news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தாய் கொலை, தந்தை காயம்: வீடு புகுந்து தாக்கிவிட்டு இரு மகள்களை கடத்தியதாக இளைஞர் கைது - என்ன நடந்தது?

23 Oct, 2026
தாய் கொலை, தந்தை காயம்: வீடு புகுந்து தாக்கிவிட்டு இரு மகள்களை கடத்தியதாக இளைஞர் கைது - என்ன நடந்தது?


எச்சரிக்கை: இந்தக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

சாத்தான்குளம் அருகே 15 வயது சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியதில் சிறுமியின் தாய் உயிரிழந்தார். சிறுமியின் தந்தை மற்றும் 12 வயது தம்பி பலத்த காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, 15 வயது சிறுமியையும் அவரது தங்கையையும் மிரட்டி இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இளைஞரை அடுத்த சில மணி நேரத்தில் தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.

என்ன நடந்தது?


மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (43). இவரது மனைவி மேரி விஜிலா (39). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இன்று (23-10-2026) அதிகாலை இவர்களது வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், குடும்பத்தினர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் 12 வயது மகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது இரண்டு பெண் குழந்தைகளையும் காணவில்லை.

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் நடத்திய தேடுதலில், அடுத்த சில மணி நேரத்தில் இரு சிறுமிகளும் ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்டிருந்த அறையில் இருந்து மீட்கப்பட்டனர். பின்னர், அவர்கள் சிகிச்சைக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஞானபிரகாஷ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


'15 வயது சிறுமிக்குத் தொல்லை'

இதுகுறித்து பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், "கைது செய்யப்பட்ட ஞானபிரகாஷ் முதலூர் கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாகத் தெரிவித்தார். 

அதே பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் 15 வயது மகளுக்கு இவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும், ஞானபிரகாஷ் தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து சிறுமிக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், அக்டோபர் 22ஆம் தேதி நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்குச் சென்ற ஞானபிரகாஷ், தூங்கிக் கொண்டிருந்த முத்துகிருஷ்ணனின் குடும்பத்தினரை தாக்கியுள்ளார்.

இதில் சிறுமியின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சிறுமியின் தந்தை மற்றும் அவரது 12 வயது மகன் பலத்த காயமடைந்தனர். பின்னர், அங்கிருந்த 15 வயது சிறுமியையும் அவரது தங்கையையும் மிரட்டிய ஞானபிரகாஷ், இருவரையும் தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார். 

இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சாத்தான்குளம் காவல்துறையினர், படுகாயமடைந்த சிறுமியின் தந்தை மற்றும் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சிறுமிகள் இருவரையும் கடத்திச் சென்ற ஞானபிரகாஷைப் பிடிப்பதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.


'ஒரு மணி நேரத்திற்குள் சிறுமிகள் மீட்பு'
 



ஒரு மணி நேரத்திற்குள் ஞானபிரகாஷின் வீட்டில் இருந்து சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

தொடர்ந்து பேசிய காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், ஆனந்தபுரம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, பூட்டப்பட்டிருந்த அறையில் இருந்து இரு சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

காவல்துறையினர் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கையால், சிறுமிகள் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் ஞானபிரகாஷின் வீட்டில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டதாக அவர் கூறினார். அப்பகுதியில் தீவிரத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த ஞானபிரகாஷைக் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சிவபிரசாத், இந்தச் சம்பவம் தொடர்பாக ஞானபிரகாஷ் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் சிறுமிகளைக் கடத்திச் சென்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பரோட்டா வாங்கச் சென்றபோது ஏற்பட்ட பழக்கம்




தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்


"இனிமேல் இதுபோன்ற சம்பவம் எங்கள் கிராமத்தில் நடக்கக்கூடாது," என்கிறார் உயிரிழந்த மேரி விஜிலாவின் உறவினர் இசக்கி.

இதுகுறித்து  பேசிய அவர், "எங்கள் ஊரில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தவர் ஞானபிரகாஷ். என் அக்கா மகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்ததும் அவரை அழைத்து, இதனை தொடர்ந்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்போம் என எச்சரித்தோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை."

"கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஞானபிரகாஷை இதுகுறித்து சிறுமியின் தந்தை கடுமையாக எச்சரித்தார். இந்த நிலையில்தான், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அவர் தாக்கியுள்ளார். இதில் என் அக்கா மேரி விஜிலா உயிரிழந்துவிட்டார். இனிமேல் இதுபோன்ற சம்பவம் எங்கள் கிராமத்தில் நடக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் தரப்பை தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம், தகவல் கிடைத்ததும் இந்த கட்டுரையில் அது சேர்க்கப்படும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!