-அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது, ரூ.100 கோடி புகார்
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்த சில மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து சென்றுள்ளனர்
அங்கு அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேற்கொள்வார்கள்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில் ஏற்கனவே அரசக்குமார் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது?
இந்த வழக்கில் பி.என்.எஸ் சட்டப் பிரிவு 316(5), 318(4) மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக லைவ் லா செய்தி ( Live law ) குறிப்பிட்டுள்ளது.
பின்னர், ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 12 ஆகிய பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டன.
அன்பில் மகேஸை வழக்கில் சேர்த்ததற்கான அடிப்படை மற்றும் விசாரணைக்குத் தேவையான முன்அனுமதி தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. வில்சன், செப்டம்பர் 18ஆம் தேதி காவல்துறை அழைப்பாணையை ஏற்று அன்பில் மகேஸ் விசாரணைக்கு ஆஜரானதாகத் தெரிவித்தார்.
அப்போது சுமார் எட்டு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 240 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைத்ததாகவும் வாதிடப்பட்டதாக லைவ் லா செய்தி தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் திருச்சியில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அன்பில் மகேஸ் தலைமறைவாக மாட்டார், சாட்சிகளைக் கலைக்க மாட்டார், தேவைப்படும் போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக உள்ளார் என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்." என அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதாகவும், பணப் பரிவர்த்தனைகள் குறித்து மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
விசாரணையில் முறைகேட்டுத் தொகை ரூ.400 கோடி வரை இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் முன்வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி (இன்று) முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது." என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்பில் மகேஸ் தரப்பு கூறுவது என்ன?
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஸ் தரப்பு நீதிமன்றத்தில் மறுத்துள்ளது.
அவரது தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின்படி, அவர் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதற்கான ஆவணங்களோ, முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டதற்கான ஆதாரங்களோ இல்லை என்று தெரிவித்துள்ளதால லைவ் லா செய்தி தெரிவித்துள்ளது.
சிலர் அவரது பெயரைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரைக் குற்றம்சாட்ட முடியாது என்பதும் அவரது தரப்பு வாதமாக முன் வைத்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் பின்னணியில் இந்தப் புகார் அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக" லைவ் லா செய்து குறிப்பிட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசை கடுமையாக கண்டிப்பதாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஸை கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அரசகுமார், பதிவு செய்யப்படாத 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற அமைப்பின் பெயரில் செயல்பட்டு, அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தி பள்ளிகளுக்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியிருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்த தகவலின்படி, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அன்பில் மகேஸின் பெயர் எப்படி வந்தது?அரசகுமார் தொடர்பான விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், கைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கிடைத்த தகவல்கள் மற்றும் அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் கூற்றுப்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பேசிய அவர், "மடியில் கனம் இல்லை" என்று கூறியதுடன், இந்தச் சோதனையால் தாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!