம்பெற்றன. அவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் –சந்திரிகா இருவரும் வியூகம் வகுத்து மைத்திரியை பொது வேட்பாளராக களமிறக்கி வெற்றி பெறச்செய்தனர்.
ரணில் பிரதமரானார். 2019 இல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்ட சஜித் 2020 இல் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி ஐ.தே.க.விலிருந்து வெளியேறினார். மிகச் சிலரைத் தவிர பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்கள் சஜித்துடன் இணைந்தனர். இது ஐ.தே.க.வை மேலும் பலவீனமாக்கியது.இறுதியாக கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க. மாத்திரமல்லாது தேசிய ஜனநாயக முன்னணி என்ற கட்சியின் தலைவராகவும் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, கிட்டத்தட்ட ஐக்கிய தேசியக் கட்சியை அதன் இறுதி நிலைக்கு கொண்டு வந்து விட்டார் என்றே கூற வேண்டியுள்ளது.
ஐ.தே.க.வின் 80 ஆவது ஆண்டு நிறைவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கலந்து கொள்ளவில்லை. அதேவேளை தனது கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொள்வதை அவர் தடுக்கவும் இல்லை. தனது ஆதரவுத் தளத்தை தக்க வைத்துக்கொள்ளும் நெருக்கடியில் சஜித் இருக்கின்றார். எதிர்க்கட்சி வரிசையில் தற்போது ரணில் – சஜித் இருவருமே தலைமைத்துவத்துக்கு பொருத்தமில்லாதவர்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தாலும் கூட ஐக்கிய தேசியக் கட்சியை தூக்கி நிறுத்த முடியுமா என்பது சந்தேகமே.
சிவலிங்கம் சிவகுமாரன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!