news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தீபாவளித் திருநாளில் சோகம்: இளைஞர் குத்திக்கொலை; சந்தேக நபர் கைது

09 Nov, 2026
தீபாவளித் திருநாளைக் கொண்டாடிய மகிழ்ச்சி சோகமாக மாறியுள்ளது. தீபாவளி தினத்தன்று (08) மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நல்லத்தண்ணிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீபாவளித் தினத்தன்று (08) இரவு 11:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், நல்லத்தண்ணிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தேயிலைத் தோட்டத்தின் புதுக்காடு பிரிவு, இலக்கம் 05 வத்து குடியிருப்பைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெயகுமார் செல்வகுமார் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

ஒன்றாக மது அருந்தியபோது இருவருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்குள்ளான இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவர் வசித்த அதே குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ராமன் விஜயகவி என்பவரைச் சம்பவம் நடந்த அன்றிரவே நல்லத்தண்ணிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை கிளங்கன்-டிக்கோயா ஆதார  வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது. சம்பவம் குறித்து நல்லத்தண்ணிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!