ஒரு பக்கத்தில் மத்திய கிழக்கு பதற்றத்தின் விளைவுகளையும் - இன்னொரு பக்கத்தில், பூகோள மற்றும் பிராந்திய அரசியல் பதற்றத்தின் விளைவுகளையும் - தாங்கிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குள் இலங்கைத் தீவு சிக்கிப் போயிருக்கிறது.தீவுகள் ஆராயுங்கள்
மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய போர் தணிந்து விட்டாலும், அதன் தாக்கங்கள் இன்னமும் இலங்கையை பாதித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்தப் போரின் தொடக்கத்தில், காலிக்கு அண்மையாக- இலங்கையின் கடல் எல்லைக்கு சற்று வெளியே, ஈரானிய போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டேனா அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் டோர்பிடோ தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், ஈரானிய கடற்படை மாலுமிகளையும், சடலங்களையும் மீட்பதற்கு, நடவடிக்கை எடுத்திருந்த இலங்கை, மீட்கப்பட்ட சடலங்கள், மற்றும் மாலுமிகளை ஈரானிடம் ஒப்படைத்திருந்தது.
அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக மோதிக் கொண்டிருந்த சூழலில், இந்த ஒப்படைப்புகள் இடம்பெற்றன.
கைப்பற்றிய ஈரானிய மாலுமிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதேவேளை, ஈரானிய கடற்படையின் விநியோகக் கப்பல் ஒன்று, திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு இன்னமும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஈரானிய மாலுமிகளுக்கு இலங்கை அரசாங்கம் உதவியது அமெரிக்காவுக்கு பிடிக்காத போதும், அதனை தடுக்கவோ இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுக்கவோ முடியவில்லை.தீவுகள் ஆராயுங்கள்
காரணம், அது சர்வதேச கடல் சட்டங்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருந்தது.
அதற்குப் பின்னர், ஈரானின் எண்ணெய் விநியோகத்தை முடக்கும் வகையில், அதன் எண்ணெய்க் கப்பல்களுக்கு அமெரிக்கா தடைகளை விதித்தது.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி ஈரான் தனது சொந்தக் கப்பல்களின் மூலம், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெயை விற்பனை செய்து வந்தது.
அந்தக் கப்பல்களில் பல இப்போது இந்தியப் பெருங்கடலில் நிர்க்கதியாக நிற்கின்றன.
அவற்றில் 20 வரையான கப்பல்கள் இலங்கையை அண்மித்த பகுதிகளில் பல வாரங்களாக நங்கூரமிட்டுள்ளன. அவ்வப்போது, அவை சற்றுத் தூரம் நகர்ந்து சென்றாலும், பெரும்பாலான கப்பல்கள் இன்னமும் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்பை அண்டியே நிலை கொண்டிருக்கின்றன.தீவுகள் ஆராயுங்கள்
அவை அமெரிக்காவினால் தடை செய்யப்பட்டவையாக இருப்பதால், கொழும்பு துறைமுகத்திற்கு வர முடியாது.
அவற்றுக்கான விநியோகங்களைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது.
இந்தக் கப்பல்கள் இலங்கையை அண்டிய கடற்பகுதியில் நங்கூரமிடத் தொடங்கிய போதே, இவற்றுக்கு விநியோகங்களை வழங்குவது தடைகளை மீறிய செயலாக கருதப்படும் என்றும், சர்வதேச தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அமெரிக்கத் தரப்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஆனாலும், உள்ளூர் நிறுவனங்கள் மூலமாக, ஈரானிய கப்பல்களுக்கு விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சில தகவல்கள் கசிந்த நிலையில், அமெரிக்கத் தரப்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், அரசாங்கம் தாம் எந்த வியோகங்களையும் மேற்கொள்ளவில்லை என்று, அமெரிக்காவுக்கு உறுதி அளித்திருந்தது. அத்துடன், கடற்படையின் கண்காணிப்பை அதிகரித்திருப்பதாகவும் கூறியது.
இலங்கையும் ஈரானும் பாரம்பரியமான நட்பு நாடுகள்.மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் போரை நடத்திக் கொண்டிருந்த போது, டொலர் பற்றாக்குறையால் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.அந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு ஈரான், எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக பெருமளவு கடனை வழங்கியது.
அந்தக் கடன் வழங்கப்பட்டிருக்காது போனால், போர் நிறுத்தப்பட வேண்டிய நிலை கூட ஏற்பட்டிருக்கலாம்.
அப்படிப்பட்ட நிலையில் இருந்த உறவுகளுக்கு அமெரிக்க-–ஈரான் முரண்பாடுகள், சவாலாக மாறியுள்ளது.
இலங்கைக்கு அண்மையில் தரித்து நிற்கும் ஈரானிய கப்பல்களை வெளியேறுமாறு கேட்க முடியாத நிலை இலங்கைக்கு உள்ளது.
அவை இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை என்பது ஒரு காரணம்.ஈரானுடன் உள்ள பாரம்பரிய உறவுகள் இன்னொரு காரணம்.அதேவேளை, இலங்கையை அண்டிய பகுதியில் அவை தரித்திருப்பது, இந்த முரண்பாடுகளின் ஓர் அங்கமாக இலங்கையை மாற்றியிருக்கிறது.தீவுகள் ஆராயுங்கள்
தேவையின்றி அமெரிக்க-– ஈரான் மோதல்களுக்குள் இலங்கை இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு அருகே உள்ள நிலையில், அவற்றுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் அனைத்துக்கும் இலங்கையே பொறுப்பேற்க வேண்டி யிருக்கும்.
இப்போது போர் இல்லாத சூழலில், அந்தக் கப்பல்கள் தாக்கப்படும் ஆபத்துகள் இல்லை. ஆனால், அது நிரந்தரமானதெனக் கருத முடியாது.
அதேவேளை, ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்படுவது, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
இந்த ஈரானியக் கப்பல்கள் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் இருப்பதால், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தங்களின் ரோந்துக் கப்பல்கள் மற்றும் உளவு விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது.
அமெரிக்காவின் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளுக்கு அஞ்சி, இந்தக் கப்பல்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் அல்லது எரிபொருளை விநியோகிக்க இலங்கைத் துறைமுக அதிகாரிகளும் உள்ளூர் முகவர்களும் மறுத்துள்ளனர்.
சர்வதேச கடற்பரப்பில், வணிக கப்பல்களை பல மாதங்கள் மட்டுமன்றி ஆண்டுக்கணக்கில் கூட ஒரே இடத்தில் நகராமல் நிறுத்தி வைக்கலாம்.

ஆனால், கப்பலின் கையிருப்பு தீரும் வரை மட்டுமே ஈரானிய மாலுமிகளால் அங்கு தங்கியிருக்க முடியும்.
சூழ்நிலைகளைப் பொறுத்து கப்பல்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதற்கு இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன.
ஒன்று, சூடான நிறுத்தம் (Hot Lay-up) எனப்படும்.
இதன்படி, கப்பல்கள் 6 மாதங்கள் வரை நிறுத்தப்படும்.
ஆனால் கப்பலின் இயந்திரம் மற்றும் முக்கிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கும்.
இதன் மூலம், கப்பலை சில நாட்களிலேயே மீண்டும் பயணத்திற்கு தயார் செய்து விடலாம்.
இன்னொன்று, குளிர்ந்த நிறுத்தம் (Cold Lay-up) எனப்படும். இதன்படி, கப்பல்கள் பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் நிறுத்தப்படும்.
செலவைக் குறைப்பதற்காக இயந்திரங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு, மிகக் குறைந்த மாலுமிகள் மட்டும் பாதுகாப்பிற்காக இருப்பார்கள்.
அதேவேளை, கப்பல்கள் ஒரே இடத்தில் பல வாரங்கள் நகராமல் நின்றால், அதன் அடிப்பகுதியில் பாசிகள், சிப்பிகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் ஒட்டிக்கொள்ளும். இதனால் கப்பலின் வேகம் குறைவதுடன், இயந்திரமும் சேதமடையும்.
அதைவிட, கடல் சீற்றம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது ஒரே இடத்தில் நிற்கும் கப்பல்கள் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் அதிகம்.
அதைவிட, நங்கூரம் நழுவினால் பிற கப்பல்களுடன் மோதும் அபாயமும் உள்ளது.
கப்பலில் இருக்கும் மாலுமிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் இருப்பு இருக்கும் வரை மட்டுமே, ஒரு கப்பல் கடலில் நிற்க முடியும்.
அதன் பின்னர், கப்பலில் உள்ள மாலுமிகள் வெளியேற நேரிடும். அப்போது கப்பல் கைவிடப்படலாம். ஒரு கப்பல் கைவிடப்படுவது பிரச்சினையல்ல.
பல கப்பல்கள் கைவிடப்படும் போது, அவை மூழ்கினாலோ வேறு பிரச்சினைகளில் சிக்கினாலோ, அதனைக் கண்காணிக்க, மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டியது இலங்கைக்குரிய பொறுப்பாக இருக்கும்.
இதனால் இலங்கையின் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்புகள் ஏற்படும். கடல் மாசு அடையும்.தீவுகள் ஆராயுங்கள்
இப்படிப் பல பிரச்சினைகளை வரும் மாதங்களில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.
இந்தச் சூழலில், கடந்த 24ஆம் திகதி ஆழ்கடலில் தரித்து நின்ற ஈரானிய கப்பல்களில் இருந்த 40 மாலுமிகள் இலங்கை கடற்படையின் இரண்டு படகுகளில் ஏற்றி வரப்பட்டு, கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மறுநாள் தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.தீவுகள் ஆராயுங்கள்
இதற்கான செலவினங்கள் ஈரானிய தூதரகத்தினால் பொறுப்பேற்கப்பட்டதாகவும், இது முற்றிலும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்றும் அரசாங்கம் கூறியிருந்தது.
ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு சவாலான நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது.
அமெரிக்காவின் தடைகளை மீறுவதற்கே ஈரான் முற்படுகிறது.
ஈரானிய கப்பல்களை முடக்குவதற்கே அமெரிக்கா முற்படுகிறது. இந்த இரண்டு தரப்புகளையும் சமாளித்துக் கொண்டு, இந்த விவகாரங்களை கையாள வேண்டிய நிலையில் இலங்கை இருக்கிறது.
தவிர்க்க முடியாத இந்த புவிசார் அரசியல் போட்டிகளுக்குள் இலங்கைத் தீவு சிக்கிக் கொண்டதால், இவ்வாறான பல சவால்களும், சிக்கல்களும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கும்
.ஹரிகரன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!